பிரிட்டன் நாட்டின் கேயர்பில்லி நகர் அருகே உள்ளது
அபெர்ட்ரிட்வெர் என்ற கிராமம். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய 1912 ஆம் ஆண்டில் பிளோரன்ஸ் டேவிஸ் மற்றும் கிளெனிஸ் தாமஸ் என்ற இரட்டை பெண் குழந்தைகள் இக்கிராமத்தில் பிறந்தனர்.
கடவுளின் கருணையால் 100 வயதை தாண்டியுள்ள இந்த சகோதரிகள் இன்று வரை அதே கிராமத்தில் ஒன்றாக வசித்து வருகின்றனர். உலகின் வயதான இரட்டையர்களான இவர்களுக்கு தற்போது 5 குழந்தைகளும், 12 பேரக்குழந்தைகளும், 21 கொள்ளுப்பேரன்களும் உள்ளனர். தங்களின் 103 வருட வாழ்க்கையில் நடந்த பொன்னான நிகழ்வுகளை புகைப்பட ஆல்பமாக இரு சகோதரிகளும் தொகுத்து வைத்துள்ளனர்.
தொழில்நுட்பமோ, போக்குவரத்து வசதிகளோ இல்லாத காலத்தில் பிறந்த இச்சகோதரிகள், இரண்டு உலக போர்களை சந்தித்த பின்னர் இன்றைய நவீன உலகில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தனது தாய் கிளெனிஸ் மற்றும் சிற்றன்னை புளோரா குறித்து 65 வயது மகள் ஸ்டேசி கூறுகையில், இருவரும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். எந்த ஒரு வெளிநாட்டிற்கும் இவர்கள் செல்லவில்லை. எனினும் எப்போதும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்றார்.
தனது குழந்தை வயதில், பல நல்ல கதைகளை தாய் கிளெனிஸ் கூறியதை ஸ்டேசி நினைவுபடுத்தினார். தங்கள் ஊருக்கு முதன் முதலில் பேருந்து வந்தபோது கிளெனிஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறிய ஸ்டேஸ், தற்போதுள்ள மக்கள் மிக வேகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கிளெனிஸ் மற்றம் புளோராவின் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல என்றார்.
கிளெனிஸ் மற்றும் புளோராவின் தாய் தந்தையர், குழந்தை பருவத்திலிருந்து இருவரையும் கண்டிப்புடன் வளர்த்ததுடன், இளம் வயதில் நடனமாடக்கூட அனுமதித்ததில்லை. முதலில் 1932 ஆம் ஆண்டு வில்லியம்ஸ் ஸ்கிரிவன்ஸ் என்பவரை கிளெனிஸ் திருமணம் செய்து கொண்டு தந்தை வீட்டை விட்டு வெளியேறினார். திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் தம்பதியர் ஸ்டேசியை மகளாக தத்தெடுத்தனர். 67 வயதில் வில்லியம்ஸ் மரணமடைந்தார்.
கிளெனிஸ் முதலில் மூன்று குழந்தைகளுக்கு பாட்டியானார். பின்னர் 9 குழந்தைகளுக்கு கொள்ளுப்பாட்டியானார். இந்நிலையில் தனது 60வது வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்டார் கிளெனிஸ். அதே போல் புளோரன்சும் ஜான் டேவிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 48 வயதிலேயே டேவிஸ் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகளும், 9 பேரக்குழந்தைகளும், 12 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளது.
இருவரும் திருமணமான பின் சில காலம் பிரிந்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த வீடுகளில் இருவரும் குடியேறினர். அன்றிலிருந்து இன்று வரை இரு சகோதரிகளும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், உதவி செய்து கொண்டும் காலத்தை கழிக்கின்றனர். இரு சகோதரிகளும் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நாமும் இறைவனை பிராத்திப்போமா...
|
No comments:
Post a Comment