June 7, 2015

எமது இனத்துக்கான சுபீட்சமான காலம் நெருங்கி வருகிறது! பா.உறுப்பினர் சி.சிறீதரன் (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் இன்று ஆதவன் விளையாட்டுக்கழக தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டார்.
இதன்போது மக்கள் தமது குறைபாடுகளை தெரிவித்தனர்.

பாரதிபுரம் கிளிநொச்சி மாவட்டத்தில் முக்கியமான கிராமங்களில் ஒன்று இங்கு பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன. குறிப்பாக வீதிகள் திருத்தப்பட வேண்டும். வீதிகள் அநேகமானவை பாழடைந்து கிடக்கின்றன. இதன் காரணமாக பல்வேறு கலாச்சார சீரழிவுகளை எதிர்நோக்கும் அபாயம் காணப்படுகின்றது.
முன்பு எங்களுடைய கிராமத்தின் வீதிகள் அழகிய தமிழ் பெயர்களால் அழைக்கப்பட்டன. இன்று கிராமங்களில் வீதிகள் கசிப்பு ஒழுங்கை என்றும் கஞ்சா ஒழுங்கை என்றும் முகவரிகள் மாறி வருகின்றன. அந்த அளவிற்கு கட்டுக்கோப்பு இல்லாத நிலையும் சமுக அக்கறையின்மையும் தலைதூக்கி காணப்படுகின்றன.
எல்லாக்கிராமங்களிலும் கசிப்பு கஞ்சா வியாபாராம் நடக்கின்றது. கஞ்சா காரரை பிடித்து பொலிஸிடம் கொடுத்தால் கஞ்சா வியாபாரி பத்து நாளில் வெளியே வந்துவிடுகின்றான். அந்த பொலிஸ்காரருக்கும் கசிப்பு, கஞ்சா கள்ளச்சாராயக்காரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கஞ்சா வியாபாரிகள் ரவுடிக்குழுக்கள் பற்றி பொலிசில் முறைப்பாடு செய்தால் அந்த ரவுடிக்கும்பல்களுக்கு முறைப்பாடு செய்தவர்களின் பெயர்களை சொல்லும் அளவிற்கு பொலிஸ் நிர்வாகம் இயங்கி வருகின்றது..
பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் ரவுடிகள் கஞ்சா வியாபாரிகள் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் உலவுகின்றார்கள். இவர்கள் மாணவர்கள மத்தியிலும் போதைப்பொருட்களை பரப்பக்கூடிய ஆபத்துக்காணப்படுகின்றது. அநேகமான மக்களுக்கு இந்த சமுக விரோதசெயல்களோடு தொடர்புடையவர்களை தெரியும். ஆனால் ரவுடிகள் தொடர்பான அச்சம் காரணமாக அவர்களால் சொல்ல முடிவில்லை. அச்சப்படுகின்றார்கள் .வேலியே பயிரை மேய்கின்ற கதையாக பொலிசாரும் ரவுடிகள் பக்கமே இருக்கின்றார்கள் என மக்கள் பெருத்த ஆதங்கத்துடன் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தினர்.
இதற்கு பதிலளித்த பா.உறுப்பினர் சி.சிறீதரன்
எமது சமுகத்தின் மீதான உங்கள் அக்கறையும் ஏக்கமும் மிகப்பெறுமதியானது. ஏனெனில் நாங்கள் எல்லோரும் ஒரு ஒழுக்கமான பாராம்பரியத்துள் கடந்த காலத்துள் வாழ்ந்து வந்தவர்கள். எங்கள் கிராமங்கள் நல்லொழுக்கங்களுடன் வாழ்ந்து வந்தன. ஆனால் போருக்குப் பின்னால் இந்த நிலையை திட்டமிட்டு எதிரிகள் உருவாக்கி எமது இனத்தின் அபிலாசைகளை திசைதிருப்பி போராட்டங்களை திசை திருப்பி சமூகச்சீரழிவுகளை ஊக்குவித்து சாதிய பாகுபாடுகளுக்குள் தள்ளி எம்மை இப்படி சமூகப்பிரச்சனைக்கு முகங்கொடுக்கின்றவர்களாக ஆக்க நினைத்ததன் வடிவங்கள்தான் நாம் கண்டுகொள்பவை. இது இனத்தை சிதைக்கின்ற ஒரு உத்தி. நாம் இதை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். நீங்கள் விளங்கிக்கொள்கின்றீர்கள். அந்த விழிப்புணர்வு உங்களிடம் இருக்கின்றது. இந்த விழிப்புணர்வை பரவச் செய்து அதை செயல்வடிவமாக்கி சமூகச்சீரிவுகளை கட்டுப்படுத்தும் கிராமிய குழுக்களை உருவாக்கி அதை செயல்பட வைக்க வேண்டியது. எமது கிராமங்களின் கடமை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் கிராங்கள் தோறும் விழிப்புக்குழுக்களை உருவாக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். இந்த விழிப்புக்கள் குழுக்களில் கிராமத்தின் மூத்தவர்கள் இளைஞர்கள் பெண்கள் அங்கம் வகிப்பதுடன் இதன் செயற்பாடுள் பொலிசாருடன் இணைக்கப்படும். இதன் மூலம் நமது கிராமங்களை திருத்தி நல்லொழுக்கத்துள் கொண்டுவர நாம் அனைவரும் பாடுபடவேண்டியவர்களாக இருக்கின்றோம். இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணம் நம்மிடம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் இருப்பதே. வடக்கு மாகாண சபையிடம் இந்த அதிகாரங்கள் இருந்திருப்பின் முதமைச்சரின் கட்டளையின் கீழ் இந்த சமுக விரோதக்கும்பல்கள் வேருடன் பிடுங்கப்பட்டிருக்கும். அத்தகைய சூழ்நிலைகள் உருவாகக்கூடிய ஒரு காலம் சாதமாக எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. எமது இனத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பற்று பலம் காரணமாக பேரம் பேசும் சக்தியை நாம் தக்கவைப்பதன் மூலம் நாம் அதை சாதிக்க முடியும்.நாம் நினைக்கும் நிச்சயம் அடைய முடியும்.
இங்கே நீங்கள் குறிப்பிட்ட வீதிப்புனரமைப்பு விரைவில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபை தன்னுடைய குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உங்கள் கிராமத்திலும் வீதிகளை செப்பனிட இருக்கின்றது என தெரிவித்தார்.
இந்தச்சந்திப்பின் போது கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் நகுலேஸ்வரன் உறுப்பினர் சுகந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன், பா.உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன், இளைஞர் அணி தலைவர் சுரேன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார், பாரதிபுரம் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடலின் இறுதியில் பாரதிபுரம் கிராமத்தில் விழிப்புக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment