May 19, 2015

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை- எஸ். பி. தாஸ் -

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளில் தேனிசை செல்லப்பாவின் உணர்ச்சிக்குரலிலும் ஒலித்த இந்த பாடலில் வரும் அத்தனை வரிகளும் எம்மை ஈழ மண்நோக்கி இழுத்து செல்லும்.
பனைமரத்தோடும், இயற்கையோடும் ஒன்றித்த வாழ்க்கை இன்று சிதைக்கப்பட்டு திக்குவேறு திசைவேறாக ஈழத்தமிழினம் சிதைந்து போய்விட்டது. யார் செய்த பாவமோ? எவர் கொடுத்த சாபமோ? சொந்த
மண்ணில் குருதி கொடுத்தும் இன்னமும் மண்ணை முத்தமிட முடியாமல் தவிக்கிறது தமிழ் இனம்.
அழகிய வாழ்க்கை, வடக்கையும் கிழக்கையும் நினைத்து நினைத்து பார்க்கையில் உள்ளத்தில் இருந்து அழுகை பீறிட்டு வெளிவருகின்றது.
தமிழா நீ இனப்படுகொலை செய்யப்பட்ட இனம் இல்லை. இன அழிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்ற இனம்.
இந்த உலகில் பல ஆயிரம் இனங்கள் வாழுகின்றன. அந்த ஒவ்வொரு இனமும் ஏதோ ஒரு வகையில் தனது விடுதலையை போராடியே பெற்றது. ஆனால் தமிழ் இனம் மட்டும் தனது போராட்டத்தையே காப்பாற்ற முடியாமல் போன வரலாற்றை 2009 மே 18 இல் கண்டோம்.
ஈழத்தில் கல்வி அறிவால், வர்த்தக, விவசாய, தொழில் புரட்சியால் முன்னேறி வந்த இனம் தான் இந்த தமிழ் இனம். ஆனால் அந்த முன்னேற்றத்தை எப்படியேனும் தடுத்து நிறுத்தி தமிழனின் வளர்ச்சியை கெடுக்க வேண்டும் என்னும் சிந்தனை செருக்கோடு எழுந்தது சிங்கள இனம். அதற்காக இலங்கையின் வரலாற்றை மாற்றி எழுதினார் ஒரு பிக்கு,
பௌத்தத்தை முறையாகப் பின்பற்றி, தர்மத்தை நிலைநாட்டி மக்களை ஒன்றாக இணைத்து அகிம்சையை போதிக்க வேண்டிய தர்மவான்கள் போரியல் நெறிமுறைகளை ஏற்கச்சொன்னார்கள். இவர்களின் பௌத்த நெறி கண்டு புத்தபெருமானின் சமாதி வெடிக்கின்றது.
இன அழிப்பின் உச்சத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது. 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் மூலமான இனவழிப்பை சொல்லவா? வீதியிலும், மலசல கூடக்குழிகளிலும், கிணற்றுக்குள்ளும், செம்மணியிலும், அதற்குள் புதைக்கப்பட்ட கிரிசாந்தி போன்ற தமிழ் குமரிகளின் உயிர்களையும், பிள்ளையத் தேடிப் போன அப்பாவும், அப்பாவை தேடிப்போன பிள்ளையும், பள்ளிக்கு போன மாணவனும், கல்வி புகட்டப்போன ஆசிரியரும், பட்டம் முடிக்க போன பல்கலைக்கழக மாணவர்களும், தமிழ் பேசுபவர்கள் என்பதால் அழிக்க சொன்னதா புத்தம்?
இல்லை கையறு நிலையில் தெய்வமே காப்பாற்றும் என்று நினைத்து விமான தாக்குதல்களுக்கு அஞ்சியும், பீரங்கித்தாக்குதல்கள், ஆலயங்கள், தேவாலங்கள் என்பனவற்றை தவிர்த்து அடிப்பார்கள் எனவே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என நினைத்து தஞ்சம் புகுந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது?,
வட்டுக்கோட்டையிலும், சென்பீற்றேர்ஸ் தேவாலயத்திலும், பாடசாலைகளிலும், குண்டு மழை பொழிந்த போது, அங்கே சிலுவையோடு கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று அன்பை போதித்த கிறிஸ்துவின் சிலை தலைவேறாக உடம்பு வேறாக கிடக்கையிலே, பள்ளிக்கூடத்தில் விமான கழுகுகள் போட்ட குண்டுகளில் சிதைந்த சிறார்களை அள்ளி எடுத்து மருத்துவமனை கொண்டு போக, மருத்துவமனையிலும் குண்டு வீழ.....,
அட! சிங்களம் அழிக்க நினைத்தது ஈழ தமிழினத்தைக் காக்க உருவாகிய விடுதலைப் புலிகளையல்ல, ஈனத் தமிழனை, தமிழ் இனத்தினை என்பது திட்டவட்டமாக புரிந்தது.
போரியல் தர்மங்கள் என்ன சொல்லுகின்றன எனில் குழந்தைகளை பெண்களை, பொதுமக்கள் குடியிருப்புக்களை, மருத்துவமனைகளை, பாடசாலைகளை, ஆலயங்களை குறி வைத்து தாக்குவதும், தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசித்தள்ளுவதும் போர்க்குற்றம் என்கின்றன. ஆனால் இத்தனையும் ஈழத்தில் பயன்படுத்தப்பட்டன. ஈனத் தமிழனை அழிக்கப் பயன்படுத்தப்பட்டன.
பொது மக்கள் கூடுகின்ற அத்தனை இடங்களிலும் குண்டுகள் வீழ்ந்தன. சிறுவர் இல்லமாகிய செஞ்சோலையில் கொத்தாக 57 மாணவிகள் சிதைக்கபட்டார்கள், திருகோணமலையில் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று கூடி படித்த இடத்திலே முடிக்கப்பட்டார்கள். இவை எல்லாம் இனப்படுகொலைகள் அல்ல இன அழிப்பு�.!
சர்வதேச நாடுகள் அத்தனையும் ஓர் இனவெறி பிடித்த சிங்களக்கடும் போக்காளனை வரவேற்றது, தேநீர் கொடுத்து உபசரித்தது, திரும்பும் பொழுது ஆயுதம் கொடுத்தது. எப்படியேனும் எந்த வழியிலேனும் போரை முடி! தமிழனை அழி.! பின்னர் பார்க்கலாம் குற்றம் புரிந்தவன் யார்? கொல்லப்பட்டவன் எவன்? இது தான் இன்றைய உலகியல் ராஜதந்திரம்.
தூ�! ஆயிரம், சட்டங்களை வகுத்து, போரியல் நுணுக்கங்களை தொகுத்து அத்தனையையும் அச்சேற்றியவர்கள், கூடவே தமிழரை பாடையேற்றவும் வழிகாட்டினார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்து, உலக விடுதலை வீர புருஷர்கள் கண்ணீர் சிந்துகின்றார்கள்.
இவ்விடத்தில் ஒரு காட்சியை உல நீதிவான்களுக்கு காண்பிக்க விரும்புகின்றோம், ஒரு குழந்தை தன் தாயின் மடியில் கிடந்து கொண்டு பசியை தீர்க்க மார்வை பிசைந்து பால் குடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. பாவம் பால் வரவில்லை. தாய் சேயை பிரிந்து குண்டுக்கு இரையாகி மாண்டு போய்விட்டாள். இது இன அழிப்பின் உச்சகட்ட காட்சிகளில் ஒன்று.
இன்னமும் எத்தனை எடுகோள்களை தமிழின அழிப்பு வரலாற்றில் இருந்து இவர்களுக்கு எடுத்துக்காட்ட....!, மார்பு அறுக்கப்பட்ட என் இனப்பெண்களின் நிலையையா? கற்பழித்து காடுகளில் வீசப்பட்ட எம் சகோதரிகளின் நிலையையா? இவற்றை மீண்டும் மீண்டும் சொல்லி என் பேனாவும் கற்பை இழக்கின்றன. என் பேனாகூட கண்ணீர் சிந்துகின்றது. ஆனால் உலக ஜனநாயக வாதிகளுக்கு தான் இன்னமும் கண்களுக்கு புலனாகாத காட்சிகளாய் போய்விட்டன.
தமிழா! உனக்காக உலகம் காணொளிகளை பார்த்து கண்ணீர் சிந்தும். ஆனால் நடவடிக்கை எடுக்க முன் நிற்காது. உலகத்திற்கு தேவை தன் நாட்டின் கொள்கை. தவிர தமிழனுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடு அல்ல.
நினைவு நாட்கள் வரும் பொழுது எல்லாம் ஒரு விளக்கேற்றி விட்டு முடிந்தது பணியென்று இருக்க முடியுமா? முள்ளிவாய்க்காலில் எமது இனமும் விடுதலைப்போராட்டமும் முற்றாக அழிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளை கடந்தும் இன்னமும் எங்கள் இனத்திற்கு நீதி கிடைக்கவில்லை. இப்படியே இருந்துவிட்டால் நீதிகிடைக்கும் என்று யாரும் நினைத்தால் அது எத்தனை பிறவி எடுத்தாலும் நடக்காது.
இப்பொழுது தமிழினம் தன் கருவறுக்கப்பட்ட இனத்திற்கு செய்ய வேண்டிய முதல் கடன் அவர்களுக்கான நினைவாலயங்களை அமைப்பது. இன்றை வரைக்கும் இந்திய தேச விடுதலைக்கு போராடிய மகாத்மா காந்தி அவர்களின் சிலை அமெரிக்காவிலும் உண்டு, பிரித்தானியர்களை எதிர்த்து போராடிய காந்தியின் சிலை பிரித்தானியாவிலும் உண்டு.
சற்று சிந்தித்து பாருங்கள் தமிழர்களே. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய காந்தியை மகாத்மாவாக ஏற்று அன்று தனது நாட்டிலேயே சிலை வைக்க பிரித்தானியா அனுமதித்துள்ளதெனில், ஈழத்தமிழரை அழிக்க உதவி செய்த நாடுகளில் ஏன் முள்ளிவாய்க்கால் நினைவாலயங்களை இன்று கட்டி எழுப்ப முடியாது.
�ஒரு இனம் தம்மையும் தமது வரலாற்றையும் உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமல் போய்விடும்�. இது எமது இனத்திற்கும் நடந்துவிடக்கூடாது. இனத்தை காப்பாற்ற வேண்டுமாயின் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளையும், வரலாறுகளையும் ஆவணப்படுத்தியாக வேண்டும்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நிகழ்த்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் இப்பொழுது உலகத்தமிழனத்திற்கு விடுக்கப்படும் ஒரு அறைகூவலாகவே இதை ஏற்றுக்கொள்ளுங்கள். அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரத்தின் நினைவிடம் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட காந்திக்கு உலகம் எங்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதி என்று சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவிற்கு நோபல் பரிசு கொடுத்து கௌரவித்தது உலகம். அப்படியெனில் ஏன் ஈழத்தில் அழிக்கப்பட்டவர்களுக்கு நினைவாலயம் அமைக்க முடியாது.
இவ்விடத்தில் இன்னொன்றையும் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனின் சடலத்தை அமெரிக்கா கடலில் வீசியது. பின்லேடனின் சடலத்தை புதைத்தால் நாளை அது வரலாறாகிவிடும், அவ்விடத்தை முஸ்லிம்கள் நினைவாலயமாக மாற்றக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு அவ்விதம் செய்ததது அமெரிக்கா.
அதைப்போலவே தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனது சடலம் என்று காட்டிய சிங்கள இராணுவம் அதனை உடனேயே எரித்துவிட்டதாகவும் அறிவித்திருந்தது. இவ்விதம் செய்வதன் நோக்கம் வரலாறுகளை அழிப்பதற்கே....!
ஆகவே நாங்கள் எங்கள் வரலாற்றையும், எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் சாட்சிகளையும் தொகுக்காமல் இருக்கப்போகின்றோமா?
முடிந்தால் எதையும் செய்து முடிக்கலாம். கொல்லப்பட்ட மக்களின் நினைவிடங்களை உலகின் அத்தனை இடங்களிலும் நிறுவுங்கள். உலகமே பார்க்கட்டும். அவர்களின் உதவியால் நிகழ்ந்த வன்மங்களை. பேசு பொருளாகட்டும் இனவழிப்பின் துயரம்.
காலம் ஒரு நாள் பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டியவர்களை மாவீரர்கள் என்று சொல்லும். அதற்கு முதல் எமது இன அழிப்பின அடையாளம் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.
நினைவு நாட்கள் என்பது காலப்போக்கில் மறைந்து போகும். ஆனால் நினைவிடங்கள் அப்படியல்ல. தமிழினமே இது உங்களிடம் விடுக்கப்படும் தாழ்மையான வேண்டுகோள்.
இறந்த தன் உறவுக்களுக்காக விளக்கேற்றி, ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டு அந்நாளை நினைத்துக்கொள்ள கூட இன்றைய ஆட்சியாளர்கள் தடைபோடுகின்றார்களெனில் தமிழ் இனத்தின் அடிப்படையான உரிமையை கூட பறித்தெடுத்துவிட்டது சிங்களம்.
தமிழனைக் கொன்றது ஒரு அரசு. அதே தமிழனை நினைத்து விளக்கேற்ற அனுமதி மறுக்கிறது இன்னொரு அரசு. அப்படியெனில் ஆட்சிப்பீடம் எவர் ஏறினாலும் இது தான் எம்மினத்தின் நிலை.
இந்த நிலை தொடருமாயின் எமது அடுத்த தலைமுறையினருக்கு எதுவும் தெரியாமல் போய்விடும். சிங்களம் நினைத்ததை சாதித்துவிடும்.
தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனையின் படி,
��ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.
ஆகவே தமிழர்களே,
தமிழினத்துக்கு நியாயம் கிடைக்கும்வரை உங்கள் உணர்வுகளை தூங்க விடாதீர்கள் ..
இனப்படுகொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்
முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தை கட்டியெழுப்புங்கள்...
நன்றி
- எஸ். பி. தாஸ் -

No comments:

Post a Comment