May 27, 2016

சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 12 ஆவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை மட்டக்களப்பில்!

மட்டக்களப்பில் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி இனந் தெரியாதேரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட
ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (29) காலை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

இந்த ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்வில் அரசியல்வாதிகள், அமைப்புகள், பொது மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகள் ஆதரவுடன் மட்டக்களப்பு, பிள்ளையாரடி மன்றேசா வீதியிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கக்கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந் நிகழ்வு நடைபெறவுபுள்ளதாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரும் தலைவருமான எல்.ரி.அதிரன் தெரிவித்தார்.

ஜு.நடேசன், நெல்லை நடேசன், என பலராலும் அறியப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் ஜி.நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், அரசியல் தரப்பு நண்பர்கள், புத்திஜீவிகள் உரையாற்றவுள்ளனர்.

2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்கட்கிழமை நடேசன், தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1991ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் வீரகேசரி, சக்தி மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிலும் கடமையாற்றிய நடேசன் வடக்கு கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட போது மாகாணசபையின் தகவல் உதவி பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

1990ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையை விட்டு அப்போதைய முதலமைச்சர் வரதராசபெருமாள் தலைமையிலானவர்கள் இந்தியாவுக்கு கப்பல் ஏறி சென்ற போது நடேசன் அவர்களுடன் செல்லாது மட்டக்களப்புக்கு வந்திருந்தார்.

அதனையடுத்து ஊடகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ஜீ.நடேசன் 2004ஆம் ஆண்டில் கொல்லப்பட்டபோதும் அவரது கொலை தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவுபடுத்தப்படவில்லை.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கூட நிகழ்வுகளை நடத்த முடியாதிருந்த நிலையில் கடந்த வருடம் முதல் ஏற்பட்ட சுமுகமான சூழ்நிலையை அடுத்து கடந்த வருடத்தில் தராகி டி.சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. இதில் யாழ் ஊடக அமையம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு என்பனவும் இணைந்திருந்தன.

அதே போன்று திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் ஞர்பகார்த்த நிகழ்வு இவ்வருடத்தில் நடத்தப்பட்டது.
அதனையடுத்து, ஊடகவியலாளர் சிவராமின் 11ஆவது ஞாபகார்த்த தினம் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழு ஆகியவற்றின் இணைவோடு நடத்தப்பட்டிருந்தது.

அத்துடன் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து சிவராமின் பிறந்த இடமான ஆலையடிவேம்பிலும் 11ஆவது நினைவுப் பேருரை நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment