இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக பத்து அம்ச கோரிக்கையை முன்வைத்து யாழில் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத் தலைவர் சி.வி.சகாதேவன் மயக்கமடைந்த நிலையில்
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். பொது நூலகம் முன்பாக கடந்த 12ம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை 10.00 மணியளவில் மயக்கமடைந்ததால் அம்புலன்ஸ் மூலம் அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் கைதிகள், கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் விடுதலை, எல்லை தாண்டும் மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுதல், யுத்தத்தில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு இழப்பீடு வழங்குதல், விதவைகள், அநாதைகள் மற்றும் காயமடைந்தோருக்கான உதவிகள் வழங்கல், வடக்கு – கிழக்கு பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவிகள் வழங்கல்,
இடம்பெயர்ந்த, புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்த காணிகளை கிடைக்கச் செய்தல், உள்ளூரில், சர்வதேசத்தில் மற்றும் தமிழகத்தில் அகதிகளாகவுள்ள மக்களின் மீள்குடியேற்றம், தொழில், வீட்டு வசதி ஏற்படுத்தல், போரில் இறந்தவர்களை நினைவுகூற நினைவுச் சின்னம் மற்றும் நினைவுத் தூபிகளை பிரகடனப்படுத்தல், ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தல், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே சகாதேவன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment