August 12, 2015

எம் பெண்களை பேரெழுச்சி கொண்ட சாதனைப் பெண்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு! - சிவரதி ராச்குமார்!

நான் ஒரு இசை ஆசிரியர்  என்றும் ,  பாராளுமன்றத்தில்  எதைச் சாதிக்க முடியும் என்றும்  என்னிடம் பலர்  கலந்துரையாடியதுண்டு .  நான் ஒரு இசை ஆசிரியர் என்பதற்கும் அப்பால்  அரங்கச் செயற்பாட்டுக் குழுவுடன்  இணைந்து  அரங்க செயற்பாட்டின் ஊடாக  பெண்களின்  ஆழ்மனப் பிரச்சனைகளை  வெளிப்படுத்தி  ஆற்றுப்படுத்தி  அவர்களின் எதிர்காலம் பற்றி   சிந்திக்க  வைப்பவர்களாக இருந்தோம் .

ஒடுக்கப் பட்டவர்களாக , அவலநிலையில்  இருந்த பெண்களை ஆக்ரோஷ  நிலைக்கு  கொண்டு வரமுடியும்  என்ற அனுபவத்தின் ஊடாக  எம் பெண்களை  பேரெழுச்சி கொண்ட  சாதனைப் பெண்களாக  மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.  என வன்னி  மாவட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  வேட்பாளர்  சிவரதி ராச்குமார் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் போரால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுடனான  சந்திப்பின் போது  உரையாற்றிய அவர் மேலம் தெரிவிக்கையில்,

இசைக்கும் அரங்கிற்கும் மிகப் பெரிய  சக்தி இருக்கின்றது. அந்த சக்தியை சர்வதேச அரங்கில்  ஒலிக்க வைத்தது  '' பொங்குதமிழ் '' ,ஒடுக்கப்பட்ட இனம், ஒடுக்கப்பட்ட  மக்கள் தங்கள்  உள்ளார்ந்த விருப்பை , உரிமையை வெளிப்படுத்த   அரங்கினாலும்  , இசையாலும் முடியும். ஒடுக்குதலை உடைத்  தெறிவதற்கான  ஆயுதமாகவே நான் இசையை பார்க்கின்றேன் .  அது மனங்களின் ஆத்மார்த்த  விடுதலைக்கான  ஆற்றுப்படுத்தல் பொறியாகவும்  உள்ளது. இதனால்  ஒடுங்கிக் கிடக்கும்  எம் ஈழப் பெண்களை சாதனைப் பெண்களாக்க என்னால்  முடியும்.  என் பிரதிநிதித்துவப் பலத்தினூடாக எம் ஈழப் பெண்களுக்காக  என்னால் போராட முடியும் . நாம் அதை கடந்த காலங்களில் எம் அனுபவத்தின் ஊடாக  இயங்கி வருகின்றோம் . ஒவ்வொரு கால கட்டத்திலும் எம் மக்கள் போர்ப்பாதிப்பை சந்தித்து தான் வருகின்றனர். ஆனால் 2009 இன் பின்னர்  போர் என்பது மிகப் பெரும் அழிவை எமக்கு ஏற்படுத்தி உள்ளது. இந்த  அழிவு  எம் பெண்களை அதிகம் பாதித்து உள்ளது.

 உறவுகளை இழந்து தனித்து வாழும் அவலத்திலும்  எம் பெண்கள் உள்ளனர் . மனவடு இயலாமை , பொருளாதார நெருக்கடி என்பவற்றால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து கரம் கொடுக்க வேண்டும்.

பெண்களின் உண்மையான  விருப்பங்களை வெளிப்படுத்துவதற்கான  களமும் காலமும் அவசியம் அதனால் தான்  பெண்களுக்கான   பிரதிநிதித்துவம்  அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு பல  பெண்கள் ஒன்றிணைந்து முழுப் பெண்களின் விடுதளைக்காகவும் போராட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment