March 26, 2015

தமிழீழ விடுதலையையும் தமிழர்களையும் ஆழமாக நேசித்த பெருந்தலைவர் லீ ‪க்வான் ‪‎யூ - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் இரங்கல் செய்தி!

மிகப்பெரும் அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்ட சிங்கப்பூர் மக்கள் ஈழத்தமிழர்கள்  போன்று ஓர் பெரும்  அழிவை தாங்கியவர்களே.‪ லீ ‪க்வான் ‪‎யூஎனும் ஓர் விடிவெள்ளியின் மலர்வு அந்த இனம் தன்னைத் தானே ஆட்சிகொள்வதற்கு  ஓர் நாட்டை நிறுவுவதற்கு காரணமாய் ஆனது. அந்த  அற்புத பிறவியே பின்னர் சிங்கப்பூரின் தந்தையாகவும், புதிய சிற்பியாகவும் அதையும் தாண்டி ஒட்டுமொத்த அடக்குமுறைகளுக்கும் எதிரான  சர்வதேச குரலாக ஒலித்தது.
தன்னினம் பட்ட துயர்களை வேறு எந்தவோர் இனமும் சந்திக்க நேரக்கூடாது என்ற பொதுநலத்தின் சாட்சியாய்  வாழ்ந்த பெருந்தலைவர்  லீ ‪க்வான் ‪‎யூஅவர்கள் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை  கண்டு துடியாய் துடிதுடித்தார். இனவிடுதலைக்காய் போராடி தமக்கான நாடமைத்த பலர் ஊமைகளாய் தமிழின  அழிப்பை வேடிக்கை பார்த்தபோது சர்வதேசத்தின் மத்தியில் தனிப்பெரும் தமிழீழ ஆதரவுக் குரலாய் லீ ‪க்வான் ‪‎யூ அவர்களின் குரல் ஒலித்தது.

சிங்களப் பேரினவாத தலமைகள் தமிழருக்கு ஒருபோதும் உரிமைகளை கொடுக்காது என்ற யதார்த்தத்தை வரலாற்று ரீதியான அனுபவத்தின் ஊடாக புரிந்துகொண்ட லீ ‪க்வான் ‪‎யூ அவர்கள் தமிழீழமே அதற்கு தீர்வாக அமையும் என்று முழங்கினார்.

உலகின் போற்றத்தக்க மனிதராகவும் பல உலகத்தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற பெருந்தலைவர் லீ ‪க்வான் ‪‎யூ அவர்களின் தமிழீழ மக்கள் சார்ந்த நிலைப்பாடு சிங்கள கொடுங்கோளர்களுக்கு சிம்ம சொற்பனமாக விளங்பியதுடன் தமிழீழ தேசத்திற்கான சர்வதேச தலைவர் ஒருவரின் அங்கீகாரமாகவும் அவதானிக்கப்பட்டது.

தமிழினம் இலங்கைத்தீவில் எதிர்நோக்குவது திட்டமிட்ட இனவழிப்பே என்று அவரின் இறுதி நாட்கள் வரைக்கும் உலகறிய உரைத்தார். தமிழனின்  அங்கீகாரமாத் திகழ்ந்தார். எம் தாய்மொழியான தமிழை சிங்கப்பூரின் அரச மொழியாக்கி சங்கத்தமிழுக்கு செங்கம்பள வரவேற்பளித்தார்.

தமிழினத்துக்கும், தமிழீழ விடுதலைக்கும் தமிழ் மொழிக்கும் லீ ‪க்வான் ‪‎ யூ அவர்கள் ஆற்றிய சேவை என்பது தமிழர்களின் வரலாற்றில் அழியாத சுவடுகளாக அமைகின்றது . அப்பேற்பட்ட ஓர் அரிய உயிரை, தோள் தட்டி உரமேற்றும் ஓர் தந்தையை, பார் போற்றும் ஓர் தானைத் தலைவனை இழந்தது தமிழினத்துக்கு   பெருந்துயராகும்.

மக்களுக்காய் வாழ்ந்து மடியும் எவரும் ஒரு போதும் அழிவதில்லை என்ற எமது தமிழீழத் தேசியத் தலைவரின் வரிகளுக்கு அமைய பெருந்தலைவர் ‪லீ ‪க்வான் ‪யூ அவர்களின் எண்ணமும், சிந்தனையும் தமிழீழ தேசத்தின் அகத்தில் நிலைவாழ்வு கொள்ளும்.

'பணிந்து போக தமிழன் என்ன நனைந்த கோழியா?' – என்று உணர்வூட்டியசிங்கப்பூரின்  தந்தையின் மறைவையொட்டி தமிழ் மக்களின் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் எமது ஆழமான இரங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் .அவரின் பிரிவால் துயருற்றிக்கும் சிங்கை மக்களுடன் நாமும் இணைந்திருக்கின்றோம்.


அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)

ஊடக தொடர்புகளுக்கு : media@iceelamtamils.com
தேவா சபாபதி (கனடா ): 0016 47 975 05 24
குருசாமி
 குருபரன் ( சுவிஸ் ) :00 41 79 193 86 69

No comments:

Post a Comment