தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசியல் பலம் ஒருபக்கம் சாய்ந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக இலங்கையில் விடுதலைப்புலிகள் அதியுச்ச பலத்தில் இருந்த காலகட்டத்தில் பேரம் பேசும் சக்திகளாக அவர்கள் மாறியிருந்தார்கள்.
பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்திய இலங்கை அரசாங்கம், தவிர்க்க முடியாதவேளையில் அவர்களோடு பேச்சுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
2002ம் ஆண்டு காலப்பகுதியில், அன்றைய பிரதமரும் இன்றைய அதிகார குவியல்களோடு விளங்கும் ரணில் விக்ரமசிங்க இதனை செவ்வனே செய்திருந்தார்.
பேரம் பேசவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்ததே தவிர, அது புலிகளுக்கு இருந்ததில்லை. இருந்தும் சமாதானத்தின் மீதும், இணக்கப்பாடுகள் மீது நாங்களும் அக்கறை கொண்டவர்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் புலிகளுக்கு ஏற்படவே அவர்களும் ஒப்பந்தத்திற்கு உடன்பட்டனர்.
பயங்கரவாத அமைப்பு என்று தாங்களே முத்திரை குத்தியிருந்தாலும், தமக்கு ஆபத்து என்று வரும் பொழுது அவர்களோடு பேசவும் தயாராக இருந்தது சிங்களம்.
அதே நிலைமை இப்பொழுது மீண்டும் உருவாகியிருக்கின்றது. அது சிங்களத் தரப்பு தமிழர் தரப்போடு பேரம் பேசும் முடிவல்ல, தமிழர் தரப்பு சிங்களத்தோடு பேரம் பேச வேண்டிய கட்டாயமாகியிருக்கின்றது.
தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த 2015ம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலில் பல மாற்றங்களை இலங்கை நாடாளுமன்றம் சந்தித்திருக்கின்றது.
குறிப்பாக, இத் தேர்தலில் இருந்து இலங்கை நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் அதிகரித்திருக்கின்றன. இதுவரை காலமும் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அது பிரதமருக்கும், நாடாளுமன்றத்திற்கும் சென்றிருக்கின்றது.
இன்னொரு புறம் நோக்கின், கடும்போக்கு சிங்கள அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால் தேர்தல் முடிந்த கையோடு தனது பெரும்பான்மை ஆட்சியை தக்க வைக்க ரணில் எடுத்த முயற்சியோ பாராட்டத்தக்கதாகவே பார்க்கப்படுகின்றது.
தேர்தலின் பின்னர் அமையப்போகும் ஆட்சியானது தேசிய அரசாங்கம் என்கின்றார். அதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்தாகியிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கமாக செயற்படுவோம் இணைந்து என்றும், பின்னர் விரும்பினால் அது நீட்டிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது ரணிலின் மகா ராஜதந்திரம். இதுவரை காலமும் ரணில் பிரதமராக, பின்னர் ஆட்சி கலைக்கப்பட்டு ரணில் பதவியிழந்ததை அவர் தனது வாழ்க்கையின் பாடமாக எடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.
இன்னொரு விதத்தில் ரணிலின் விந்தையை குறிப்பிட்டுச் சொன்னால், அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு, பங்களிப்பு இன்றி ஆட்சியமைத்து வழிநடத்தவே முயற்சி செய்திருக்கின்றார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியமைத்தால், அது தனது அரசுக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பதில் அவர் தெளிவாகவே இருக்கின்றார். அதுவே தேசிய அரசாங்கத்தின் முதல் நெறிப்பாடு.
மகிந்தரை காப்பாற்றலும், போர்க்குற்ற விசாரணை நிர்மூலமாக்கலும்…!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மிகப்பெரியதொரு பொறுப்பாக மகிந்தரை காப்பாற்றல் தோன்றியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள்.
இப்பொழுது போர்க்குற்ற விசாரணைகள் பற்றியதான பேச்சுக்களே அதிகம் அடிபடுகின்றன. இதுவே ரணிலுக்கு மிகப்பெரிய சவால்.
நாட்டில் பயங்கரவாதத்தை அழித்து அமைதியை நிலையாட்டிய மகிந்த சிந்தனையில், இருந்து விலகி, பயங்கரவாதத்தை அழித்த மகிந்தரை காக்க வேண்டிய கடப்பாட்டை ரணில் மேற்கொள்கின்றார்.
தேர்தலுக்குப் பின்னர் பல சுற்றுப்பேச்சுக்கள் மகிந்த தரப்பிற்கும், ரணில், மைத்திரி தரப்பிற்கு இடையில் நடந்து முடிந்திருக்கின்றன. அதில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டும் இருக்கின்றன என்பதை அவதானிக்க முடிகின்றது.
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஒத்திவைத்தல், அல்லது படிப்படியாக நிர்மூலமாக்கள்.
மகிந்த ராஜபக்சவையும், அவரின் உறவினர்களையும், ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பது அல்லது குற்றச்சாட்டுக்களின் விசாரணைகளை இழுத்தடிப்பது.
ரக்பி வீரரின் வழக்கு விசாரணையை மூடி மறைப்பது.
தேசிய அரசாங்கத்தில் மகிந்த தரப்பில் உள்ளவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது.
எதிர்க்கட்சி அந்தஸ்தை மகிந்தர் தரப்பிற்கும், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்தரை நியமிப்பதும்.
எக்காரணம் கொண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை எதிர்க்கட்சியினராக அமர விடக்கூடாது.
சர்வதேச நகர்வுகள்
இவ்வாறான உடன்படிக்கைகளே மேற்கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை மாற்றி, அதைப் புலிகள் மீது சுமத்துவதற்கான நடவடிக்கையை தேர்தல் முடிந்த நாளில் இருந்து அவதானிக்க முடிகின்றது.
கடந்த வாரம் தேர்தல் முடிந்தாயிற்று. பெறுபேறுகளும் வெளிவந்துவிட்டன. அதற்குள் அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் இலங்கை வந்துள்ளார்.
இது வரவிருக்கும் போர்க்குற்ற அறிக்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்களும் விசாரணை இழுத்தடிப்புக்களும்.?
மகிந்த அன்ட் கம்பனியினர் மீதான குற்றச்சாட்டுக்களையும், ஊழல் சம்பந்தமான விசாரணைகளையும் காலம் தாழ்த்துவதற்கும், அவற்றை காலப்போக்கில் இழுத்தடிப்புச் செய்வதற்கும் உடன்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.
அந்த உடன்படிக்கையின் படியே கோத்தபாய ராஜபக்ச புதிய அரசாங்கத்தோடு தமது கட்சி உடன்பட்டுப் போக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ஒருபடி மேலாகச் சென்று மகிந்த ராஜபக்ச ரணிலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செய்திருக்கின்றார்.
இவையெல்லாம் உடன்பாட்டின் அடிப்படையில் நிகழும் மிகப்பெரிய நாடகமாக மாறியுள்ளது. தேசிய அரசாங்கம், அதன் விளைவுகள், எதிர்க்கட்சி அந்தஸ்தை தனது கட்சிக்கு வழங்க வேண்டும் என்று மைத்திரி சொல்வது எல்லாம் இலங்கை அரசாங்கத்தில் உள்ள அத்தனை பேரும் இன்னமும் தமது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருப்பதனை காட்டி நிற்கின்றது.
இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க போர்க்குற்ற விசாரணைக்கு இடமில்லை என்றும், யாரையும் சர்வதேச நீதிமன்றத்தில் அனுமதிக்க விடமாட்டேன் என்றும், அதற்கு தமது அரசாங்கம் இடம்தராது என்றும் அறிவித்திருக்கின்றார்.
இதுவரை காலமும் மகிந்தரோடு முட்டி மோதி அரசியல் செய்த தமிழர் தரப்பிற்கு இப்பொழுது மிகப்பெரியதொரு சவால் காத்திருக்கின்றது.
அதாவது அதிகாரங்கள் குவியப்பெற்ற நாடாளுமன்றத்தோடு, கூட்டாட்சியில் ரணில், மகிந்த, மைத்திரி, சந்திரிக்கா, என்று சிங்களத்தின் முக்கிய புள்ளிகள் ஒருபக்கம்.
சர்வதேசம், சர்வதேசத்திற்கு சென்ற தமிழர் பிரச்சினை, மேல் எழுந்த போர்க்குற்றச் சாட்டுக்களை தக்க வைத்திருத்தல்.
எல்லாவற்றுக்கும் மேலாக, வடக்குக் கிழக்கில் அடுத்த தலைமுறையினரை கவர்ச்சி காட்டி அவர்களை தம்பால் ஈர்க்கும் புதிய உத்தியையும் தொடங்கியிருக்கின்றார்கள். அடுத்தடுத்த தேர்தல்களில் வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையினக் கட்சிகள் அதிக ஆசனங்களைக் கைப்பற்றக் கூடிய சூழ்நிலைகள் தோன்றியிருக்கின்றன.
இத்தனையையும் சமாளித்து தமிழர் அரசியலைக் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பெரிய வேலையை தமிழர்களின் ஆணையைப்பெற்று இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றிருக்கின்றது.
பிரிந்து நின்றவர்கள் எல்லாம் தேசிய அரசாங்கத்தின் கீழ் ஒன்றாகிவிட்டார்கள். ஆளும் கட்சியும் அவர்களே! எதிர்க்கட்சியும் அவர்களே…! இந்நிலையில் என்ன செய்யப்போகின்றார்கள் தமிழர் தரப்பு..
பல லட்சம் உயிர்களை காவுகொண்டு சர்வதேசம் ஏறிய எமது உரிமைப்போராட்ட அலைகள் அடக்கப்படுமா? அல்லது அது கிடப்பில் போடப்படுமா?
தமிழர் தரப்பிற்கு இது நெருக்கடிமிக்க காலம் தான். புலிகள் எதிர் கொண்ட களமுனைத் தாக்குதல்களை விடவும் இது ஆபத்தானது. நிதானம், ராஜதந்திரங்கள், ஏராளம் தேவை. பொருத்திருந்து பார்ப்போம்.
எஸ்.பி.தாஸ்
No comments:
Post a Comment