May 20, 2015

யாழ். வலிகாமம் கிழக்கு பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் கண்டனப் பேரணி!

புங்குடுதீவில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் தாமதமின்றி நீதி உடன் நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கோரியும் யாழ்ப்பாணம், வலி கிழக்கு பொது அமைப்புக்கள் ஒன்றினைந்து மாபெரும் கண்டணப் பேரணியினை
நடத்தியதுடன் கோப்பாய் பிரதேச செயலகத்தில் மகஜரையும் கையளித்தனர்.
காலை 9 மணியளவில் புத்தூரில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களுடன் ஆரம்பமாகிய இப் பேரணி, யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி வழியாக கோப்பாய் பிரதேச செயலகத்தினை அடைந்தது.
யுத்த காலத்தில் பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட கிரிசாந்தி முதல் வித்தியாவரையில் நீதிவேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இக் கண்டணப் பேரணியில் கோப்பாய் பிரதேசத்தின் உட்கிராமங்களில் இருந்து வீதிக்கு இறங்கிய மக்களில் பெருந்தொகையானோர் பங்கேற்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் சந்திகளில் கூட்டம் கூட்டமாக கூடிய மக்கள் வீதியோரங்களில் டயர்களையும் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் ஒவ்வொரு சந்திகளில் இருந்தும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்குமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன், மனித உரிமைச் செயற்பாட்டாளர் தியாகராஜா நிரோஸ், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்னலிங்கம் ரமேஸ், சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள், சமூக முற்போக்குச் செயற்பாட்டாளர்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர் சமூகத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பெருந்திரளானோர் உணர்வு பூர்வமாகப் பங்கெடுத்தனர்.
கோப்பாய் பிரதேச செயலகத்தினைச் சென்றடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோப்பாய் பிரதேச செயலக முன்றலில் கண்டனக்கூட்டத்தினை நடத்தினர்.
இக் கண்டனக் கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் க. சர்வேஸ்வரன், மனித உரிமைச் செயற்பாட்டளர் தியாகராஜா நிரோஸ், வலி கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாடசாலை மாணவிகள் ஆகியோர் கண்டன உரைகளை நடத்தினர்.
இக் கண்டன உரைகளில் பெண்களின் பாதுகாப்பு விடயத்தில் அரசுக்கான மேலதிக அழுத்தங்களைப் பிரயோகித்தல் மற்றும் சமூக விழிப்புணர்விற்காக மக்களை அணிதிரட்டல் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கண்டன உரைகரைகளைத் தொடர்ந்து கோப்பாய் பிரதேச செயலாளர் ம.பிரதீபனிடம் பாடசாலை மாணவிகளால் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இம் மகஜரில் கூட்டு பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டமைக்கு உடனடி நீதியினை கோரியிருந்ததுடன் பெண்களின் பாதுகாப்புத் தொடர்பிலும் மேலதிக நடவடிக்கை எடுக்கக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இம் மகஜரைப் பெற்றுக் கொண்ட கோப்பாய் பிரதேச செயலாளர் அரச நிர்வாக கட்டமைப்பினூடாக குறித்த மகஜரை அரச மேல் மட்டம் வரை தான் கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
vali east protest (1)
vali east protest (2)
vali east protest (3)

No comments:

Post a Comment