August 9, 2015

சுமந்திரனுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்! - சிவில் அமைப்புக்கள் தீர்மானம்!

வவுனியாவில் நடைபெறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் எம்.பியும் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டால் கறுப்புக் கொடி போராட்டம் நடத்துவது என வவுனியாவின் சில சிவில் அமைப்புக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

வவுனியா கலைமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் புதிய மாக்ஸிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் இந்த தேர்தல் சாதிக்கப்போவது என்ன..? என்ற கருப் பொருளில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே சில சிவில் அமைப்புக்கள் இவ்வாறு தீர்மானித்துள்ளன.

வன்னியில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என தெரிவித்த சிவில் அமைப்பு பிரதிநிதிகள் சனல் 4வின் உடைய போர்க்குற்ற ஆதாரங்களை வெளிநாடுகள் ஆதரிக்கின்ற அதேவேளை சிங்கள கட்சிகள் கூட அதனை பொய் என நிரூப்பிக்க முடியாத நிலையில் உள்ளன. ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதி என தன்னை கட்டிக் கொள்ளும் சுமந்திரன் சனல் 4 போர்க்குற்ற ஆதாரத்தை பொய் எனவும் திரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி சிங்கள தலைவர்களை மகிழ்வித்துள்ளார். இதனை சிவில் அமைப்புக்களாகிய நாம் வன்மையாக கண்டிப்பதுடன் நாளை நடைபெறும் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் இது தொடர்பாக கேள்வி கேட்பது எனவும் சுமந்திரன் கலந்து கொண்டால் கறுப்புக் கொடி காட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment