October 1, 2015

மருத்துவபீட மாணவி மரணம் கொலை என சந்தேகம்! புலனாய்வு பிரிவினரை விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

யாழ். பல்கலைக்கழக இணைமருத்துவபீட மாணவி மரணம் கொலை என சந்தேகம் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பான வழக்கு விசாரணையினை பொலிஸ் புலனாய்வு துறையினரின் கவனத்திற்கு மாற்றியுள்ளது
இணை மருத்துவப்பிரிவு மாணவியான லோறன்ஸ் அனா எப்சிபா என்பவர் கடந்த 06/07/2015 அன்று தீக்காயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மரணமடைந்தார்.
இம்மாணவியின் மரணம் தொடர்பில் உடுத்துறையைச் சேர்ந்த மருத்துவத்துறை விரிவுரையாளர் DR. ஞானகணேஸ் ரஜித் (ஜெனா) என்பவர் மீது பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மாணவியின் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணியான திரு. அன்ரன் புனிதநாயகம் இம் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வந்ததோடு அத்துடன் கடந்த வழக்கில் இம் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை நேரடியாகவும் ஆவணமாகவும் நீதிமன்றில் சமர்ப்பித்து அத்துடன் பொலிசாரின் அசமந்தப்போக்கினை சுட்டிக்காட்டினார்.
இவ் அதிர்ச்சியுற்ற தகவல்களை மிகவும் கூர்ந்து கவனித்த நீதிபதி பொலிசாரின் அசமந்தப்போக்கினை சுட்டிக்காட்டி கடுமையாக எச்சரித்ததுடன் உடனடியாக மீள் விசாரணைக்கு உத்தரவிட்டு அது தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் 01/10/2015 அன்று நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இன்றைய தினம் யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிசாரினால் எவ்வித உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்களையும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படாததை அடுத்து மாணவியின் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணியான திரு. அன்ரன் புனிதநாயகம் பொலிசாரின் செயற்பாடுகள் நம்பகத்தன்மையினை அளிக்கவில்லை என்றும் அவர்களது அசமந்தப்போக்கினை சுட்டிக்காட்டி வழக்கு விசாரணையினை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு மாற்றும்படி நீதிமன்றத்தினை கேட்டுக்கொண்டார்.
இதனை மிகவும் கூர்ந்து கவனித்த நீதிபதி இவ்வழக்கு விசாரணையினை வட மாகான பிரதி பொலிஸ்மா அதிபரூடாக புலனாய்வு பிரிவினருக்கு இவ்வழக்கு தொடர்பான விசாரணையினை மேற்கொள்ளும்படி கட்டளையிட்டதுடன் அது தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் 30/10/2015 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
அன்றைய தினமே இவ் வழக்கு மீளவும் நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மாணவியின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணியான திரு. அன்ரன் புனிதநாயகத்துடன் சட்டத்தரணியான திரு. றேமிடியஸ் அவர்களும் இணைந்திருந்ததுடன் இவ் வழக்கு இடப்பெறும் வேளையில் மாணவியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அநேகமான நபர்கள் வந்திருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.

No comments:

Post a Comment