February 1, 2015

மைத்திரி அரசின் சர்வதேச உறவுநிலை தேக்கமடையுமா? - இதயச்சந்திரன்!

உலகத்தில் எல்லாம் மாறும். ஆனால் நிலத்தின், ஒரு நாட்டின் அமைவிடம் மட்டும் மாறாது என்பார்கள். அதாவது ஆட்சிகள் மாறும். சர்வதேச உறவுகள் மாறும்.
அணுகுண்டு வீசி அழித்தவர்களை அணைப்பார்கள். இப்படியாக உதைத்தவர்கள் மண்டியிடுவதும், சந்தைகளைப் பங்கிட கை கோர்ப்பதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் இப்பூவுலகில் பெருவாரியான மக்கள் ஒடுக்கப்படுவது மட்டும் மாறவில்லை. சோசலிசப் புரட்சிகள், புதிய ஜனநாயகப் புரட்சிகள் வந்துபோனாலும் தேசிய இனங்கள் அழிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. இதனைச் சுட்டுக்காட்ட வேண்டிய அவசியம் இப்போது ஏன் ஏற்படுகிறது என்று நீங்கள் கேட்கலாம்.
ஏன் ?..எதற்காக?.. என்கிற கேள்வியை முன்வைக்காவிட்டால், செக்குமாட்டு வாழ்க்கையே நிரந்தரமாகிவிடும். தேர்தல் என்று ஒன்று வரும்போது, அவல வாழ்வு குறித்து மிதமாகப்பேசி, அதற்கான காரணிகளை கண்டறியும் 'சிந்திக்கும் பக்கங்கள்' மறைக்கப்பட்டுவிடும். அறிவியல்பூர்வமாகப் பேசினால், அதிகார மையத்தை நெருங்க முடியாது என்பதை இந்த பிரம்மாக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
ஆகவே முதலில் இந்த நாட்டின் வெளியுறவு கொள்கை வகுக்கும் பிரம்மாக்கள், அல்லது அதற்கு வெளிச்சம் காட்டும் அறிவார்ந்த பெருமக்கள், இலங்கையின் அமைவிடத்தை வைத்து எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதை நோக்க வேண்டும்.
பூகோள அரசியலில் ஒரு நாட்டின் தரிப்பிடம் எத்தகைய முக்கியத்துவம் பெறும் என்பதனை சென்ற நூற்றாண்டின் சூயஸ் கால்வாய் விவகாரமும், நோர்மண்டி தரையிறக்கமும், தற்போதைய தென்சீனக் கடல் விவகாரமும் இந்துசமுத்திரப் பிராந்திய முத்துமாலைத் திட்டமும் உணர்த்துகின்றன.
இது குறித்து இலங்கையின் ஆட்சியாளர்களும், மூலோபாயவாதிகளும், புவிசார் அரசியல் விற்பனர்களும் பார்க்கும் பார்வை என்ன என்பதை தமிழ் பேசும் மக்கள் தெரிந்து கொள்வது காலத்தின் தேவையாக இருக்கிறது.
மைத்திரி சிரிசேனா தலைமையில் புதிய ஆட்சி தோன்றியவுடன், இவ்வரசின் வெளியுறவுக் கொள்கை எத்திசை நோக்கிப் பயணிக்கும்? என்கிற கேள்வி, உள்ளூர்- சர்வதேச ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
இது தேவையற்ற ஒரு விடயம் போல் மக்களுக்குத் தோன்ற வேண்டும் என்பதையே பெரும்பாலான அரசியல்வாதிகளும் விரும்புவார்கள். ஆனால் எண்ணெய் விலையை அதிகரிக்கும்போது மட்டும், சர்வதேச அரசியலை மிகச் சாதாரணமாகப் பேசுவார்கள். ஈராக்கில் யுத்தம், ஈரான் மீது அமெரிக்கத் தடை என்று, பூகோள அரசியலானது அரசின் ஊடக மையங்களில் தூள் பறக்கும். ஆனால் இப்புதிய அரசு எரிவாயுவின் விலையை குறைக்கும்போது , சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை வீழ்ச்சியுற்றதால் விலையைக் குறைக்கின்றோம் என்று கூறவில்லை. இது நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய வாக்கு வங்கி அரசியல் நகர்வு என்பதால், மக்களும் அக்கறை கொள்ளவில்லை.
இதேவேளை, வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் பதவியேற்ற மறுகணமே இந்தியாவிற்குச் சென்றவுடன், பூகோள அரசியல் குறித்த விவாதம் இலங்கையில் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவின் கழுகுப் பார்வை இந்தியா,சீனா மீது குவிந்துள்ளதால், இம்மூவரையும் சம அளவில் கையாள்வதே 'இராஜதந்திரத்தின் சிறப்பு' என்பதாக நோக்கப்படுகிறது. அதாவது மேற்குலக வல்லரசுகளுக்கு, வளர்ச்சியுறும் இந்தியச் சந்தை மீது ஈர்ப்பு ஏற்படும்போது , அதனை அண்டியுள்ள நாடுகள் மீது இயல்பாகவே அக்கறையோடு கூடிய பார்வை ஏற்படும் என்று நம்புகிறார்கள்.
இந்த அக்கறையின் மறுபக்கத்தில், இராணுவரீதியான மூலோபாயச் சமநிலை என்கிற தொலை நோக்குப் பார்வை இவ் வல்லரசாளர்களிடம் இருப்பதை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. 'மாறா - இடம்பெயரா' அமைவிடமும், பக்கத்தில் இந்தியா போன்று வளர்ந்துவரும் வல்லரசு இருப்பதுதான், தமது புவிசார் இராஜதந்திர கையாள்கைக்கு பலம் சேர்க்கும் காரணியாக இருக்கிறதென பெருந்தேசிய இனவாத ஆட்சிபீடம் நம்பிக்கை கொள்கிறது.
அத்தோடு சர்வதேச உறவுகள் குறித்தான புலமைசார் அறிவுடையோர், 'அமைவிடம்' (Location ) என்பதனை மையச் சுழல் புள்ளியாகக் கொண்டு, தமது ஆய்வுகளையும் மதிப்பீடுகளையும் மேற்கொள்வதே சாலச் சிறந்ததென அறிவுறுத்தப்படுகின்றனர்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர், சீனாவுடன் மகிந்த ஆட்சி ஏற்படுத்திய நெருக்கமான உறவு புத்திபூர்வமானதல்ல என்று இப்போது கூறுகின்றார்கள்.
நேற்றுவரை, ஐ.நா.மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தந்திரோபாய - அழுத்தத் தீர்மானங்களை எதிர்த்து ஏகாதிபத்திய புராணம் பாடிய சர்வதேச உறவுகளின் புலமைசார் புத்திசீவிகள், இப்போது இராகத்தை மாற்றிப் பாடுகின்றார்கள்.
சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்கள், இரண்டு தடவைகள் கொழும்புத் துறைமுகத்தில் வந்து சேர்ந்து வானம் பார்த்தது தவறாம்.
கொழும்பு கொள்கலன் துறைமுகப்பகுதியை, 500 மில்லியன் டொலர் செலவில் புதிதாக நிர்மாணிக்கும், சீனாவுடனான ஒப்பந்தத்தை மகிந்த அரசு மேற்கொண்ட போது, இந்தியாவிற்கு ஆப்பு வைக்கிறார் மகிந்தர் என உள்ளூர ஆனந்தம் அடைந்தவர்களே இவர்கள்.
ஆட்சி மாறியவுடன், வெளியுறவுக் கொள்கை இப்படித்தான் இருக்க வேண்டுமென வியாக்கியானம் செய்கிறார்கள்.
மேற்குலக அனுசரணையில் இயங்கும் கிறிஸ்டின் லகாட்டின் அனைத்துலக நாணய நிதியமும், மோடிக்கு அறிவுரை வழங்கும் உலக வங்கியும், ஏனைய நிதி நிறுவனங்களும், 100 நாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவின் இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பொருளாதாரச் சலுகைகளை எத்தனை நாட்களுக்கு அனுமதிப்பார்கள்?. கடன் வழங்கிய பின், IMF விதிக்கும் கட்டுப்பாடுகள் பற்றி நாடாளுமன்றில் ஜே.வி.பி.யினர் முன்வைக்கும் விவாதங்களை இப்போது நினைவிற் கொள்வது பொருத்தமானது.
சீனாவின் எக்சிம் வங்கி சென்றபின்னர், அமெரிக்காவின் எக்ஸிம் வங்கி நுழைந்து என்ன செய்யுமென்பதை, இந்த தென்னிலங்கை 'சர்வதேச உறவு விற்பனர்கள்' புரிந்து கொள்வார்களா..தெரியவில்லை.
சோவியத் காலத்திலிருந்து பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவினைப்பேணி வந்த அமெரிக்கா, சீனாவின் எழுச்சி கண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக இந்தியாவினை அரவணைப்பதை புரிந்து கொள்ளும் சிங்கள தேசம், இந்திய-அமெரிக்க நேர்கோட்டு அச்சில் பயணிக்க வேண்டுமென விரும்புவது போலுள்ளது.
இப்பிராந்தியத்தில் இன்னமும் பலமான தனிச் சக்தியாக இருக்கும் சீனாவின் பொருண்மிய- படைத்துறை ஆளுமை குறித்த அச்சம், இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் இருக்கிறது. ஆளில்லா தாக்குதல் போர் விமானங்களின் கூட்டுத் தயாரிப்பில் இந்தியாவை இணைக்கும் புதிய திட்டத்தை ஒபாமா டெல்லியில் வைத்து அறிவித்தார். பேரழிவு ஆயுத தயாரிப்பாளர் லொக்கீட் மார்டினுக்கு இது உவப்பான செய்தி.
இது சீனாவிற்கு அமெரிக்கா சொல்லும் சிறிய செய்தி. ஆனால் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI ) எதிர்பார்க்கும் இந்திய ரிசேர்வ் வங்கிக்கும், மேற்குலகோடு இணைந்து செயற்படும் இந்திய பன்னாட்டு கொம்பனிகளுக்கு இது பெரிய செய்தி.
தென்னிலங்கை ஆட்சியாளர்களும், அதன் வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்களும் இப்போது எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை என்ன?.
மகிந்த குழுவிடமிருக்கும் புலிகளை வென்ற வெற்றி பிரகடனத்தை செயலிழக்க, அல்லது நீர்த்துப் போகச் செய்வதே புதிய இரணில் - சந்திரிகா - மைத்திரி கூட்டின் தேவையாகும்.
மேற்குலகோடு இணங்கிச் சென்று போர்க்குற்ற விசாரணையை இல்லாமல் செய்தால், மகிந்தரின் 'அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு துருப்புச் சீட்டு', செயலிழந்து போகும் என்பதோடு, மகிந்தரின் போர்வெற்றிக் கவசமும் காலப்போக்கில் கழன்று போகுமென கணிப்பிடுகின்றார்கள்.
அத்தோடு, சீனா மற்றும் ஜப்பானின் உடனான வழமையான உறவுகளைப் பேணியவாறு, 2009 இற்கு முன் இருந்தது போல், சர்வதேச உறவுகளைப் பேணலாமென அறிவுரை சொல்லப்படுகிறது.
இலங்கையின் அமைவிடம் மாறாது என்பது நிஜம். ஆனால் இவர்கள் கையாள நினைக்கும் வல்லரசாளர்களின், மேலாதிக்க வலயத்துள் அடங்கியிருக்கும் நாடுகளின் எண்ணிக்கை மாறுமல்லவா...
அவர்களின் நில மேலாதிக்கமும் மாறும். இனி ஆசியாவில் ஏற்படப்போகும் மேலாதிக்க மோதல்களில், இலங்கையின் வழமையான தந்திரோபாயங்கள் நீடித்து நிலைக்காது. அதன் முக்கியத்துவமும் பத்தோடு பதினொன்றாக மாறிவிடும்.
இந்தியா - சீனாவின் வளர்ச்சியும், அமெரிக்காவின் ஒருதரப்பு அனுசரணையும், இவர்களிடையே எழும் முரண்பாடுகளும், முதலாம் இரண்டாம் உலக யுத்த கால இழுபறி நிலைகளை ஏதோவொரு விதத்தில் மீண்டும் நினைவூட்டும்.
நன்றி
வீரசேகரி

No comments:

Post a Comment