February 15, 2015

ஐ.நா விசாரணை அறிக்கை தாமதமின்றி வெளியிடப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்!

போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால்
முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையின் அறிக்கை, ஏற்கனவே திட்டமிட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

”ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட, அனைத்துலக விசாரணைக் குழுவின் விசாரணை தற்போது முடிவடைந்திருக்க வேண்டும்.

விசாரணை அறிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும்.

அந்த அறிக்கையை இல்லாமல் செய்வதோ அல்லது தாமதமாக வெளியிடுவதோ ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

அண்மையில் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் மற்றும் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் ஆகியோருடனான சந்திப்புகளின் போதும் இதனை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

அந்த அறிக்கை வெளிவர வேண்டும். அப்போது தான் நாட்டு மக்களால் கூட உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும்.

அதேவேளை, இனப்படுகொலை தொடர்பாக வடக்கு மாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மதிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment