June 9, 2015

நிலங்களை விடுவிப்பதில் தடையாக இருப்பது இராணுவமே! - மாவை சேனாதிராஜா!

ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டபோதிலும் இராணுவ ஆட்சிக்குள்ளேயே தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எந்த குடிமகனின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதோ அது உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என நூறு நாள் வேலைத்திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தும் அது பூரணமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறான நிலங்களை விடுவிப்பதில் இராணுவம் தடையாக செயற்படுகின்றது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நேற்று அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனநாயக சூழலை உருவாக்கி, இராணுவ சூழலை அகற்றி, எங்களது இனப்பிரச்சினை, நிலப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகாணவேண்டும் எனும் நோக்கிலேயே எமது மக்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இருந்த போதிலும் அவற்றிற்கான முழுமையான தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை.




இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவில்லை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை, இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளில் தமிழினம் இல்லாமல் மாற்றி அமைக்கப்படுகின்றது.  அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, காணமல் போனவர்களுக்கு விடையில்லை போன்ற பல பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என்றார்.  

உலக வரலாற்றிலேயே மாபியாக்காரர்களும், போதைவஸ்துக்காரர்களும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆட்சி பீடத்திலும் ஏறியுள்ளனர். அவ்வாறான நிலையே கடந்த காலத்தில் இலங்கையிலும் நடந்தேறியது.  அதேபோல் கடந்த காலத்தில் குடும்பஆட்சியை நடத்தியவர்கள் பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தை சூறையாடியுள்ளமை அன்றாட பத்திரிகை செய்தி மூலம் அறிய முடிகின்றது.

யாழ்ப்பாணத்திலே போதைவஸ்து விற்பனை செய்யப்படும் 28 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 17 பாடசாலைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. பாடசாலைக்கு அருகிலே மதுபானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவையாவும் எமது இளம் சமுதாயத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் மாற்றப்படவேண்டும். எமது இளம் சமுதாயத்தை எப்படி வளர்தெடுப்பது என்பதில் அனைவரும் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  மாவை சேனாதிராசா, கிழக்கு மாகாணசபை விவசாய கால்நடை  அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன், ஆலையடிவேம்பு முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கே.இரத்தினவேல் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment