இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகள் குறைந்தபட்ச தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க கூடிய தீர்வுகளைப்
பெறுவதற்கு எடுத்த அனைத்து முயற்சியும் பயனற்று போயின.
2009 இல் இலங்கை அரசு தமிழர்களுக்கு இழைத்த பாரிய அளவிலான இனப் படுகொலைக்குப் பின் புலம்பெயர் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான மீள் வாக்கெடுப்பு நடத்தி இருந்தனர். கனடாவில் மிகப் பெரும்பான்மையான 99.82 வீதமான மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தனர். 1977ல் வடக்கு கிழக்கை தாயக பூமியாக கொண்ட தங்களது பாரம்பரிய தாயகத்தில் சுதந்திர இறைமை கொண்ட தனியரசை நிறுவுவதற்காக 1977ல் மிகப் பெரும்பான்மையாக வாக்களித்ததன் பின் மீள் வாக்கெடுப்பின் ஊடாக புலம்பெயர் தமிழ்மக்கள் மீண்டும் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நடந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அனைத்துலகத்திடம் நீதி வேண்டி காத்திருக்கின்றனர். புதிதாக இக்காலகட்டத்தில் உருவான வடக்கு மாகாண சபையால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கொண்டுவர முடியவில்லை. வடமாகாண சபையினால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய சிறு நன்மைகளைக் கூட ஆளுனரும் ராணுவமும் தொடர்ச்சியாக தடுத்தவண்ணம் உள்ளனர். மாறி மாறி வரும் சிங்கள இனவெறி அரசாங்கங்கள் எந்த வித தீர்வையும் கொடுத்துவிடப் போவதில்லை என்பது வரலாற்று ரீதியாக உறுதியாகி விட்டது.இவை யாவும் அனைத்துலக அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் மேற்பார்வையில் தமிழர் மத்தியிலான அவர்களின் அபிலாசைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு பொதுசன வாக்கெடுப்பே அம்மக்களின் நீண்டகால அரசியல் தீர்வாக அமைய முடியும் என சுட்டிக்காட்டுகின்றன. புலம் பெயர் தேசங்களில் அந்தந்த நாடுகளில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்புக்கள் யாவும் பொது வாக்கெடுப்பிற்கான தமது தீர்மானத்தினை பல வழிகளிலும் பல சந்தர்ப்பத்திலும் வெளியிட்டிருந்தனர். இந்தியாவில் தமிழ் நாட்டு சட்ட சபையும் பொதுவாக்கெடுப்பிற்கான தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றி இருந்தனர். முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் தமிழ் மக்கள் தமக்குத் தேவையானவற்றை தாமே தீர்மானிக்க கூடிய ஒரு பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என தெரிவித்திருந்தார்.இவ்வாறான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நீண்ட கால தீர்வை மனதில் கொண்டு, இலங்கையின் வடக்கு-கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் ஐ.நா தலமையிலான பொதுசன வாக்கெடுப்பு நடைபெற வேண்டுமென்ற விடயத்தை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க வேண்டுமென அனைத்து தமிழர்களும் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) தெளிவாக தங்கள் தேர்தல் அறிக்கையில் ஒரு ஐ.நா. வாக்கெடுப்பு தேவை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். கனடியத் தமிழர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இந்த தைரியமான தீர்க்கதரிசனமான முயற்சியை முழுமனதாக வரவேற்கின்றனர்.
கடந்த ஏழு தசாப்தங்களாக 33 தேசங்களுக்கான ஐ.நா பொது வாக்கெடுப்பு நடைபெற்றிருக்கின்றது. இன்னும் ஐந்து நாடுகள் வாக்கெடுப்பிற்கான வரிசையில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஐ.நா வாக்கெடுப்பென்பது ஒரு உலக ஒழுங்கு. ஐ.நா. வின் சாசனத்தின் அடிப்படையில் ஈழத் தமிழர்களும் ஐ.நாவின் கண்காணிப்பிலான ஒர் பொதுசன வாக்கெடுப்புக்கான எல்லா தகுதியும் உடையவர்கள் என்பது வரலாற்று ரீதியானதும் மற்றும் இன அழிப்பிற்குட்பட்ட சமூகம் என்ற வகையில் தர்க்க ரீதியானதுமான வெளிப்படையான உண்மையாகும்.
கனடாவில் பொதுமக்களின் வாக்களிப்பினூடாக, கனடியத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, உருவாக்கப்பட்ட கனடியத் தமிழர் தேசிய அவையும் (NCCT) ஐ.நா பொதுசன வாக்கெடுப்பொன்று நடைபெற வேண்டுமென்ற விடயத்தை எல்லா தளங்களிலும் சொல்லிலும் செயலிலும் முன்னெடுத்து வருகின்றது.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை – NCCT
தொலை பேசி: 416.830.7703 மின்னஞ்சல்: info@ncctcanada.ca | முகநூல் @ncctonline
தொலை பேசி: 416.830.7703 மின்னஞ்சல்: info@ncctcanada.ca | முகநூல் @ncctonline


No comments:
Post a Comment