July 30, 2015

பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்!

சிங்கள பேரினவாத கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கோ வாக்களிக்க வேண்டாம் என்றும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி போன்ற கட்சிகள் தமிழ் தேசியத்தினை வலியுறுத்துகின்ற கட்சிகள் என்பதனால் அவற்றிற்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரும்பான்மையாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தால், எதிர்காலத்தில் வரும் தேசிய நிர்ணய சபைகளில் பேரம் பேசுவதற்கோ அல்லது ஏனைய விடயங்களில் பேரம் பேசவோ முடியும் எனவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரட்டை வேடம் போடுகின்றார்.
இந்த கம்பனியில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சம்பந்தம் இல்லை. இது மைத்திரிபால கம்பனி என்று கூறுகின்றார்கள். யாரை ஏமாற்றுகின்றீர்கள், யாருடைய காதில் பூ சுற்றுகின்றார்கள்.
வெற்றிலைச் சின்னத்திற்கு அளிக்கும் வாக்குகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அளிக்கும் ஆதரவு வாக்கு என்பதனை மறந்து விட வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் தெளிவாக சொல்கின்றோம் என்றார்.
தென்னிலங்கை கட்சிகள் எமது மக்களை கொன்று குவித்தவர்கள். அந்த கட்சிகளுக்கு எந்த காரணம் கொண்டும் வாக்களிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது, அறுந்த வீணையை வாசிக்க ஆரம்பித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா.
தான் அர்ப்ப சொற்ப வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தினைப் பெற்றால், ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றாலும் சரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் சரி ஒட்டிக் கொண்டு அமைச்சர் பதவியினை எடுக்க முடியுமென டக்ளஸ் தேவானந்தா கனவு காண்கின்றார்.
அதனால் தான் வெற்றிலையை விட்டு, வீணைக்கு வந்துள்ளார். அவர்களையும் மக்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
முற்போக்கு கொள்கையுடைய கட்சிகளுக்கு வாக்களிப்பதனை விரோதமாக பார்க்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment