வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாத மற்றும் நடைமுறைப்படுத்தியும் அது தொடர்பில் தகவல் அனுப்பி வைக்காத திணைக்களங்கள், அமைச்சுக்களுக்கான சுற்றுநிருபம் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்தெரிவித்துள்ளார் .
வடமாகாண சபையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கேட்கப்பட்டபோதே அவர்இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உரிய மத்திய மாகாண அமைச்சர்கள், திணைக்களங்களுக்கு உடனடியாகவே எவ்வித தாமதங்களுமின்றி அனுப்பப்படும்.
இதற்கு அவர்கள் பதிலளிக்கிறார்களா இல்லையா என்பதற்கு பேரவை செயலகம் எதுவும் செய்யமுடியாது குறிப்பாக கடந்த காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 மீனவர்களுக்கு மன்னிப்பளிக்க வேண்டும். காணிஅதிகாரம் தரவேண்டும் தொடர்பான பிரேரணைகள் தீர்மானங்கள் கடந்த ஆட்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு அனுப்பியுள்ளோம். அதற்கு அவர் பதிலளிக்காவிட்டால் மாகாண நிர்வாகம் எதுவும் செய்யமுடியாது.
வடக்கு மாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படாதுமுள்ளன. ஆகையால் தீர்மானங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பிழையான கூற்றாகும்.
பேரவை செயலகத்தைப் பொறுத்தவரையில் அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் மாகாண சபை, அமைச்சுக்கள், திணைக்களங்கள் தொடர்பில் குறிப்பிடப்படுகையில் சில அமைச்சுக்கள், திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் எம்மிடம் தகவல்கள் இருக்கின்றன. இந்த விடயத்தை அமைச்சுக்கள், திணைக்களங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.
மாகாண சபையின் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கிறது அன்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் பேரவை செயலகத்திற்கு தகவல் அனுப்புகின்ற கடமைப்பாடு அமைச்சுக்கள் திணைக்களங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறான சில காரியங்கள் நடைபெறாது உள்ளது. இவை தொடர்பில் அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு உடனடியான அறிவித்தல் வழங்கி சுற்றறிக்கை அனுப்ப வுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment