தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உடன்படிக்கை உள்ளது என்று முன்னாள் சிறீலங்காவின் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள குற்றச்சாட்டை அடியோடு மறுக்கின்றோம்.
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது சமஷ்டி முறையில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சியின் கீழ்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்சிகளினது கொள்கையிலும் வித்தியாசம் உண்டு.
நாம் தமிழர்களுக்கு சமஷ்டி முறையைத்தான் கேட்கின்றோம். வடக்கு, கிழக்கை நாட்டிலிருந்து பிரிக்க வேண்டுமென்று கேட்கவில்லை.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் சமஷ்டி முறையில்தான ஆட்சி நடக்கின்றது. உலகத்தில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை. தேர்தலில் வெல்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தவறான – பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
இம்முறை யாழ்.மாவட்டத்தில் மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைப் பெறும் என்பது உறுதி – என்றார்.
No comments:
Post a Comment