புலம்பெயர் அமைப்புக்களுக்கு எதிரான தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சில புலம்பெயர் அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் தடை செய்யப்பட்டிருந்தனர்.
உரிய ஆதாரங்கள் இன்றி தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373ம் தீர்மானத்திற்கு அமைவாக 424 தனிப்பட்ட நபர்கள் மற்றும் 16 அமைப்புக்களை தடை செய்திருந்தது.
அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக இந்த தடை அமுல்படுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒன்றிணைவதாகத் தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக குற்றம் சுமத்தி இவர்கள் தடை செய்யப்பட்டனர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சில அமைப்புக்களே தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்டவர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், தடை செய்யப்பட்டவர்களுக்கு புலிகளுடன் தொடர்பு உண்டு என்பதனை உறுதியாக நிரூபிக்க எவ்வித சான்றுகளும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க முனைப்புகளில் ஜனாதிபதி தீவிரம் காட்டி வருவதாகவும் தடை குறித்து மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் இலங்கையர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் நல்லிணக்க மற்றும் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் முனைப்புக்களுக்கு முக்கியமானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் இலங்கையர்களில் சிலர் மிகச் சிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய தொழில்சார் நிபுணர்களாக திகழ்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பல்லின பல்கலாச்சாரத்தைக் கொண்ட நாடு என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி மக்கள் அடைந்த வெற்றியை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மற்றும் கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஆகியோரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment