ஜனாதிபதி தேர்தல் நடந்த அன்று இரவு மகிந்த ராஜபக்சவிற்கு ஒளிந்து நண்பர் ஒருவரது வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தான் தேர்தலில் தோற்றால், குடும்பத்துடன் சிறைவைக்கும் திட்டம் மகிந்தவிடம் இருந்ததை நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டதையடுத்து, குருணாகலில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் ஒளிந்திருந்ததாக கூறியுள்ளார். லண்டனில் வைத்து பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மைத்திரி மேலும் பேசும்போது, “கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் என்னைக் கைது செய்து, குடும்ப உறுப்பினர்களை அழிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். இதனை நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன்.
தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் நான் உட்பட எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் உயிருடன் இருந்திருப்போமா என்பது தெரியவில்லை. அதுதான் மஹிந்த ராஜபக்சவின் ஜனநாயகமாகும். ஆனால் அவர் இப்பொழுது ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.
அன்றைய தினம் நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பார்கள், எத்தனை பேரின் கை கால்கள் உடைக்கப்பட்டிருக்கும், எத்தனை பேரின் தொழில்கள் இழக்கப்பட்டிருக்கும் என்பது எனக்கு தெரியாது. அப்படி இல்லை என்றால் மகிந்த ராஜபக்ச எனது முழு குடும்பத்தையும் சிறைப்படுத்தி அழித்திருப்பார்” என்றார்.
தற்போது சூடு பிடித்துள்ள பிரதமர் வேட்பாளர் விவகாரத்தையும் பிபிசி எழுப்பியது. அதற்கு பதிலளித்த போது “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நியமிக்குமாறு யாரும் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. அவ்வாறான கோரிக்கை அல்லது யோசனையை முன்வைத்தால் அன்று நான் உரிய பதிலை அவர்களிற்கு அளிப்பேன்” என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இதயம் தாமே என மஹிந்த தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக பி.பி.சி கேட்டபோது, உண்மையில் கட்சியின் இதயம் மக்களே என குறிப்பிட்டுள்ளார்.
“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இதயமும் மூளையும் மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுமே” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment