June 5, 2015

தமது காணியில் சட்டவிரோத விகாரையமைப்பை நிறுத்த கோரி உண்ணாவிரதமிருந்த மூவர் கைது- முல்லையில் பதற்றம்!

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமதுகாணியில் விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரதமிருந்த காணி உரிமையாளர்கள் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செயதுள்ளனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்து கண்டனப் போராட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
உரிய அனுமதி பெறாமல் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்த முற்பட்டதாலேயே தாம் மூவரைக் கைது செய்தனர் என்று முல்லைத்தீவு பொலிஸார் கூறினர். விகாரை அமைப்பதை நிறுத்தக்கோரி கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அத்துடன் காணி உரிமையாளர்கள் மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது அந்த பகுதியில் பெருமளவு பொலிசாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் இணைத்து பிக்கு ஒருவரால் இராணுவத்தினரின் துணையுடன் இந்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment