பதவியில் இருந்தபோது ஒரு கொலையை மூடிமறைத்துவிட்டு, ‘மீண்டும் பதவியில் அமர்ந்தால் விசாரிக்கிறேன்’ என்று அறிவிப்பது
அயோக்கியத்தனம்….”கொழும்பு ‘டெய்லி மிரர்’ ஆங்கிலப் பத்திரிகையின் வாசகர் ஒருவர், ராஜபக்சே குறித்து தெரிவித்துள்ள கருத்து இது. இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மிரரில் வந்த ஒரு செய்தி, அவரைப் போலவே பல வாசகர்களைக் கொதிக்க வைத்திருக்கிறது.
செய்தி உங்களுக்கும் தெரிந்ததுதான்.
2012ல் இலங்கையின் பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன் கொல்லப்பட்டதும், ரக்பி அணிக்குள் திணிக்கப்பட்ட மகிந்தனின் மகன்தான் கொலையின் சூத்திரதாரி என்று பரவலாகச் சொல்லப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கும்.
ஒரு விபத்தில் தாஜுதீன் உயிரிழந்ததாகக் கூறி, அந்த வழக்கைக் குழிதோண்டிப் புதைத்து விட்டது மகிந்த அரசு. இப்போது, தாஜுதீன் வழக்கு பூதாகரமாக உருவெடுத்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 10), நீதிமன்ற உத்தரவின்படி, தாஜுதீனின் உடல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்படுவதற்கு முன் தாஜுதீன் கடத்தப்பட்ட வாகனம் மகிந்த ராஜபக்சேவின் மனைவிக்குச் சொந்தமானது. மகிந்தன் இப்போது பதறுவது இதனால்தான்! தாஜுதீன் உடல் தோண்டியெடுக்கப்பட்டதும், செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறது, மகிந்த மிருகம். அரசியல் எதிரிகளாலேயே இந்த விவகாரம் மீண்டும் கிளப்பப்படுகிறது – என்று சொன்ன மிருகம், ‘நான் பிரதமரானவுடன், தாஜுதீன் வழக்கை முறையாக விசாரிக்க உத்தரவிடுவேன்’ என்று, வாக்குறுதி வேறு கொடுத்திருக்கிறது.
மகிந்தனின் வாக்குறுதி குறித்த செய்தி வெளியானதும், வாசகர்கள் கடுப்பாகி விட்டார்கள்.
பதவியிலிருந்த இரண்டரை ஆண்டுகளில் என்ன கிழித்தாய் – என்பது ஒரு வாசகரின் கேள்வி.
மகிந்தனுக்கு வெட்கம் என்பது மருந்துக்குக்கூட இல்லை – என்கிறார் இன்னொருவர்.
அப்படியென்றால் இதற்குமுன் நடந்தது முறையற்ற விசாரணையா – என்கிறார் வேறொருவர்.
கொலைகள், முறைகேடுகளில் கைதேர்ந்த மகிந்த குடும்பத்தை ஒட்டுமொத்தமாக விரட்டி அடிக்க வேண்டும் – என்கிறார் மற்றொருவர்.
‘அன்னுந்த கலடே, தாமந்த பலடே’ என்பது ஒரு வாசகரின் சிங்களச் சாபம். (பிறருக்கு நீ என்ன செய்தாயோ, அதுதான் உனக்குத் திருப்பிக் கிடைக்கும்!)
மகிந்தனுக்கு வெட்கம் என்பது மருந்துக்குக்கூட இல்லை – என்கிறார் இன்னொருவர்.
அப்படியென்றால் இதற்குமுன் நடந்தது முறையற்ற விசாரணையா – என்கிறார் வேறொருவர்.
கொலைகள், முறைகேடுகளில் கைதேர்ந்த மகிந்த குடும்பத்தை ஒட்டுமொத்தமாக விரட்டி அடிக்க வேண்டும் – என்கிறார் மற்றொருவர்.
‘அன்னுந்த கலடே, தாமந்த பலடே’ என்பது ஒரு வாசகரின் சிங்களச் சாபம். (பிறருக்கு நீ என்ன செய்தாயோ, அதுதான் உனக்குத் திருப்பிக் கிடைக்கும்!)
டெய்லி மிரர் – பின்னூட்டத்தில் மகிந்தன் மீது வசை மாரி பொழிந்திருக்கும் சிங்கள வாசகர்களை வைத்து, ‘தேர்தலில் மகிந்தன் படுதோல்வி அடைவான்’ என்று கணித்துவிடக் கூடாது. பௌத்த சிங்களவர்களில் மிகப் பெரும்பான்மையினர், இனவெறியில் மூழ்கியிருப்பவர்கள். ‘தமிழனின் இடுப்புத் துணியையும் பிடுங்கு’ என்பது அவர்களது ‘தேசிய’ மனப்பான்மை. இல்லாவிட்டால், 27 தமிழர்களைப் பேருந்துக்குள் வெட்டி வீழ்த்தி, பேருந்தோடு சேர்த்துக் கொளுத்தியதை வேடிக்கை பார்த்திருக்குமா அந்த இனம்! ‘என்னைக் கொலைகாரன் என்கிறார்கள், பிரபாகரனை மிஸ்டர்.பிரபாகரன் என்கிறார்கள்’ என்று மகிந்தன் வைக்கிற ஒப்பாரிதான் அவர்களிடம் எடுபடும்.
டெய்லி மிரர் – வாசகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல! அது ஒரு ஆங்கில நாளிதழ். ஓரளவு படித்த, ஆங்கிலம் தெரிந்த சிங்களவர்கள்தான் அதைப் படிக்கிறார்கள். பின்னூட்டத்திலுள்ள பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, அவர்களில் மிகப் பெரும்பாலானோர் சிங்களவர்கள் என்பது தெரிகிறது. தாஜுதீன் கொலை பற்றிப் பேசுகிறபோது – ‘மகிந்த குடும்பத்தின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றெல்லாம் குமுறுகிற அவர்களில் எவரும், ஈழத்தில் ராஜபக்சே சகோதரர்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை, சுமந்திரன் மாதிரியே மூடி மறைக்கிறார்கள், அவர்களும்!
தாஜுதீன் கொலை கொடுமையானதுதான்… அதற்காக மிரர் வாசகர்கள் மகிந்தன் மீது பாய்வது நியாயம்தான்! அப்படிப் பாயும்போது, மகிந்த குடும்பத்தின் மேலதிகக் கொடுமைகள் பற்றியெல்லாம் பேசுகிறவர்கள், 2009 இனப்படுகொலை பற்றி மட்டும் சத்தமே எழுப்பவில்லையே, ஏன்? அதை அவதானித்த பிறகுதான் இதை எழுதுகிறேன். ஓர் உயிர் குறித்துப் பேசுகிற அவர்கள், ஒன்றரை லட்சம் உயிர்கள் குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன்?
சிங்கள இனத்தவரின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக, டெய்லி மிரர் வாசகர் பின்னூட்டத்தை நீண்டகாலமாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்! படித்த சிங்கள மக்களே, தங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதைக் குறித்துக் கவலைப்படவில்லை என்றால், பொறுக்கி பிக்குகளைக் கூட கடவுளாக பாவிக்கிற படிப்பறிவு அதிகமற்ற சிங்கள மக்கள் எப்படியிருப்பார்கள் என்கிற கவலை, அதைப் படிக்கிற போதெல்லாம் எனக்குள் எழும்.
தமிழரைக் கொன்று குவிக்கத் தயங்காத அரசியல் தலைவர்கள்தான் சிங்கள மக்களின் கதாநாயகர்களாகத் திகழ்கிறார்கள். அதில் எந்த மிருகம் ஆட்சிக்கு வந்தாலும் மகிந்தன் செய்ததைத்தான் தமிழர்களுக்குச் செய்யப் போகிறது…..! இதையெல்லாம் செய்யாவிட்டால் பௌத்த பிக்குகளிடமிருந்து தப்பிக்க முடியாது என்பது, பண்டாரநாயக படுகொலையிலிருந்து அவர்கள் கற்றிருக்கும் பாடம்.
இன – மத வெறியில் மூழ்கிக்கிடக்கிற ஓர் இனத்துடன் அனுசரித்துப் போகும்படி தமிழினத்துக்குப் போதிக்கிற பொறுப்பற்ற மனிதர்களை இந்த இனம் மன்னிக்கவே கூடாது. அவர்கள் மூத்த தலைவர்களாக இருக்கட்டும்…. மெத்தப்படித்த சட்டத் தரணிகளாக இருக்கட்டும்….. ஆங்கிலப் புலமை கொண்ட பத்திரிகையாளர்களாக இருக்கட்டும்….. சொந்த இனத்தைக் கூட்டிக் கொடுக்கப் பார்ப்பவர்கள் எவராக இருந்தாலும், வரலாற்றின் குப்பைக் கூடையில் அவர்களை வீசியெறிய தமிழினம் தயங்கக் கூடாது.
சிங்களவர்களாகப் பிறந்துவிட்டதால் சிங்கள மனநோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள், டெய்லி மிரர் – வாசகர்கள். அது, கருவின் குற்றம். அவர்களே, மகிந்த மிருகத்தின் மற்ற கொடுமைகளைச் சுட்டிக்காட்டும் நிலையில், அதே நாளேட்டில் மகிந்தனுக்கு மணிமகுடம் சூட்டி மகிழ்கிறார், தமிழராகப் பிறந்த ஒரு மனிதர். அவர் பெயர், டி.பி.எஸ்.ஜெயராஜ். தமிழகத்தின் ஹிந்து நாளேட்டுக்கு, கொழும்பு நிருபராக இருந்தாரே, அதே ஜெயராஜ் அண்ணா.
இலங்கையில் தேர்தல் நடக்கும்போதெல்லாம், தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (த.தே.கூ.) வழக்கம். ஜெயித்த பிறகு, ஓரிருவரைத் தவிர மற்றவர்கள், சிங்கள ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாகவே தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிற மிக மிக வினோதமான வழக்கமும் அங்கேதான் நடைமுறையில் இருக்கிறது.
தேர்தல் களங்களில், ‘விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு த.தே.கூ.தான்’ என்று நீட்டி முழங்குபவர்கள், நாடாளுமன்றத்தில் ‘புலிகளின் பயங்கரவாதம்’ என்று அரச பயங்கரவாதிகள் குறிப்பிடும்போது, ‘அந்த விடுதலைப் போராட்ட வீரர்களை எப்படி கொச்சைப்படுத்தலாம்’ என்று சண்டை பிடித்ததில்லை. இன்னும் ஒருபடி கீழிறங்கிப் போய், ‘புலிகளின் பயங்கரவாதத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதில்லை’ என்று பிரகடனமே செய்து, சிங்கள எஜமானர்களுக்கு நாக்கு வழிக்கக்கூடத் தயங்கியதில்லை.
கூட்டமைப்பின் இந்த மண்ணுளிப் பாம்பு முகம், இந்தமுறை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் களமிறங்கியிருக்கும் அதிருப்தியாளர்கள், கூட்டமைப்புக்கு பெருத்த சவாலாக மாறியிருக்கிறார்கள். டெய்லி மிரரில் ஆகஸ்ட் 4ம்தேதி ஜெயராஜ் எழுதியிருக்கும் கட்டுரை, கஜேந்திரகுமாருக்கு ஆதரவு பெருகுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எரிச்சலோடுதான் எழுதப்பட்டிருக்கிறது.
யாழ் மாணவர்கள் குறித்து எழுதும்போதுகூட, ராஜபக்சேவுக்கு பங்கா போட தவறவில்லை ஜெயராஜ். “மகிந்த அதிபராகவும், அவரது இளவல் கோதபாய பாதுகாப்புச் செயலராகவும் ஆனபிறகு, அரசு திருப்பியடிக்கத் தொடங்கியது. நெருப்பை நெருப்பால் சந்தித்தார்கள் அவர்கள்” என்பது பிறப்பால் தமிழரான ஜெயராஜின் மேலான அபிப்பிராயம். (கருவின் குற்றம் – என்றெல்லாம் நீங்கள் சொல்லவே முடியாது. ஜெயராஜ், பச்சைத் தமிழர்.)
ராஜபக்சேவுக்கு முன் அரியணையில் இருந்த பௌத்த சிங்கள மிருகங்கள், தமிழர் தாய்மண்ணில் ஒரு புழு பூச்சிக்குக் கூட ஊறு விளைவித்ததில்லை பாருங்கள்…. அதைத்தான் எழுதுகிறார் ஜெயராஜ் அண்ணா! முதலில் நெருப்பு வைத்தவர்கள் தமிழர்கள் தான் என்பது, அவரது சாமர்த்தியமான வாதம்.
ராஜபக்சே வந்தபிறகுதான், நெருப்பை நெருப்பால் சந்திப்பது என்கிற முடிவுக்கு இலங்கை வந்தது – என்று எழுதுகிற ஜெயராஜ் அண்ணாவுக்கு, 1983ல் கொழும்பில் 27 தமிழர்களுடன் சேர்ந்து எரிந்த பேருந்து படத்தை யாராவது அனுப்பி வைப்பது நல்லது. ‘கொழும்பிலிருந்து எங்கள் விமானம் மேலெழும்பியபோது கீழே கொழும்பு எரிந்துகொண்டிருந்தது’ என்கிற நோர்வே பயணியின் பயணக் குறிப்பையும் சேர்த்து அனுப்பவேண்டும் அவருக்கு!
எவருடைய அயோக்கியத்தனத்தையும் ஓர் இனம் மன்னித்துவிடலாம், மறந்து விடலாம். ஆனால், படித்த அயோக்கியர்களை, அவர்கள் ஜெயராஜாக இருந்தாலும் சரி, சுமந்திரன்களாக இருந்தாலும் சரி, மன்னிக்கவே கூடாது. ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்’ என்பது கோபக் கவிஞன் பாரதியின் சாபம்.
67 ஆண்டுகளாக தமிழினத்தை நசுக்குகிற, கொன்று குவிக்கிற, சிங்கள இனவெறி குறித்து தனக்குத் தெரியவே தெரியாது என்று காட்டிக்கொள்ள முயல்வதன் மூலம் எதைச் சாதிக்க நினைக்கிறார் ஜெயராஜ் அண்ணா! தன்னுடைய தலைமயிரிலும், சுமந்திரனின் தலைமயிரிலுமே தமிழருக்குத் தூக்குக் கயிறு தயாரித்துவிட முடியும் என்று நினைக்கிறாரா?
உலகம் முழுக்க, தமிழினத்துக்கு உள்ளேயிருந்தே, ‘2009 இனப்படுகொலை’யை மூடிமறைக்கும் கருத்துகள் வெளியாக வாரியிறைக்கின்றன இலங்கைத் தூதுவரகங்கள். கனடாவிலும் அதுதான் நடக்கிறது என்பதை உணர்த்துகிறது, ஜெயராஜ் அண்ணாவின் கட்டுரை.
அவரும் ஒரு பத்திரிகையாளர் என்பதால், அண்ணா, அண்ணா என்று வாய் நிறைய ஜெயராஜ் அண்ணாவை அழைக்கிறேன் நான். அதற்காக, ஜெயராஜ் அண்ணாவின் நெருங்கிய உறவினரான சுமந்திரனையும் ‘அண்ணா’ என்று அழைத்துவிட முடியாது. (சுமந்திரன் உங்களது மைத்துனராமே! உண்மையா அண்ணா?)
உங்களைவிட ஆங்கிலப் புலமை மிக்க எங்கள் முதல்வர் விக்னேஸ்வரனும், எங்கள் சகோதரி உஷா ஸ்கந்தராஜாவும், உன்னதமான மனிதர் விஸ்வநாதனும், தமிழகத்தின் குரலாகத் திகழும் வைகோவும், எம் இனத்தில் பிறந்திருக்க வேண்டிய சிங்கள நேர்மையாளர் பிரையன் சேனவிரத்னவும், கல்லம் மேக்ரே என்கிற மானுடனும், தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்கப் போராடுகிறார்கள். இனப்படுகொலையை மூடி மறைக்கத் துணைபோன சுமந்திரனைக் காப்பாற்ற தனி மனிதராகப் போராடுகிறார் ஜெயராஜ் அண்ணா. பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது.
ஒன்றே ஒன்றை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், ஜெயராஜ் அண்ணா!
இனப்படுகொலை – என்கிற வார்த்தையைக் கேட்டாலே எரிந்து விழுகிற சுமந்திரனை அம்பலப்படுத்துவதால், கஜேந்திரகுமார் மீது உங்களுக்குக் கோபம் இருக்கலாம்.
அதற்காக, தமிழினத்தின் குரலை கொழும்பிலிருந்து துணிந்து எழுப்பியதற்காகவே கொல்லப்பட்ட கஜேந்திரக்குமாரின் தந்தை குமார்பொன்னம்பலத்தைச் சிறுமைப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ‘வெட்கமேயில்லாமல் பிறரைப் புகழ்ந்து பேசிப் பிழைத்தவர்’ என்று – எம் இனத்துக்காக உயிரைக் கொடுத்த அந்த மாமனிதரைக் கேவலப்படுத்த, உங்களைப் போன்ற வார்த்தை வியாபாரிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது?
இனப்படுகொலை – என்கிற வார்த்தையைக் கேட்டாலே எரிந்து விழுகிற சுமந்திரனை அம்பலப்படுத்துவதால், கஜேந்திரகுமார் மீது உங்களுக்குக் கோபம் இருக்கலாம்.
அதற்காக, தமிழினத்தின் குரலை கொழும்பிலிருந்து துணிந்து எழுப்பியதற்காகவே கொல்லப்பட்ட கஜேந்திரக்குமாரின் தந்தை குமார்பொன்னம்பலத்தைச் சிறுமைப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ‘வெட்கமேயில்லாமல் பிறரைப் புகழ்ந்து பேசிப் பிழைத்தவர்’ என்று – எம் இனத்துக்காக உயிரைக் கொடுத்த அந்த மாமனிதரைக் கேவலப்படுத்த, உங்களைப் போன்ற வார்த்தை வியாபாரிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது?
நெருப்பை நெருப்பால் தான் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள் ராஜபக்சே சகோதரர்கள் – என்று கூச்ச நாச்சமின்றி எழுதிப் பிழைப்பதற்கும், சிங்கள மிருகங்களின் பாதங்களை நக்கிப் பிழைப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது அண்ணா!
உறவினர் சுமந்திரனைப் பாதுகாக்கவும், கஜேந்திரக்குமாரை அவமதிக்கவும், குமார்பொன்னம்பலத்தைச் சிறுமைப்படுத்தத் தயங்காத உங்களுக்குப் பாடம் கற்பிப்பதற்காகவாவது கஜேந்திரக்குமார் வெற்றி பெற வேண்டும், அண்ணா! கஜேந்திர குமாரும் அவரது தோழர்களும் வெற்றி பெறுவது மிக மிக முக்கியம். இனப்படுகொலை குற்றத்தை மூடி மறைக்கத் துணைபோன சுமந்திரன் படுதோல்வி அடையவேண்டியது அதைவிட முக்கியம்!
‘இனப்படுகொலை என்றெல்லாம் சொல்லக் கூடாது’ என்பது சம்பந்தனின் நிலையாக இருக்க வாய்ப்பில்லை, சுமந்திரன்தான் அப்படியெல்லாம் பேசவைக்கிறார் – என்பது பலரது குற்றச்சாட்டு. இப்போதுதான் தெரிகிறது ஜெயராஜ் அண்ணா, சுமந்திரனை அப்படிப் பேசவைத்தது நீங்கள் தான் என்பது! மச்சானும் மச்சினனும் சேர்ந்து மகிந்தனைக் காப்பாற்ற முயன்றது எதனாலென்று தனியாக ஒரு கட்டுரை எழுதுங்கள் அண்ணா! அதைப் படிக்க ஆவலாதியாக இருக்கிறேன்.
எது எப்படியிருந்தாலும், உங்களையும் அறியாமல், டெய்லி மிரர் கட்டுரையில், முதல்வர் விக்னேஸ்வரனின் உறுதிப்பாடு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்களே… அதற்காக உங்களுக்கு அடுத்த இதழில் நன்றி சொல்லப் போகிறேன் அண்ணா!


No comments:
Post a Comment