May 12, 2015

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 2000 வீடுகள் மாயம்! அதிர்ச்சித் தகவல்!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் 113 கோடியே 35 இலட்சத்து 500 ஆயிரம் ரூபா பெறுமதி கொண்ட 2000ற்கும் மேற்பட்ட வீடுகள் காணாமல் போயுள்ளதாக யாழ்.மாவட்ட புள்ளிவிபரங்களில் இருந்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகள் திசை மாற்றப்பட்டு வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட்டு விட்டனவா, அல்லது அவ்வீடுகளுக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டனவா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய - இலங்கை அரசாங்கத்தின் நட்புறவினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல்வேறு உதவித்திட்டங்களை இந்திய அரசாங்கம் வழங்கி வருகின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. அதில் வீடொன்றை அமைப்பதற்கு 550000 ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இவ்வீட்டுத்திட்டத்தில் 8700 வீடுகள் யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி 8700 வீடுகளுக்கான திட்ட புள்ளிவிபரங்களும் யாழ்.மாவட்டச் செயலகத்திடம் வந்தடைந்திருந்தது.
இவற்றில் வீடுகள் வழங்கப்பட வேண்டிய பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு இதுவரை 6121 வீடுகள் கட்டப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு விட்டன. மேலும் 518 வீடுகளின் நிர்மாணம் இடைநடுவில் உள்ளது. இருப்பினும் மிகுதியாக பாதிக்கப்பட்ட வழங்கப்பட வேண்டிய 113 கோடியே 35 இலட்சத்து 500 ஆயிரம் ரூபா பெறுமதி கொண்ட 2061 வீடுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் உள்ளது.
காணாமல் போயுள்ள வீடுகள் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்களில் எதுவுமே இல்லை. இந்திய வீட்டுத்திட்ட வீடுகள் காணாமல் போனது சம்பந்தமாக யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகனிடம் தொடர்பு கொண்டு கேட்பதற்காக செய்தியாளர்கள் அவருடைய அலுவலகத்திற்குச் சென்று நீண்ட நேரம் காத்திருந்த போதும், அரச அதிபர் செய்தியாளர்களை சந்திக்க மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment