September 12, 2015

கிளிநொச்சியில் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்க நடவடிக்கை: சுந்தரம் அருமைநாயகம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை விடுவித்து சரியான காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பரவிப்பாஞ்சான், இரணைதீவு, கனகாம்பிகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்களின் காணிகள் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வருவதால் இந்தக்காணிகளின் உரிமையாளர்கள் பல்வேறு இடங்களிலும் வாடகை வீடுகளிலும் உறவினர்-நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தங்களுடைய காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் பரவிப்பாஞ்சான் கிராமத்தில் 39 காணிகளை இராணுவம் விடுவிப்பதாகத் தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாகவே மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை தொடர்புகொண்டபோது, கடந்த ஜூலை மாதம் 1ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாகவும் அவருடைய உத்தரவிற்கு அமைவாகவும் பிரதேச செயலர்கள் ஊடாகவும் மாவட்ட உத்தியோகத்தர்கள் ஊடாகவும் விடுவிக்கப்படாத காணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை உரிய தரப்புக்களிடம் கலந்துரையாடி அவற்றை விடுவிப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இதேவேளை குறித்த காணிகளில் உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவுப்பகுதியில் 332 குடும்பங்களின் காணிகள் கடற்படையினரது பயன்பாட்டிலும் கிளிநொச்சி-பரவிப்பாஞ்சான் கிராமம் உட்பட 86 காணிகளும் கண்டாவளை பிரதேசத்தில் 27 காணிகளும் தொடர்ந்து இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் பயன்பாடுகளில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment