யாழ்.வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்து மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுடைய நிலங்களில் படைமுகாம்களும், படையினரின் பாரிய பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும்
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அரசாங்கம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிப்பதாகக் கூறிய 1,100 ஏக்கர் நிலத்திலும் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்பட வேண்டும். அதைவிடுத்து மக்களை மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்து விட்டு மக்களுடைய நிலங்களில் படையினர் தொடர்ந்தும் முகாமிட்டு தங்கியிருப்பதை ஒத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
வலி.வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், மக்களுடைய தேவைகள் மற்றும் மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாகக் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், வலி.வடக்கு பகுதியில் வறுத்தலைவிளான், பளைவீமன்காமம் மற்றும் வலி.கிழக்கில் வளலாய் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதுடன், மக்களுடன் நேரடியாக பேசியிருக்கிறோம்.
இதனடிப்படையில் பல்வேறுவிதமான தேவைகள் மற்றும் தமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் எமக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக அரசாங்கம் விடுவிப்பதாகக் கூறிய 1,100 ஏக்கர் நிலத்திலும் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படவேண்டும். ஆனால் நாங்கள் பார்த்த நிலையில் மக்களுடைய குடியிருப்புப் பகுதிகளை ஊடறுத்து படையினர் பாரிய வேலிகளை அமைத்திருக்கின்றார்கள். இவ்வாறான நிலைமைகளை ஒத்துக் கொள்ள முடியாது. அரசாங்கம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதித்த 1,100 ஏக்கர் நிலத்திலும் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படவேண்டும்.
நாம் இன்றைய தினம், (நேற்று) இந்தப் பகுதிகளுக்குச் சென்றபோது மக்கள் பல்வேறுவிதமான தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். குறிப்பாக மக்களுக்கு அரைநிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. மக்களுடைய காணிகள் துப்புரவு செய்து கொடுக்கப்படவில்லை. கிணறுகள் துப்புரவு செய்யப்படவில்லை. மலசலகூடங்கள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றார்கள்.
இதேபோன்று வளலாய் பகுதிக்குச் சென்றிருந்தபோது அங்கும் மக்கள் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ளார்கள். குறிப்பாக மக்கள் கடற்றொழில் செய்வதற்கு, அவர்களுடைய படகுகளைக் கொண்டுவருவதற்கு வான் வெட்டப்படவில்லை. அது வெட்டப் படவேண்டும். போர்க் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மண் அணைகள்,
அகற்றிக் கொடுக்கப்படவேண்டும். மக்களுடைய தேவைகள் தொடர்பான தகவல்களை முழுமையாக அறிந்துள்ளோம்.
அகற்றிக் கொடுக்கப்படவேண்டும். மக்களுடைய தேவைகள் தொடர்பான தகவல்களை முழுமையாக அறிந்துள்ளோம்.
இவற்றின் அடிப்படையில் அடுத்தவாரம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். இதில் எங்களுடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள். இதையடுத்து 13 அல்லது 14 ஆம் திகதிக்குப் பின்னர் மீண்டும் மக்களைச் சந்தித்து எவ்வாறான விடயங்களை மக்கள் செய்யலாம், செய்யக் கூடாது. மக்களுக்கு எவ்வாறான உதவிகள் கிடைக்கப்போகின்றன என்பது தொடர்பாக தெரிவிக்கவுள்ளோம் ‘ என்றார்.
No comments:
Post a Comment