September 18, 2015

கிளிநொச்சி பொன்னகர்! பெயருக்கு ஏற்றால் போல் பிரகாசிக்க ஏங்கும் மக்கள்!(படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி எல்லைக்கிராமங்களில் பொன்னகரும் ஒன்று.ஏ9 வீதிக்கு மிக நெருக்கமாக நெடுஞ்சாலையில் மிக ஆடம்பரமாகச்செல்லும் சொகுசு வாகனங்களின் இரைச்சலும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் விரையும் குளிரூட்டப்பட்ட புகை வண்டியும் இந்த பொன்னகரோடு மிக நெருக்கமாக உரசிச் செல்கின்றன.
புகழ்பெற்ற முறிகண்டிப்பிள்ளையாரின் மணியோசை பொன்னகரை தினமும் நிறைக்கின்றது.
பொன்னகர் அது காரணப்பெயராக இருக்கமுடியாது என அங்கு சென்றால்தான் பலருக்கு புரியும்.பெருங்காடு இக்கிராமத்தின் ஒரு பக்கம் காடுகளை வெட்டி உருவாகிய இந்தக்கிராமம் இன்றைக்கு ஆதிவாசிகளிடம் வாழிடம்போலவே இருக்கின்றது.
பொன்னகர் மத்தியின் பாதிக்கிராமம் இருளால் சூழந்து கிடக்கின்றது. கூலித்தொழிலாளர்களின் குடும்பங்கள்தான் பெரும்பாலும் அவை.தங்களோடு இந்த வறுமைவலிகள் போய் தங்கள் பிள்ளைகள் என்றாலும் நன்கு படித்து முன்னேறி உத்தியோகங்களில் அமர்வார்கள் என்று இந்த ஏழை கிராமத்தின் பெற்றோர்கள் நினைத்தாலும் அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய பொதுக்கட்டுமான சேவையான மின்சாரம் கூட இந்த கிராமத்தை ஒரு பகுதி மக்களை எட்டுவதற்கு மறுக்கின்றது.
பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மக்கள் தங்களுக்கு மின்சாரம் தேவைப்படுவதற்கான விண்ணப்பங்களை கிளிநொச்சி மின்சார சபையில் கொடுத்துவிட்டதாக சொல்கின்றார்கள்.
அந்த விண்ணப்பங்கள் என்ன ஆயிற்று அதற்கு என்ன பதில் அந்த மக்களுக்கு தங்களுக்கு ஏன் மின்சாரம் கிடைக்கவில்லை என்பதை சொல்லத்தெரியவில்லை.
தொடர்ப்புபட்ட அதிகாரிகளும் மிகச்சரியான பதிலை மக்களுக்கு வழங்க தவறிவருகின்றார்கள் என எண்ணத்தோன்றுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலை ஒட்டி கொஞ்ச மின்கம்பங்கள் முதலாம் கட்டை வீதியால் கொண்டுவரப்பட்டு பறிக்கப்பட்டு இன்று அது நல்லாட்சியில் உறங்குகின்றது.
இதை தேர்தல் காலங்களின் மின்கம்பங்களை மக்களிடம் வாக்குப்பெறுவதற்காக பறிக்க உத்தரவிடும் அரசியல்வாதிகளையும் அதற்கு துணைபோயிருகின்ற மின்துறை அதிகாரிகளையும் இந்த ஏழைக்கிராம பிள்ளைகளின் சாபம் நிச்சயம் துரத்தும்.
ஒரு வேளை மின் துண்டிப்பு என்றால் உயிர்போய்விட்டதுபோல் அந்தரப்படுகின்ற மின்துறை அதிகாரிகள் அரசியல்வாதிகளின் குடும்பங்களுக்கு இந்த பொன்னகர் கிராமத்தின் இருள்சமர்ப்பணமாகின்றது.ஒரு பாடசாலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த பிள்ளை மின்சாரத்திலும் இன்னொரு குடும்பத்தை சேர்ந்த பிள்ளை குப்பிவிளக்கிலும் இன்று படிக்கும் நிலையில் ஒரு ஏழை குடும்பத்தின் ஆற்றல் மிகுந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை அழிக்கின்ற கொடுரக்காரர்களாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
பொன்னகர் கிராமத்தில் காணியற்று இரவல் காணியில் இருக்கும் குடும்பங்களுக்கான தீர்வு வறட்சி காலத்தில் சகல குடும்பங்களும் நீர்பெறுவதற்கான தீர்வு, மின்சாரம் வழங்கப்படாமைக்கான தீர்வு, மிகமோசமான நிலையில் இருக்கின்ற பாதைகளுக்கான தீர்வு என்பன உடனடியாக காணப்படவேண்டும்.
இறுதியாக அனைவருக்கும் சொல்வது இதுதான் பொன்னகரில் ஒரு நாள் வாழந்துபார் என்பதுதான்!






No comments:

Post a Comment