September 12, 2015

மனோவளர்ச்சி குறைந்த பெண்குழந்தைகளையும் விட்டுவைக்காத இராணுவம்! சிங்கள ஊடகத்தின் அதிர்ச்சித் தகவல்

மனோ வளர்ச்சி குறைந்த பெண்குழந்தைகளுக்கான காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகள் இராணுவத்தினரின் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகி வரும் நிகழ்வு தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வார இறுதி சத்ஹண்ட செய்திப் பத்திரிகை மற்றும் கொழும்பு நியூஸ் டுடே செய்திச்சேவை என்பன இது குறித்த செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த செய்தியில் மேலும் தெரிய வந்துள்ளதாவது,
இராணுவக் குடும்பங்களில் இருக்கும் மனோ வளர்ச்சி குறைந்த பெண்குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று கொழும்பில் செயற்படுகின்றது.
யுத்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இதன் பராமரிப்பு மற்றும் மேற்பார்வை என்பனவும் இராணுவத்தினரின் பொறுப்பிலேயே விடப்பட்டுள்ளது.
கொழும்பு நாரஹேன்பிட்டவில் செனெஹச குழந்தைகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் செயற்படும் இந்தக் குழந்தைகள் காப்பகத்தில் அண்மைக்காலமாக இராணுவக் குடும்பங்கள் அல்லாத குடும்பத்தின் மனோவளர்ச்சி குறைந்த குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்தும் இராணுவ பராமரிப்பிலேயே வளர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் இராணுவத்தினரின் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குழந்தைகள் காப்பகத்தின் அருகில் இருக்கும் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய்கள் குடிபோதையில் அத்துமீறி காப்பகத்தினுள் நுழைந்து பெண்குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் எல்லை மீறிச் சென்றுள்ள நிலையில் அது குறித்து ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகாவிடமும் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பு நியூஸ் டுடே செய்திச் சேவை அனோமா பொன்சேகாவிடம் வினவிய போது, பாலியல் துஷ்பிரயோகம் குறித்த செய்திக்குப் பதிலளிக்க மறுத்த அவர், காப்பகத்தில் உள்ள மனோ வளர்ச்சி குறைந்த பெண் குழந்தைகள் தொடர்ந்தும் இராணுவ பராமரிப்பில் இருப்பது பொருத்தமானதல்ல என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment