April 22, 2015

ஈபிடிபி மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!(படம் இணைப்பு)

மகேஸ்வரி நிதியம் கொள்ளையடித்து வைத்திருக்கும் எங்களுடைய பணத்தை திரும்பவும் எங்களிடமே கொடுங்கள் எனக்கோரி யாழ்.மாவட்டப் பாரவூர்தி உரிமையாளர்கள் இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் ஆளுநர், மாவட்டச் செயலகம் ஆகியவற்றுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
யாழ்.பாரவூர்தி உரிமையாளர்களுக்குச் சொந்தமான சுமார் ஒரு கோடியே 97 லட்சம் ரூபா நிதியை ஈ.பி.டி.பி அமைப்பின் மகேஸ்வரி நிதியம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. இந்தப் பணத்தை மகேஸ்வரி நிதியம் கொள்ளையடித்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டியே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் காலை 10மணிக்கு மேற்படி முதலமைச்சர், ஆளுநர், மாவட்டச் செயலர் ஆகியோரின் அலுவலகங்களுக்கு முன்பாக இடம்பெற்றதுடன் மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மகேஷ்வரி நிதியத்திற்கு நாங்கள் மணல் ஏற்றுவதற்காக நம்பிக்கை பொறுப்பின் அடிப்படையில் 575 பாரவூர்தி உரிமையாளர்கள் நாங்கள் தலா 5ஆயிரம் ரூபா வீதம் பணம் செலுத்தினோம்.
இதற்கு மேலதிகமாக 51 ஆயிரம் தடவைகளுக்கு மேலதிகமாக எமக்கு கிடைக்க வேண்டிய வட்டிக்காசு 13 லட்சம் ரூபா மற்றும் 21 லட்சம் ரூபா கூலிக்காசு உள்ளடங்கலாக எமக்கு ஒருகோடியே 97 லட்சம் ரூபா பணத்தை மகேஷ்வரி நிதியம் வழங்கவேண்டும். இதற்கமைய நாங்கள் நிதியத்திடம் சென்று கேட்டபோது அவர்கள் 2லட்சம் ரூபா வீதம் வாராந்தம் எமக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் 50பேருக்கு முதற் கட்டமாக காசோலை வழங்கினார்கள். பின்னர் எந்தவொரு நிதியையும் அவர்கள் எமக்கு வழங்கவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று கேட்டபோது அவர் இந்த விடயம் தொடர்பாக பேசுவதாக எமக்கு கூறியிருந்தார்.
பின்னர் நாங்கள் அவருடன் பேசுவதற்கு தொலைபேசி அழைப்பை எடுத்த போது அவர் தான் கொழும்பில் நிற்பதாகவும் பின்னர் பேசுகிறேன் எனவும் கூறினார். பல தடவைகள் எமது அழைப்பை எடுக்கவும் இல்லை. இந்நிலையில் எங்களுடைய பணத்தை வாங்கி அவர்கள் கனரக வாகனங்களை சொந்தமாக வாங்கி வைத்திருக்கின்றார்கள்.
இது பற்றி நாங்கள் கேட்டபோது உங்களுடைய பணத்தில் வாங்கவில்லை. உங்கள் பணம் வங்கிகளில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றது என கூறினார்கள். எங்கள் பணம் பத்திரமாக உள்ளதெனில் அதனை எதற்காக எங்களிடம் வழங்க முடியாமல் இருக்கின்றது? அதனை எமக்கு வழங்கவேண்டும்.
எங்களுடைய தொழிலாளர்கள் வறுமையினால் தங்களுடைய பாரவூர்திகளை விற்றுவிட்டு கூலிக்கு பாரவூர்திகளை ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் நாங்கள் பணத்தை கேட்பதற்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருந்த நிலையில் மகேஸ்வரி நிதியத்தினர் பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளார்கள்.
அதாவது தமக்கு இடையூறு என. எங்களுடைய பணத்தை தந்தால் எதற்காக நாங்கள் அவர்களை இடையூறு செய்யப் போகின்றோம். எனவே இந்த நிலையிலேயே நாங்கள் இன்றைய தினம் முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும், அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கும் மகஜர்களை கையளித்திருக்கின்றோம். எனவே எமக்கு எங்களுடைய பணம் வேண்டும் என கூறினார்.

No comments:

Post a Comment