நாட்டைத் துண்டாடி பயங்கரவாதத்தை விதைத்த கரும்புலிகளுக்க சுதந்திர தினத்தன்று விடுதலையளிக்கப்பட்டதாகவும் எனினும் நாட்டைக் காப்பாற்ற
முன் வந்த தலைவனோடு சேர்ந்தியங்கிய தமக்கெதிராக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச.
இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலமளித்து வெளியேறிய சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதோடு தனது குழந்தைகளுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நுகேகொட கூட்டத்தின் பின்னரே இவ்வாறு நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், இன்றைய தினம் இடம்பெற்ற விசாரணை 2011ம் ஆண்டு கடுவல நகரபிதா புத்ததாசவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலானது என பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் விமல் வீரவன்சவின் மனைவி போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதும் பொலிஸ் தகவலின் அடிப்படையில் அவர் மாலை 7 மணியளவில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பினும் அவர் இரவு 11 மணிக்கே கைது செய்யப்பட்டார் என விமல் தரப்பு தெரிவிக்கிறது. கைதான செய்தி அன்னளவாக இரவு 7.30 அளவில் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
புத்ததாசவும் விமல் வீரவன்சவும் நீண்ட கால அரசியல் எதிரிகளாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளமையும் கடந்த ஆட்சியிலும் இருவரும் அவ்வப்போது அறிக்கைகள் மூலமும் மோதிக்கொண்டமையும் அமைச்சராக இருந்த விமல் வீரவன்சவுக்கு எதிராக 2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை இப்போதே பொலிசார் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment