August 12, 2015

முல்லைத்தீவில் சுனாமியில் காணாமல் போன சிறுவன் இளைஞனாக திரும்பினார் !




கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது காணாமல் போன 9 வயது
சிறுவனொருவன், 21 வயது இளைஞராக அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று, முல்லைத்தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது. முல்லைத்தீவு, குமாரபுரத்தைச் சேர்ந்த ஜெகநாதன் குருதேவன் என்ற இளைஞரே இவ்வாறு வீடு திரும்பியுள்ளார்.

சுனாமியின் போது தனது 9 வயதான மகன் காணாமல் போய்விட்டார் என அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் பதிவுகளையும் முறைப்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையிலேயே அவர், நேற்று வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பில் மீண்டு வந்துள்ள அவ்விளைஞர் கூறியுள்ளதாவது,

'சுனாமி ஏற்பட்ட போது, முல்லைத்தீவிலிருந்து வவுனியா வரை தனியாகச் சென்று பின்னர், வவுனியாவிலிருந்து புகையிரதத்தில் ஏறி நண்பர்களுடன் பயணித்தேன். இதன்போது நான், ரயில் நிலையமொன்றில் தனியாக இறங்கி நின்றுகொண்டிருந்தேன். அப்போதுதான் நான் நிற்கும் இடம் மாகோ புகையிரத நிலையம் என்று தெரியவந்தது. அப்போது அங்கு மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இடம், மொழி என எதுவுமே தெரியாமல் தனியாக நின்று கொண்டிருந்த என்னை ஒருவர் அழைத்துச் சென்று உண்பதற்கு உணவு வாங்கித் தந்தார். உணவு உண்ட பின்னர், அவர் என்னை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் நான், தம்புள்ளை என்ற இடத்திலுள்ள பௌத்த பிக்கு ஒருவரினால் நிர்வகிக்கப்படும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டேன்.
அங்கு நான், தரம் 9 வரை கல்வி பயின்றேன். பின்னர், அச்சகமொன்றில் கடமையாற்றினேன். அவர்கள் அங்கு எனக்கு உணவு, உடை, தங்குமிடம் எல்லாவற்றையும் கொடுத்த போதிலும் சம்பளம் எதையும் வழங்கவில்லை. பதிலாக, எனது பெயரில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து அதில் எனது சம்பளத்தை சேமித்து வைத்தார்கள்.

பிறப்பில் நான் ஓர் இந்துவாக இருந்தாலும் பௌத்த விகாரைகளிலேயே வழிபாடுகளை மேற்கொண்டேன். எவ்வாறாயினும், கடந்த 11 வருடங்களும் நான் மிகவும் சந்தோஷமாகவே இருந்தேன்' என்று குறிப்பிட்டார்.

தம்புள்ளையில் முல்லைத்தீவு இளைஞர் ஒருவர் இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்த, அங்கு சென்ற சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர், அவ்விளைஞரிடம் விசாரணை நடத்தியபோதே உண்மை வெளிவரத் தொடங்கியது.

அவ்விளைஞன், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் படித்தாகவும் அது தண்ணீரூற்றில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையிலேயே, அவ்விளைஞனின் பெற்றோர்களை வரவழைத்து அவ்விளைஞன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment