June 28, 2016

இன்றைய சர்வதேச அரசியல் பொருளாதார அதிர்வுகளை 1986 இலேயே எதிர்வு கூறிய விடுதலைப்புலிகள்

1986ம் ஆண்டு இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் - அது பனிப்போர் காலம் - முதலாளிய சனநாயகம் என்று மேற்குலகமும் சோசலிசம் என்று சோவித் யூனியன் தலைமையில் கிழக்குலகமும் பொருந்தி கொண்டிருந்த காலம்.


தம் இறைமைக்காக போராடியவர்கள் பலரும் சோசலிசவாதிகள் என அடையாளம் காணப்பட்டதும் இரு பகுதியில் ஒருவரின் ஆதரவைப் பெற்றே விடுதலைப் போராட்ட களங்கள் நகர்ந்த காலம் அது.

இவ்விரு பகுதியினரையும் கடந்து அணிசேராக் கொள்ளை கொண்ட கூட்டமைப்பை நகர்த்த தொடர்ந்தும் முனைப்புக்கள் அதிகரித்திருந்த காலமும் கூட. இச்சிந்தனைக்கு வடிவம் கொடுத்தவர்கள் யூகோசெலவாக்கியாவின் டிட்டோ, இந்தியாவின் நேரு, இந்தோனேசியாவின் சுகாணோ ஈகிப்தின் நாசர் ஆகியோர் இவ்வாறான காலப்பகுதியில் தான் ஈழவிடுதலைப்போரும் வீச்சாகிறது. உலகத்தின் கவனத்திற்கு வருகிறது.

அதிலும் விடுதலைப்புலிகள் என்ற விடுதலை இயக்கம் தமிழரின் தலைமை சக்தியாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது. இவர்கள் யார்? இவர்கள் எந்தத்தரப்பைச் சார்ந்தவர்கள்? அல்லது ஆதரவைப் பெற்றவர்கள்? இவர்களின் கொள்கை என்ன? என்ற வாதப்பிரதிவாதங்களும் அதிகரித்திருந்த காலம் அது.

இக்கேள்விகளுக்கான சரியான பதில்கள் அல்லது தெளிவான பார்வை இன்றுவரை தமிழர்களிடமே கிடையாது என்பதே யதார்த்தமான உண்மை. விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் விடுதலை இயக்கங்கள் அதிகமாக சோசலிசத்தையும் அதன் பின்புல ஆதரவையும் வெளிப்படையாக நாடி நின்றமை அதே போன்ற தோற்றப்பாட்டை விடுதலைப்புலிகள் மீதும் ஏற்படுத்தியிருந்தமை தவிர்க்க முடியாத களச்சூழலாக அமைந்தது.

சரி உண்மைதான் என்ன? மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள் தான் என்ன? விடைகளைத்தாங்கி வந்தது. 1986 நவம்பர் வெளிவந்த விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான விடுதலைப்புலிகள். அதில் பின்வருமாறு அமைந்தது ஆசிரியத் தலையங்கம்.

'சனநாயகம் என்றால் என்ன? சோசலிசம் என்றால் என்ன? இந்த இரண்டு அரசியல் கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாணவையா? இக் கோட்பாடுகள் இரு முரண்பாடான அரசியல் அமைப்புக்களை குறித்து நிற்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் காண்பதுடன் எமது அரசியல் நிலைப்பாட்டையும் இங்கு எடுத்து விளக்க விரும்புகின்றோம்."

இவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திய விடுதலைப் புலிகளின் ஆசியத்தலையங்கம் சனநாயகம் குறித்தும் சோசலிசம் குறித்தும் தனது ஆழமான பார்வையை அடுத்து வைக்கிறது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்த காலத்தில் இப்பார்வை மிகமுக்கியமானது. அன்று இது பலருக்கும் புரியவில்லை என்பதே உண்மை, ஆனால் இன்றைய யதார்த்த புறநிலையில் விளங்கிக் கொள்வது சற்று இலகு. முடியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் வாசியுங்கள் புரியும்.

'சனநாயகமும் சோசலிசமும் இரு முரண்பட்ட அரசியல் இலட்சியங்களை குறித்து நிற்பதாக பலர் கருதக்கூடும். இது தவறான கண்ணோட்டமாகும். மூல அர்த்தத்தில் இக்கோட்பாடுகள் முரண்பட்டவையல்ல. மாறாக இவை சமூக நீதியையும் தர்மத்தையும் தழுவிக் கொள்ளும் ஒரு அரசியல் சமுதாயத்தை குறிக்கின்றன.

இந்த சமுதாயத்தில் தமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமையும் அதிகாரமும் மக்களுக்கு உண்டு என்பதை இக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன.

அப்படியிருக்கும் பொழுது இந்த தவறான கண்ணோட்டம் எவ்விதம் தோற்றம் கொண்டது? இந்த அரசியல் கோட்பாடுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக கொள்ளப்படுவது ஏன்?

மேற்கத்தைய முதலாளித்துவ உலகில் சனநாயகம் என்ற போர்வையில் ஒரு அரசியல் அமைப்பு நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதேவேளை கம்மியூனிச உலகில் சோசலிசம் என்ற கருத்துருவில் ஒரு அரசியல் முறை செயலாகிறது.

இவ்விதம் இந்த இரு உலகிலும் செயற்படுத்தப்பட்டு வரும் அரசியல் வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்விரு கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணானவை என்ற தவறான கண்ணோட்டம் எழுந்திருக்கலாம்.

இதுபற்றி சற்று விரிவாக பார்ப்போம்.



கிரேக்க மொழியின் மூல அர்த்தத்தில் சனநாயகம் என்ற சொல் மக்கள் களத்திலிருந்து பிரவாகமெடுக்கும் அரச அதிகாரத்தை அதாவது மக்கள் ஆட்சியை குறிக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான நீண்ட அரசியல் வரலாற்றுப் பயணத்தில் இந்தக் கோட்பாடானது பல அர்த்த பரிணாமங்களை கொண்டதாக செழுமை பெற்றுள்ளது. இக் கோட்பாட்டின் அடிப்படையில் மேற்கத்தைய முதலாளிய சமூகங்களில் ஒரு திட்டவட்டமான அரசியல் ஆட்சி வடிவமும் உருவகம் கொண்டுள்ளது. இன்று சனநாயகம் என்ற சொல் பல்வேறு மனித சுதந்திரங்களையும் உரிமைகளையும் குறிப்பிடுகிறது.

சமுதாயத்தை நிர்மாணம் செய்யும் பெரும் பணியில் ஒவ்வொரு பிரசைக்கும் உரிமையும் பங்கும் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. சிந்தனைச் சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரம் வழிபாட்டுச் சுதந்திரம் இப்படியான பல்வேறு சுதந்திரங்கள் மக்களின் சனநாயக சுதந்திரங்களாகக் கொள்ளப்படுகின்றன.

தேர்தல் முறையும் தெரிவு செய்யும் முறையும் அரசியல் பன்மை முறையும் சனநாயகப் பண்புகளாகப் பேணப்படுகிறது. சுதந்திரம் சமத்துவம் தர்மம் ஆகிய உன்னத இலட்சியங்களை சனநாயகம் மேன்மைப்படுத்துவதோடு மக்களின் இறைமையில் மக்களின் தீர்ப்பில் மக்களால் மக்களுக்காக கட்டியெழுப்பப்படும் ஒரு அரச ஆட்சிமுறையை வலியுறுத்துகிறது.

இவ்வாறு சனநாயகத்தின் உச்ச பண்புகளை பட்டியலிட்ட அவர்கள் அதன் செயற்பாட்டு நிலையையும் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டுகின்றனர். கொள்கை அடிப்படையில் கோட்பாடு ரீதியில் கருத்துருவ அர்த்தத்தில் சனநாயகமானது ஒரு மகத்துவமான அரசியல் ஆட்சி வடிவத்தை இலட்சியமாக கொண்டிருக்கிறது என்பது உண்மை தான்.

ஆனால் நடைமுறை யதார்த்தமோ வேறு. மேற்கத்தைய முதலாளித்துவ சமுதாயங்களிலும் மற்றும் சில நாடுகளிலும் நிலவும் ஆட்சி அமைப்பு முறையில் சனநாயக தத்துவம் பேணப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நாடுகளின் அரசியல் யாப்புகளில் மட்டும் சனநாயக இலட்சியங்கள் உரிமைகள் சுதந்திரங்கள் எல்லாம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் சனநாயகத்தின் பேரால் நடைபெறும் ஆட்சியோ வேறு. மனிதாபிமானற்ற சுரண்டல் முறையும் சமூக அநீதிகள் நிறைந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுடைய ஒடுக்கு முறையுமே இந்த ஆட்சி அமைப்பில் காணக்கூடியதாக இருக்கிறது.

அரசியல் சுதந்திரம் என்றும் தனி மனித உரிமை என்றும் பல கட்சிப் போட்டி என்றும் நடைபெறும் இந்த சனநாயக சதுரங்க விளையாட்டில் ஆட்சிப்பீடம் எறுவதும் அதிகாரம் செலுத்துவதும் முதலாளி வர்க்கமே. காலத்திற்கு காலம் மக்கள் தேர்தல் என்று ஓட்டுப் பதிவெடுக்கும் செப்படி வித்தைகாட்டி பணம் படைத்த வர்க்கமே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்கிறது.

இன்று உலகப்பொருளாதார மயமாக்கம் என்ற போர்வையில் மேற்கண்ட நிலை மேற்கத்தைய உலகில் வியாபித்து நிற்பதவன் விளைவே இங்கிலாந்தின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தான வெளியேற்றமும் டொனால்ட் ரம்ப் பேணி சான்டர்ஸ் பின்னால் அமெரிக்காவில் அணிதிரளும் மக்கள் கூட்டமும் என்றால் யார் மறுப்பீர்கள். சனநாயகத்தில் களையப்படவேண்டிய குறைபாடுகள் என்பதை 30 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக அடையாளம் காட்டினர் புலிகள். அதாவது சனநாயகத்தை பணநாயகம் வெல்லும் என்பதை அன்றே அடித்துக் கூறினர்.

இன்று அமெரிக்க சனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்றால் ஒரு பில்லியன் டொலர்கள் தேவை என்பதும் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து எழுந்த பெரும் கூக்குரல்களும் 78 சதவீத தி.மு.க வேட்பாளர்களும் 72 சதவீத அதிமுக வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள் என்பதும் சொல்லும் கதையும் இதுதான். இத்துடன் அவர்கள் நின்றுவிடவில்லை. சோசலிசம் குறித்தும் தமது பார்வையை ஆழமாக பகிர்ந்து கொண்டனர்.

'இன்றைய சோசலிச முகாம் நாடுகளில் சனநாயகம் பேணப்படுகின்றதா என்ற கேள்வி எழுகிறது. மாபெரும் யுகப் புரட்சிகளையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமுதாய மாற்ற பரிசோதனைகளையும் நடத்தி பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டிய இந்நாடுகளில் சனநாயகக் கோட்பாடுகளை முதலாளித்துவத்தின் சித்தாந்தக் குப்பைகள் என உதாசீனம் செய்யும் போக்கு காணப்படுகிறது.

இந்த நிராகரிப்பு காரணமாக சனநாயக சுதந்திரங்கள் இங்கு பேணப்படுவதில்லை. முதலாளிய சனநாயகத்திற்கும் உண்மையான சோசலிச சனநாயகத்திற்கும் மத்தியிலான வேறுபாடுகளை கண்டு கொள்ளாததால் எழுந்த தவறான பார்வையே இந்த நிலைப்பாட்டிற்கு காரணமாக இருக்கலாம்.

மார்க்சியமானது முதலாளிய சனநாயகத்தை கண்டிக்கிறது. சுரண்டல் முறை தாண்டவமாடும் முதலாளிய பொருள் உற்பத்தி சமூகங்களில் கடைப்பிடிக்கப்படும் போலி சனநாயகத்தை மார்க்சும் லெனினும் வன்மையாக விமர்சித்தனர். சமூக அநீதியை அடிப்படையாகக் கொண்ட முதலாளிய அமைப்பில் சனநாயகம் சாத்தியமாகாது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்களே அன்றி சனநாயகத்தின் சாராம்சத்தை நிராகரிக்கவில்லை.

அதாவது மக்களாட்சியை மக்களே தமது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை அவர்கள் நிராகரிக்கவில்லை. இந்த உண்மையான சனநாயக இலட்சியம் சோசலிச சமுதாயத்தில் நடைமுறைப்படுத்த முடியும் எனக் கருதினர்.

ஆகவே மார்க்சியமானது முதலாளிய சனநாயகத்தை நிராகரிக்கும் அதேவேளை சோசலிச சனநாயக்தை வலியுறுத்துகிறது. அரசு என்ற எல்லாம் வல்ல சக்திக்கு மனிதன் அடிமையாகி அரச உடைமையாகி வெறும் உற்பத்தி இயந்திரமாக இயங்குவதென்பது சோசலிச இலட்சியத்திற்கு முரணானது.

சமூக உறவுகளை சிறப்பாக அமைத்து மனித சுதந்திரத்திற்கு உத்திரவாதமளித்து மனிதனின் அதியுன்னத வளர்ச்சிக்கு வழிகோலுவதுதான் சோசலிசத்தின் குறிக்கோள்.

மனிதாபிமானத்தையும் மனித விடுதலையையும் இலக்காக் கொண்ட சனநாயகப் பண்புகளால் சோசலிசம் செழுமைப்படுத்தப்பட வேண்டும். அல்லாவிடில் அரச பயங்கரவாதமும் சர்வாதிகாரமும் இயந்திரமயமான வாழ்வும் தழைத்தோங்க அது வழிகோலும்."

சோசலிசம் என்றால் என்ன? அதன் நடைமுறைக் குறையாடுகள் என்ன என யாரும் அதைவிட சிறப்பாக விளக்க முடியாது. இக்குறைபாடுகளே சோசலிச நாடுகளை 90களில் இல்லா தொழித்து விட்டதை நாம் பார்த்தோம். இன்றும் சோசலிசம் என்று கூறிக்கொள்ளும் நாடுகளில் இக்குறைகள் வியாபித்து நிற்பதை நாம் வெளிப்படையாகப் பார்க்கலாம்.

அவ்வாறாயின் எது சிறந்த ஆட்சிமுறைமை என்ற உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. அதற்கும் அவர்களே விடுதலைப்புலிகளே பதில் தருகின்றார்கள்.

'ஒரு புதுமையான புரட்சிகரமான சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே எமது விடுதலை இயக்கத்தின் இலட்சியம். நாம் நிர்மாணிக்கத் திட்டமிடும் சோசலிச சமூக வடிவமானது மக்களின் அரசியல் பொருளாதார கலாச்சார வாழ்வை மேம்படுத்துவதாக அமையும்.

சனநாயக சுதந்திரமும் சமூக தர்மமும் பேணப்படும் ஒரு உன்னத சமுதாயக்கட்டுமானமாக அது விளங்கும். வர்க்கம் சாதி என்ற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டு பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக அநீதிகள் அழிக்கப்பட்டு உழைக்கும் பாட்டாளி மக்களின் சுவர்க்க பூமியாக சோசலிச தமிழீழம் திகழும்.

மக்களின் அடிப்படை உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுவதோடு மக்களே தமது அரசியல் சமூக பொருளாதார வாழ்வை நிர்ணயிக்கக்கூடியதான ஒரு உண்மையான மக்கள் அரசை உருவாக்குவதே எமது இலட்சியம்.

நாம் நிர்மாணிக்க விரும்பும் புரட்சிகர சோசலிச வடிவமானது எவ்வித பாணியிலும் அமையாது. எமக்கே உரித்தான தனித்துவமான பண்புகளைக் கொண்டதாகவும் எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாகவும் உருவாக்கப்படும்.

இப்படியான ஒரு புரட்சிகரமான மக்களாட்சியை கட்டி எழுப்புவதாயின் அது ஒரு உண்மையான புரட்சிகர இயக்கத்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்தப் புரட்சிகர இயக்கத்தை மக்களே தெரிவு செய்யவேண்டும்.

இவ்வியக்கம் மக்கள் இயக்கமாக மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் இயக்கமாக மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக அமையும்போது தமிழீழத்தில் ஒரு புதுமையான சனநாயக சோசலிச அரசை கட்டியெழுப்ப முடியும்.

இவ்வாறு ஒரு உயரிய மக்களாட்சியின் வடிவத்தை விடுதலை முன்னெடுப்பில் அணிசேராக் கொள்கையை இந்தியாவின் பிராந்திய நலன்களை ஏற்று மதிக்கும் உயரிய பார்வையுடன் பயணித்த ஒரு உன்னத விடுதலை அமைப்பை அது பின்னர் தன் நிலங்களை கட்டுக்குள் கொண்டு வந்தபோது மேற்கண்ட உயரிய சிந்தனைகளுக்கு ஒரு நிழல் அரசினூடாக வடிவம் கொடுத்தமையும் அந்த அரசில் நள்ளிரவில் கூட ஒரு பெண் துணிவுடன் நடமாடும் காலம் கனிந்ததும் இன்று வெறும் கதைகளாகிப் போனமைக்கு தன்னை குருடாக வைத்து நகரும் இன்றைய உலகமே காரணம்.

இவ்வுலகம் தன் தவறுகளுக்கு இன்று விலை கொடுக்க முனைந்து நிற்கிறது. ஆனால் வரலாற்றுப் பாடமாக அது எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. இந்தவகையில் உலகளாவிய தமிழர்கள் ஒரு பெரும் வரலாற்றின் சொந்தக்காரர்கள் என்பதில் பெருமை கொள்ளலாம். அதை தந்தவர்கள் விடுதலைப்புலிகள்.

No comments:

Post a Comment