நோர்வே நாட்டில் சமீபத்தில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எண்ணற்ற குறும்படங்களில் வ. கௌதமன் அவர்கள் இயக்கிய ‘’புத்தாண்டு பரிசு’’ எனும் குறும்படம் ‘’சிறந்த இயக்குனர்’’ க்கான விருதினைப் பெற்றுள்ளது. இதனை மணிவண்ணன், பழ.ஜீவானந்தம்
ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றார்கள்.
ஈழத்தில் யுத்தத்தில் நடந்த இனப்படுகொலைகளையும், அதனால் தங்களது தாலிகளை இழந்து நிற்கும் தொண்ணூற்று ஆறாயிரம் விதவைகளையும் சுமந்து தாங்க முடியாத துயரத்தில் நிற்கும் நமது தமிழினம், இன்று தாய்த்தமிழகத்திலும் யுத்தமில்லாமல் சத்தமில்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மது என்னும் அரக்கனால் இரண்டு லட்சம் பெண்கள் விதவைகளாக நிற்கிறார்கள்,கிட்டத்தட்ட நான்கு லட்சம் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனை சகித்துக்கொள்ள முடியாத கோபத்தினால் தான், நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘’புத்தாண்டு பரிசு’’ படைப்பின் கரு உருவானது.
‘’அரசு மக்களுக்கு தரும் பரிசு மது’’
‘’மக்கள் அரசுக்கு தரும் பரிசு உயிர்’’
எனும் வரிகள் இப்படத்தில் உயிரோட்டமாக அமைந்துள்ளது.
நோர்வே திரைப்பட விழாக்குழு அறிவிப்பு தெரிந்த கணமே தனது எல்லையில்லா மகிழ்வையும், வாழ்த்தையும் இயக்குனர் கௌதமனுக்கு பழ.நெடுமாறன் அய்யா அவர்கள் தெரிவித்திருந்தார். ‘’அதிர்வு திரைப்பட்டறை’’ அலுவலகத்திற்கே நேரில் வந்து,கௌதமனையும், தயாரிப்பாளர் மணிவண்ணன் அவர்களுக்கும் மரியாதை செய்து பெருமனதோடு வாழ்த்தினார்.
இது தொடர்பில் இயக்குனர் கௌதமன் கருத்து தெரிவிக்கையில்,
நான் இதுவரை செய்த ஒவ்வொரு படைப்பும் என் தாய்க்கும் தாய்மொழிக்கும் சமமான எனது தமிழீழ தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும், இதுவரை உலகம் கண்டிராத வீரம் செறிந்த ஈழப்போராட்டத்தையும் பெரும் படைப்புகளாக்க நான் செய்து பார்க்கும் ஒத்திகை படைப்புகளேயாகும்.
பன்னீர்செல்வம், தம்பி பாலமுரளிவர்மன், இசையமைப்பாளர் தாஜ்நூர், ஒலிக்கலவை செய்து தந்த நண்பர் சத்யா, அஜ்மல், என்றும் எங்கள் நினைவுகளில் வாழும் கிஷோர், இப்படைப்பினில் தயாரிப்போடு நாயகனாக நடித்தும் கொடுத்த பழ.ஜீவானந்தம் அவர்களுக்கும், என்னோடு தோள் நின்ற ஒவ்வொரு படைப்பாளியையும் இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
மேலும் என் வாழ்க்கையின் பெரும் அங்கமாக திகழ்ந்து கொண்டிருக்கிற எனது உயிர் நண்பர் மணிவண்ணன் அவர்களுக்கும் வெறும் நன்றி என்ற சொல்லை மட்டும் உரித்தாக்க முடியாது.
இந்த விருதினை வழங்கும் நோர்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
என்னோட விருது பெற உள்ள என் தாய்த்தமிழ் திரைக்கலைஞர்களுக்கு எனது பிரியமான வாழ்த்துகள்.
எனக்கு கிடைத்த இந்த விருதினை தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் மற்றும் உலகம் முழுக்க பரந்து வாழ்ந்து கொண்டிருக்கிற எனது உயிருக்கு நிகரான தமிழ் உறவுகள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
No comments:
Post a Comment