October 12, 2015

சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

நாட்டின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை(12) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில்
அவர்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு, மெகஸின், சீ.ஆர்.பி அநுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 250 இற்கு அதிகமான அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.குறிப்பாக மஹிந்த ஆட்சிக்காலத்தில் குறித்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இந்த அரசாங்கத்திற்கு பல்வேற அலுத்தங்களை கொடுத்த நிலையில் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தோம்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் சமூக அமைப்புக்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மேற்கொண்ட சகல போராட்டங்களுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கியதோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர்களும் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தோம்.ஆனால் மஹிந்த அரசாங்கம் மௌனம் காத்தது.
இந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் நிலை குறித்து மக்கள் தொடர்ச்சியாக தற்போதைய ஜனாதிபதியிடம் முன் வைத்துள்ளனர்.ஆனால் எவ்வித பலனும் இல்லை.குறிப்பாக தற்போது சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அரசியல் கைதிகளின் பிள்ளைகள் பாரிய மன அலுத்தத்தில் உள்ளதோடு அவர்களின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.அவர்களின் விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
இதனால் பொறுமை இழந்த அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (12) குதித்துள்ளனர்.இவர்களின் இப்போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்குகின்றது.
வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல் கைதிகளின் விடுதலையை வழியுறுத்தி அரசாங்கத்திற்கு மீண்டும் அலுத்தத்தை கொடுக்கவுள்ளோம்.
சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இனியும் தாமதிக்காது ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment