June 2, 2016

மட்டு மக்களின் அவலம்!

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தது போன்று, காட்டு யானைகளுக்கு பயந்து இடம்பெயரும் நிலை ஏற்படும் என மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேச மக்கள் தமது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லைகளும் அட்டகாசங்களும் அடாவடித்தனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

எல்லையோரக் கிராமங்களான பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை, நெல்லிக்காடு 35ஆம், 37ஆம், 38ஆம், 39ஆம், 40ஆம் கிராமங்கள், விவேகானந்தபுரம், திக்கோடை தும்பங்கேணி, இளைஞர் விவசாயத் திட்டம், களுமுந்தன்வெளி, புன்னக்குளம்,

சுரவணையடியூற்று, வெல்லாவெளி, விவேகானந்தபுரம், ராணமடு, சின்னவத்தை, தாந்தாமலை, கச்சக்கொடிச் சுவாமிமலை, நெல்லிக்காடு, புல்லுமலை, பாவக்கொடிச்சோனை, கண்டியனாறு, 8 ஆம் கட்டை, கரடியனாறு போன்ற பல கிராமங்களிலே யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, வாகரை, கிரான் போன்ற பல பிரிவுகளில் மக்கள் செறிந்து வாழ்கின்றனர்.

விவசாயத்தையும் கால்நடை வளர்ப்புக்களையும் பிரதான தொழிலாகக் கொண்டுள்ள இப்பிரதேச மக்கள், வீட்டுத் தோட்டம், கைத்தொழில், கோழிவளர்ப்பு, செங்கல் வெட்டுதல், கூலிவேலை செய்தல் போன்ற இதர தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தமது கிராமத்தில் இருந்து சுமார் 10 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்து பல இடங்களில் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்ட அப்பகுதி மக்கள்,



இறுதியாக கடந்த 2007 ஆம் ஆண்டு மீளக் குடியமர்ந்துள்ளதாகவும் தமது சகல உடைமைகளையும் இழந்துள்ள நிலையில், தற்போது காட்டு யானைகள் தமது வீடுகளை இரவு பகலுமாக உடைத்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை தமது பகுதியில் 5 பேரை காட்டு யானைகள் அடித்துக் கொன்றுள்ளதாகவும் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக உடைக்கப்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யுத்தத்தினால் துன்பப்பட்ட தாங்கள் தற்போது காட்டு யானைகளினால் துன்பப்பட்டு வருவதாகவும் இந்த நிலை தொடருமாக இருந்தால் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் கண்ணீருடன்  எமது செய்திப் பிரிவுக்கு அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

எனவே தமது நிலையைக் கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உரிய வேலைத் திட்டத்தை கால நேரம் பாராமல் மிக விரைவில் அமுல்படுத்த வேண்டும் என்பதையே அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.






No comments:

Post a Comment