August 26, 2015

வித்தியா கொலை வழக்கு இரத்த மரபணு பரிசோதனை செய்ய உத்தரவு!(வீடியோ, படங்கள் இணைப்பு)

பாலியல் வன்கொடுமையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணையின் போது சந்தேகநபர்களின் இரத்த மாதிரி மரபணு பரிசோதனை செய்ய அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று இரத்த மாதிரி மரபணு பரிசோதனை செய்ய, சிறைச்சாலை அத்தியட்சகரின் ஊடாக விண்ணப்பித்து துரித கதியில் அதனை நிறைவேற்றுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த கொலை வழக்கின் சான்றுப்பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு அரச இராயன பகுப்பாய்வு திணைக்கள பணிப்பாளரிற்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
சந்தேக நபர்களை நோக்கிய நீதிவான் ஏதாவது கூற விரும்புகின்றீர்களா என வினவிய வேளை மூன்றாவது சந்தேக நபரான சந்திரகாசன் என்பவர் தான் எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும் பொலிசார் அடித்து வெள்ளை கடதாசியில் கையொப்பம் ஒன்றினை பெற்று இவ்வழக்கில் கைது செய்ததாக தெரிவித்தார்.
இதனை செவிமடுத்த நீதிவான் நீர் குற்றம் செய்தவரா இல்லையா என்பதை நீதிமன்றம் மிக விரைவில் தீர்மானிக்கும் அதுவரைக்கும் பொறுத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் மாணவி வித்தியா கொலை வழக்கில் மாணவி சார்பாக ஆஜரான சட்டத்தரணி கடந்த வழக்குத்தவணையின் போது சமூகமளிக்காத காரணத்தால் அவருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment