June 7, 2016

தீவிர கண்காணிப்பில் வியாங்கொட ஆயுத களஞ்சியம்!

கொஸ்கம – சலாவ இராணுவ ஆயுதக்கிடங்கில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து,
வியாங்கொடவில் உள்ள மத்திய ஆயுத மற்றும் வெடிபொருள் களஞ்சியத்தின் தரத்தை சிறிலங்கா இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் நேற்று பரிசோதித்தனர்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலி்ந்த பீரிஸ் நேற்று வியாங்கொட ஆயுதக் களஞ்சியப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்ததுடன், அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைகளை செய்துள்ளார்.

வியாங்கொடவில் உள்ள முன்னைய வேரெக்ஸ் ஆடை நிறுவனச் சுற்றாடலில் அமைந்துள்ள, மத்திய ஆயுத மற்றும் வெடிபொருள் களஞ்சியததில் சுமார் 15ஆயிரம் தொன் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

எனினும், சலாவ உப ஆயுதக் கிடங்கில் பேணப்பட்டதை விட மோசமான தரத்திலேயே இந்த மத்திய ஆயுத, வெடிபொருள் களஞ்சியம் இருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனைச் சுற்றி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

எனினும், ஆயுதக் கிடங்குகள் அனைத்தும் உரிய தரத்துடனேயே பராமரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

உரிய தரத்துடன் பேணப்பட்டதால் தான், சலாவ உப வெடிபொருள் கிடங்கில் விபத்து ஏற்பட்டபோது, சேதங்கள் குறைவாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுப்பலகை கூட்டுத்தாபனத்தின் முன்னைய கட்டடம், வெடிபொருள் சேமிப்புக் கிடங்காக பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த பிரிகேடியர் ஜெயவீர, இராணுவத்துக்குத் தேவையான வகையில் கட்டட வளாகம் மீளக்கட்டியெழுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment