June 6, 2016

புதிய அரசமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு! இரா.சம்பந்தன் வலியுறுத்தல்!

புதிய அரசமைப்பின் ஊடாகக் கிடைக்கும் தீர்வு எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு அவர்களின் போராட்டங்களுக்கு, நியாயமான, நிரந்தரமான தீர்வாக அமையவேண்டும்.


அவ்வாறு அமையாது விட்டால் அது ஒரு தீர்வாக அமைய முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை கிளை அலுவலகத்தின் ஓராண்டு பூர்த்தியும், கல்வி பொது தராதர உயர்தர சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் வட்டுக்கோட்டையில் நேற்று மாலை இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மீள்குடியேற்றம், பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றுக்கான துணைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் இதற்குத் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,

"அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் சார்பிலும் தமிழ் பேசும் மக்கள் சார்பிலும் ஒரு கொள்கையை வளர்த்து வருகின்றது.

நாங்கள் ஓர் இனம். தனித்துவமான இனம். ஒரு தனித்தேசிய இனம். நாங்கள் இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில், வடக்கு - கிழக்கில் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்துள்ளோம். வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.

அதனடிப்படையில் எமக்குச் சுயநிர்ணய உரிமைக்கு உரித்து உண்டு. அது அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அம்சங்களை உள்ளடக்குகின்ற ஒரு அரசியல் தீர்வு, ஒரு அரசியலமைப்பு இந்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.

இது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தந்தை செல்வாவினுடைய கொள்கையாக நீண்ட காலம் இருந்து வருகின்றது.

அதை நாங்கள் எல்லோரும் அறிவோம். இந்த அடிப்படையில் தான் எமது மக்கள் தேர்தல்கள் வரும்போது வாக்களிக்கின்றனர்.

ஜனநாயக ரீதியாக அவர்கள் தங்களது வாக்குரிமையை இதற்காகத்தான் பயன்படுத்துகின்றார்கள். தற்போது வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளில் ஏறத்தாழ 85 வீதமானவர்களை ஒரு குறிப்பிட்ட கொள்கையின் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதனுடைய விளக்கம் என்ன?

நாம் இன்று ஒருமித்த ஒரு நாட்டினுள், நாட்டுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படாமல், நாம் பாதுகாப்பாக வாழக்கூடிய, எமது நிலம் பாதுகாப்பாக இருக்ககூடிய எமது நியாயபூர்வமான அபிலாஷைகள் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக இவற்றை நாங்கள் நிறைவேற்றி பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையில் நாங்களும் பங்காளிகளாக அந்த இறைமையின் அதிகாரங்களை நாங்களும் பயன்படுத்தக்கூடிய ஒரு முறையிலான அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்று கேட்கின்றோம்.

இதைத்தான் நாங்கள் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு முன்னால் வைத்தோம். அந்த நிலைப்பாட்டுக்குக் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 85 வீதமான தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.



தமிழ் மக்களுக்கு திருப்தி அளிக்ககூடிய ஒரு அரசியல் தீர்வு ஏற்படுவதாக இருந்தால் மக்களுடைய வாக்களிப்பின் அடிப்படையில் மக்களுடைய ஜனநாயக உரிமையை பிரயோகித்து மக்கள் வழங்கிய தீர்வின் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு வரவேண்டியது அத்தியாவசியமானது.

நாங்கள் இந்த நாட்டில் தற்போது ஒரு முக்கியமான நேரத்தில் வாழ்ந்து வருகின்றோம். ஒரு அரசியல் தீர்வு எமக்கு மாத்திரம் தேவை அல்ல.

நாட்டில் வாழ்கின்ற எல்லோருக்கும் தேவையான ஒரு விடயம். இந்த நாட்டுக்குத் தேவையான விடயம். ஆனபடியால் அவ்விதமான ஒரு அரசியல் தீர்வு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இந்தத் தீர்வுக்காக நாங்கள் மிகவும் விசுவாசமாக உழைப்போம். ஆனால், அந்தத் தீர்வு எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு, அவர்களுடைய போராட்டங்களுக்கு நியாயமான நிரந்தரமான தீர்வாக அமைய வேண்டும்.

அவ்வாறு அமையாது விட்டால் அது ஒரு தீர்வாக அமைய முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக இந்த வைபவத்தில் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்ட விடயம், இம்மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் திறமையாகச் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்வதை நாங்கள் பாராட்டுகின்றோம்.

இன்றைக்கு தமிழ் மாணவர்கள் கல்வியில் பின் தங்கிய ஒரு நிலையில் உள்ளார்கள் என்று ஒரு கருத்துள்ளது.

எமது பிரதேசங்களில் 30 வருட காலமாகப் போர் நடைபெற்றது. நிச்சயமாக அந்தப் போரின் காரணமாக எம்முடைய கல்வியில் பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம்.

அதை நாங்கள் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். ஆனால், அந்த நிலைமை தொடரக்கூடாது. நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்றைக்கு அந்த மாணவர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சி கிளை, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இந்தக் கருமத்தில் கூடிய கவனம் எடுத்து இதை நிறைவேற்றியுள்ளார்.

அது வரவேற்கத்தக்கது. இவ்விதமான உற்சாகம், தூண்டுதல் எமது மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

நீண்டகாலமாக எமது மக்கள் பலவிதமான துன்பங்களையும் துயரங்களையும் எதிர்நோக்கி பலவிதமான இழப்புக்களை எதிர்நோக்கி வந்துள்ளார்கள்.

இந்நிலைமை தொடர முடியாது. இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தாங்கள் ஒருபோதும் மாறமாட்டோம், தங்களை எவராலும் மாற்ற முடியாது என்ற நம்பிக்கையில் செயற்பட்ட வந்தார்கள்.

இவ்விதமான ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதுதான் ஜனநாயகத்தின் சக்தி.

ஜனநாயக ரீதியாக எவ்விதமான புரட்சியும் இல்லாமல் ஒரு அமைதியான புரட்சி ஏற்பட்டு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது.

நாங்கள் திருப்தி அடைகின்றோம். ஏன் என்றால் பழைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தற்போது இடம்பெறவில்லை.

ஆனால், இது எமது பிரச்சினைக்கு ஒரு முடிவல்ல. எமது பிரச்சினைக்கு ஒரு முடிவு வர வேண்டும். எமது பிரச்சினைக்கு ஒரு நியாயமான நிரந்தரமான முடிவு அரசமைப்பின் ஊடாகக் கிடைக்கப் பெறவேண்டும்.

எமது மக்கள் பாதுகாப்பாக, கெளரவமாக சுயமரியாதையுடன் வாழும் ஒரு நிலை உருவாகவேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், மக்களுடைய பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. பல பிரச்சினைகள் தீர்க்க வேண்டியுள்ளது.

தீர்க்கப்படும் என அரசு உறுதி அளிக்கின்றது. ஆனால், அவை நிறைவேற்றபட வேண்டும். அதேசமயத்தில் அரசியல் தீர்வை காண்பதற்கு அரசமைப்பை உருவாக்குகின்ற முயற்சி ஒழுங்காக இடம்பெற்று அதை அடைவதற்கு எல்லோரும் ஒத்துழைத்து நல்ல முடிவுக்கு நாங்கள் வரவேண்டும்.

எங்களுடைய ஒற்றுமையை நாங்கள் பாதுகாத்துக் கொள்வது அத்தியாவசியம். இந்த நேரத்தில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒன்றாக நிற்க வேண்டியது அத்தியாவசியம்.

அவ்விதமாக ஒற்றுமையாக ஒருமித்து நின்றால் அது எமக்குப் பலம். இன்று சர்வதேச சமூகமும் அதையே விரும்புகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment