September 12, 2015

வரலாறு மன்னிக்காது! – புகழேந்தி தங்கராஜ்!

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கை, விரைவில்
வெளியாக இருக்கிறது. அந்த அறிக்கையில் என்னென்ன இருக்கும் என்று யூகித்துக் கொண்டிருப்பது தேவையில்லாத வேலை. அறிக்கை நேர்மையாக இருந்தால் அதை ஏற்கப் போகிறோம், குற்றவாளிகளைக் காப்பாற்றவே தயாரிக்கப் பட்டதென்றால், அதைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, நீதிக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போகிறோம்.
இந்த அறிக்கை சென்ற மார்ச் மாதமே வெளிவந்திருக்க வேண்டும். ‘நாட்டில் புதிய அரசாங்கம் அமைந்திருப்பதால், கால அவகாசம் தேவை’ – என்கிற இலங்கையின் கோரிக்கையை ஏற்று, செப்டம்பருக்கு அதைத் தள்ளிவைத்தது, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம். இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஆசீர்வாதத்தால்தான் அந்த அவகாசம் கொடுக்கப்பட்டது என்பது ஊரறிந்த ரகசியம்.
வேறு எதற்காகவும் கால அவகாசம் கேட்கவில்லை மைத்திரிபாலா. நாடாளுமன்றத் தேர்தல் வரை மகிந்த ராஜபக்சவைக் கட்டுக்குள் வைத்திருக்க ‘சர்வதேச விசாரணை அஸ்திரம்’ தேவைப்பட்டது மைத்திரிக்கு! கையை விரித்துக் காட்டி விட்டால், மகிந்தனுக்குக் குளிர் விட்டுப் போய்விடக் கூடும்…. அதனால் மூடியே வைத்திருக்கச் சொல்வது தான் நல்லதென்று நினைத்தார் மைத்திரி.dcp546464646
2009 இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, கடந்த ஆறு ஆண்டுகளாக உலகெங்கும் போராடி வருகிற தமிழ் இளைஞர்கள், மேலதிக அவகாசம் இலங்கைக்குத் தரப்படும் என்று எதிர்பார்க்கவேயில்லை. ஏற்கெனவே ஆறு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் ஒரு நீதியை, மேலும் இழுத்தடிப்பார்கள் என்று அவர்கள் நினைக்கவேயில்லை.
ஏமாற்றமடைந்த தமிழினத்தை முட்டாளாக்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்தது. ‘இந்த ஆறு மாத காலத்தில், ஐ.நா.அறிக்கை இன்னும் விரிவானதாக, வலுவானதாக உருமாற்றம் அடைய வாய்ப்பிருக்கிறது…. செப்டம்பரில் வெளியாகும் அறிக்கையில் மேலதிக ஆதாரங்கள் சேர்த்துக் கொள்ளப்படக்கூடும்’ என்றெல்லாம் நம் காதில் பூ சுற்றினார்கள் சிலர்.
மார்ச் மாதமே தயாராகிவிட்ட அந்த அறிக்கையில், மேலதிக ஆதாரங்கள் எதுவும் சேர்க்கப்படவோ கோர்க்கப்படவோ வாய்ப்பேயில்லை. மகிந்தனுடன் ஏதாவது டீல் முடிந்திருந்தால், அவனுக்கு safe passage கொடுக்கிற விதத்தில் மாற்றம் ஏதாவது செய்யப்பட்டிருக்கலாமே தவிர, ஒன்றரை லட்சம் உயிர்களுக்கான நீதியை உறுதி செய்கிற மாற்றம் எதுவும் அதில் இருக்கப்போவதில்லை. இந்த சூழ்ச்சியின் சூத்திரதாரி, அமெரிக்காதான்!
‘அமெரிக்கா மட்டும் இல்லாவிட்டால் என்ன ஆவது’ என்று சீன் போடுகிற சமந்தகர்களுக்கு, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் அமெரிக்கா நின்றதாக வரலாறே இல்லை என்பது தெரியுமா தெரியாதா? பெரும்பாலும், தன்னிடம் ஆயுதம் வாங்குகிற சர்வாதிகாரிகளின் பக்கம்தானே நிற்கிறது அது! இப்போதும், மகிந்த என்கிற அரக்கனைக் காப்பாற்றத்தானே, ‘உள்ளக விசாரணை போதும்’ என்று போதிக்கிறது!
ராஜபக்சவின் இலங்கையென்றால் சர்வதேச விசாரணை, மைத்திரியின் இலங்கையென்றால் உள்ளக விசாரணை – என்று இரட்டை வேடம் போடுகிற ஒரு நாட்டுக்கு, நடுநிலை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை ஏமாற்ற, LLRC (கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு) என்கிற மோசடி அமைப்பை மகிந்தன் உருவாக்கியதையும், அந்த அமைப்பின் பரிந்துரைகளைக் கூட அமல்படுத்த அவன் மறுத்ததையும் இதற்குள்ளாகவா மறந்துவிட்டது அமெரிக்கா? ‘உள்ளக விசாரணை’ என்று பிதற்றுகிற அமெரிக்கா, மகிந்தனிடமிருந்து கற்றறிந்த பாடம் – எதுவுமே இல்லையா?
‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்கியே ஆகவேண்டும், உள்ளக விசாரணை என்பதோ சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய உள்ளக விசாரணை என்பதோ பயனற்றது’ என்று வெட்டொன்று துண்டிரண்டாகத் தேங்காய் வியாபாரி மாதிரி தெளிவாகப் பேசுகிறார் விக்னேஸ்வரன். சம்பந்தர், கத்தரிக்காய் வியாபாரி. வழவழா கொழகொழா பேர்வழி. ‘சர்வதேச விசாரணை நடந்து முடிந்துவிட்டது’ என்று நக்கலடித்துக் கொண்டிருக்கிறார். (எதிர்க் கட்சித் தலைவருன்னா சும்மாவா!)
ஐ.நா.விசாரணைக் குழு இலங்கைக்கு வந்தால் திரும்பிப் போக முடியாது – என்றெல்லாம் மகிந்த ராஜபக்சவின் பங்காளிகள் எச்சரித்ததை நாம் இன்னும் மறந்துவிடவில்லை. சமந்தகர்களில் எவரும் அந்த அராஜக அறிவிப்புகளைக் கண்டித்ததாகவோ, ‘ஐ.நா.குழுவைத் தடுக்காதே, நீதியை மறுக்காதே’ என்று குரல்கொடுத்ததாகவோ நமக்குத் தகவல் இல்லை.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் அதிரடி வன்னிப் பயணமும், மிரட்டல்களுக்கும் அவதூறுகளுக்கும் அஞ்சாமல் வன்னிக்கு வந்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்ததும்தான் – இந்த விஷயத்தில் திருப்புமுனை.
டேவிட் கேமரூனை நேரில் சந்தித்து முறையிட எங்கள் சகோதரிகள் வழியெல்லாம் காத்திருந்தனர். அந்த இடங்களைத் தவிர்த்துவிட்டு, வேறு வழியாக கேமரூனைக் கூட்டிச் செல்ல முயன்ற ‘ஆண்’களைப் பற்றி இப்போது நான் பேச விரும்பவில்லை….. அதே சமயம், காவல் துறையின் தடுப்புகளையெல்லாம் தகர்த்துவிட்டு, டேவிட் கேமரூனுடன் வந்த வாகனங்களை மறித்து ‘ஆண்மை’யோடு நீதி கேட்ட அனந்தி முதலான எங்கள் சகோதரிகளை அப்போதுபோல் இப்போதும் வணங்குகிறேன்.
‘இப்படியெல்லாம் முரட்டுத்தனமாக வழிமறித்து நின்றால், பிரிட்டிஷ் பிரதமர் நம் சமுதாயத்தைப் பற்றி என்ன நினைப்பார்’ என்றெல்லாம் கேட்டார்களே….. அவர்களைக் கூட மறந்துவிட்டேன்…. ஆனால், அந்தச் சகோதரிகளின் ஆழ்மனத் துயரை உள்வாங்கிக் கொண்டு, கண்கலங்க நின்ற கேமரூனை என்னால் மறக்க முடியவில்லை.
காமன்வெல்த் மாநாடு முடியும் முன்பே இலங்கையிலிருந்து வெளிநடப்பு செய்த கேமரூன், ‘சர்வதேச விசாரணைதான் ஒரே வழி’ என்று அறிவித்தாரே…. நினைவிருக்கிறதா? அந்த அறிவிப்புதான், நீதி கேட்டு வீதிக்குவந்த எங்கள் சகோதரிகளைப் பற்றி கேமரூன் என்ன நினைத்தார் – என்பதை உலகுக்கு உணர்த்தியது.
இதையெல்லாம் நினைவுபடுத்துவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. ‘சர்வதேச விசாரணை, இனப்படுகொலை என்றெல்லாம் முட்டாள்தனமாகப் பேசாதீர்கள்….. அது ராஜதந்திரமில்லை’ என்று உலகெங்கும் ஓடி ஓடி போதித்த அறிவுரைத் திலகங்கள், ‘நாங்கள்தான் வலியுறுத்தினோம் சர்வதேச விசாரணையை’ என்று ஊளையிடுகின்றனர் இன்று! நீதி தேடும் முயற்சியில் நாம் பாதிக் கிணறாவது தாண்டக் காரணமாக இருந்த கேமரூனும் நவநீதம்பிள்ளையும் கல்லம் மேக்ரேயும் அமைதி காக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் பேசாமல், வெறுமனே வேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை என்னால்!
‘எங்களால்தான் சர்வதேச விசாரணை நடந்தது… அந்த விசாரணை அறிக்கைதான் வெளிவரப் போகிறது’ என்று எவர் வேண்டுமானாலும் பீற்றிக் கொள்ளலாம். அடுத்தவன் குழந்தைக்குத் தன் இனிஷியலைப் போடுகிற உரிமை, இலங்கைக்கு மட்டும்தான் இருக்கிறதா என்ன?
இலங்கை முரண்டுபிடித்ததாலும், முட்டுக்கட்டை போட்டதாலும், இனப்படுகொலை நடந்த மண்ணில், எந்த அதிகாரபூர்வ விசாரணையும் சர்வதேசத்தால் இன்றுவரை நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக வாக்குமூலங்களைப் பெற முடியவில்லை. அதனால், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணை அறிக்கை எந்த வகையிலும் முழுமையானதாக இருக்கப் போவதில்லை. என்றாலும், கடலுக்குள் ஒளிந்திருக்கும் பனிப்பாறையின் ஒரு முனையாக அது இருக்கக் கூடும்.
ஐ.நா.மனித உரிமை ஆணையம், சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பல்ல! என்றாலும், குற்றங்களையும் குற்றவாளிகளையும் அடையாளம் காட்ட அதனால் முடியும். அப்படி அடையாளம் காட்டுவதையே, ஆறு ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது அது. ஓடு – என்று அமெரிக்கா சொன்னால் ஓடுவதும், நில் – என்றால் நிற்பதும்தான் இந்த இழுபறிக்குக் காரணம். இப்படி எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிற ஓர் அமைப்பு, என்ன நியாயத்தைத் தரப்போகிறது என்பது நமக்குத் தெரியவில்லை.
ஒருவேளை, நவநீதம்பிள்ளை என்கிற இரும்பு மனுஷி சட்டப்பூர்வமாகப் போட்ட கோட்டிலிருந்து அந்த ஆணையம் விலகவே முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியொரு நிலையில் ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இப்போது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் வெளியிடும் விசாரணை அறிக்கை சற்றேறக்குறைய, ஒரு குற்றப்பத்திரிகை. இதன் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தவும், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தவும், ‘சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தேவை’ என்கிறார் விக்னேஸ்வரன். முதல்வரின் இனம்சார் அறிவுத்திறனை உணர்ந்த தமிழரின் தாயகம், சர்வதேச விசாரணையைக் கோரும் கையெழுத்து இயக்கத்தை முழுமூச்சோடு முன்னெடுக்கிறது.
இந்த அறிக்கையும், இதன்மீதான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நடக்க இருக்கும் விவாதங்களும், இந்த மாத இறுதியில் ஜெனிவாவைச் சூடாக்கிவிடும். இந்த நிலையில், நீதி கிடைக்கக் குறுக்கே நிற்கும் அமெரிக்கா- சீனா – இந்தியாவை நாம் அம்பலப்படுத்தியாக வேண்டும்.
எம் உறவுகள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டதற்கு, ஆயுதங்களைக் காட்டிலும், இந்த மும்மூர்த்திகளின் கள்ள மௌனமே பெரிதும் காரணமாக இருந்திருக்கிறது. ஓர் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிய இவர்கள், அதற்கு நீதி தேடும் முயற்சிக்கும் குறுக்கே நிற்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை – கல்லம் மேக்ரே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்காவிட்டால், எம் இனத்தின் முகத்தில் மிக எளிதாகக் கரி பூசியிருப்பார்கள் அவர்கள். சர்வதேசத்தின் நெருக்கடிகளையும் எம் இனத்தில் பிறந்த சிலரின் அழுத்தங்களையும் பார்த்து நவநீதம்பிள்ளை பின்வாங்கியிருந்தால், ஒன்றரை லட்சம் உயிர்களை உழுது புதைத்த இடத்தில் நீதி நியாயத்தையும் சேர்த்துப் புதைத்திருப்பார்கள். அந்த இரண்டு மானுட சக்திகளின் முயற்சியால், ஒரு விசாரணை அறிக்கையாவது வர இருக்கிறது இன்று!
இந்த விசாரணை அறிக்கை மீது எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கை என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி! இந்த அறிக்கை குற்றப்பத்திரிகை என்றால், இதில் குறிப்பிட்டுள்ள குற்றங்கள் குறித்து விரிவாக விசாரிப்பதும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்துவதும்தான் அடுத்த வேலை. ‘அந்த வேலையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம், ரோம் சாசனத்தில் நாங்கள் கையெழுத்திடாததால் உள்ளக விசாரணைதான் சாத்தியம், எங்களை நாங்களே விசாரித்துக் கொள்வோம்’ என்கிறது ரணிலின் இலங்கை.
(ராஜபக்ச உள்ளிட்ட) போர்க்கதாநாயகர்களின் உரிமைகள் எல்லா வகையிலும் பாதுகாக்கப்படும் – என்கிற ஒப்பந்தத்தில், ரணிலைக் கையெழுத்திடச் சொல்கிறது, ராஜபக்சவின் கட்சி. அதன் தயவில்லாவிட்டால், ரணில் பிரதமராக நீடிக்க முடியாது. இந்த லட்சணத்தில்தான், ‘உள்ளக விசாரணை’ என்று அறிவிக்கிறார் ரணில்! இது புரியாத அசமந்தங்களல்ல, சம்பந்தன்களும் சுமந்திரன்களும்! என்றாலும், உறங்குவது போல நடிப்பவர்களை எவரால் எழுப்ப இயலும்?
இதையெல்லாம் அலசி ஆராய்ந்த பிறகுதான், ரோம் சாசனத்தில் கையெழுத்திடாவிட்டாலும் கூட இலங்கையை சர்வதேசத்தின் விசாரணைக்கு உட்படுத்த முடியும் என்பதை அழுத்தந் திருத்தமாக அறிவித்திருக்கிறார் விக்னேஸ்வரன்.
அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் இனத்தின் நோக்கம், ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நியாயம் கேட்பது மட்டும்தான். மகிந்த ராஜபக்ச உள்பட எவரையும் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணம் தமிழினத்துக்கு அறவே இல்லை. அப்படியெல்லாம் பழிக்குப் பழி வாங்குகிற எண்ணம் எம் இனத்துக்கு இருந்திருந்தால், இன்றைக்கு மகிந்த ராஜபக்ச இருந்திருக்க முடியுமா?
எப்படிக் கேட்டாலும் உலகுக்குப் புரியவில்லை என்பதால் தான், இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது….
ஆறு ஆண்டுகளாக நீதி கேட்டுப் போராடும் எம் இனம் இன்றுவரை சர்வதேசத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் வேறெப்படித்தான் விளக்குவது?
கல்லம் மேக்ரே சொன்னதை மீண்டும் ஒருமுறை நான் நினைவுபடுத்துகிறேன்….
“கொன்று குவிக்கப்பட்ட இனத்துக்கு நீதி வழங்க சர்வதேசம் தவறினால், தனக்கான நீதியை அந்த இனம் தானே தேடிக் கொள்ளும்…..”
மேக்ரேவின் எச்சரிக்கையிலிருக்கும் யதார்த்தத்தை அமெரிக்காவும் இந்தியாவும் சர்வதேசமும் இனியாவது புரிந்துகொள்ளுமா?
நல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வுக்கான திட்டங்கள், தமிழர் தாயகத்தில், நீண்ட கால அடிப்படையில், மேற்கொள்ளப்படலாம்… தவறில்லை. அதே சமயம், எம் ஒன்றரை லட்சம் உறவுகளின் உயிர்களுக்கு இன்றே இப்போதே நீதி தேவை!
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் நீதியை வழங்க அவகாசம் கேட்பதும், குற்றவாளிகளுக்கு வாய்தா கொடுப்பதும், குற்றவாளிகளின் தயவில் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களே குற்றவாளிகளை விசாரிப்பார்கள் என்று அறிவிப்பதும், தமிழினத்துக்கு எதிரான பச்சைத் துரோகம். இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை வரலாறு மன்னிக்காது!

No comments:

Post a Comment