February 23, 2015

நாளைய பல்கலைக்கழக சமூகத்தின் போராட்டத்திற்கு கூட்டமைப்பும் ஆரதவு தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்க கழக சமூகம் நாளை (24.02.2015) ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை விரைவுபடுத்த வலியுறுத்தி நடாத்த இருக்கும் பாரிய
ஆர்பாட்ட பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது. இந்த பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றது. இது குறித்து ஏற்கனவே மாவை.சேனாதிராஜா அவர்கள் கூட ஒரு அறிக்கைளை வெளியிட்டுள்ளார். இந்தப் பேரணி சாதாரண விடயமல்ல. மாறா ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் அவர்களுக்கும் இலங்கையில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கும, சர்வதேச சமூகத்திற்கும் இந்த ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக தமிழ் மக்களின் மன உணர்வுகள் என்ன என்பதை தெளிவுபடுத்துவதுதான் இந்த பேரணியின் முக்கியமான நோக்கம். ஏனென்றால் இலங்கை அரசாங்கம் இந்த ஐ.நா விசாரணையை காலதாமதம் செய்யும்படி கேட்டிருக்கின்ற அதேசமயம் அதனை ஒப்புக் கொண்டு ஐ.நா ஆணையாளரும் அடுத்த செம்ரெம்பர் மாதம் அதனை வெளியிட உள்ளோம் என்று கூறிய ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களிளுடைய உயர்வுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை தெரியப்படுத்தும் நோக்கத்துடன், தெளிவுபடுத்தும் முகமாக இந்தப் பேரணி நடைபெற இருக்கின்றது.


ஆகவே இந்த வகையில் இது ஒரு முக்கியமான பேரணி எனவே தமிழ் மக்கள் அனைவரும் நாளைய தினத்தை இதற்கென ஒதுக்கி கலந்து கொள்ள வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விரும்பம். இது தமிழ் மக்களுக்காய் விடுக்கப்படும் அன்பான அழைப்பு. இளைஞர்கள், யுவதிகள், பெரியோர்கள் என அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் மௌமாக இருப்போமாக இருந்தால் எங்களுடைய மௌனம் அவர்கள் செய்வதையெல்லாம் சரியாக்கிவிடும். ஆகவே எமது உணர்வுகளை தெரிவிக்க வேண்டியது எமது கடமைப்பாடு ஆகவே அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை.

பத்திரிகைகளில் நான் பார்த்தேன் மீள்குடியேற்ற அமைச்சர் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து இராணுவத்தின் பாவணையில் இல்லாத இராணுவத்தினருக்கு தேவைப்படாத காணிகளை தான் விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். நாங்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு தெளிவான விடயத்தை கூறியிருக்கின்றோம். மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் மீளவும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அது இராணுவம் கையகப்படுத்தியிருந்தாலென்ன, கடற்படை கையகப்படுத்தியிருந்தால் என்ன அல்லது வேறு காரணங்களுக்காக அரசு சுவீகரித்து இருந்தால் என்ன தனிப்பட்ட நபர்களுக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் மீளவும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இராணுவத்தின் தேவைபோக அல்லது இராணுவம் விடுத்தப்பின் என்ற கூற்றுக்கு இடமில்லை. பிரதமரும், மீள்குடியேற்ற அமைச்சாரும் இவ்விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்றால் ஒரு முழுமையான மீள்குடியேற்றத்தை எதிர்ப்பார்க்கின்றார்கள். அவருக்கு பல தடவைகள் இந்த விடயத்தை தெளிவாக கூறியிருக்கின்றோம். ஆகவே இந்த விடயங்களில் அவர் சரியான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்திடம் முதலாவதாக நாங்கள் கோருவது என்னவென்றால் அவர்கள் அரசியல் ரீதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதாவது இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படுவார்கள் என்ற உறுதி மொழி அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறான முடிவை அரசாங்கம் எடுத்தால் மாத்திரமே மீள்குடியேற்றம் முழுமையாக சாத்தியப்படும்.
இன்று மீள் குடியேற்றம் என்பது மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது. தொடர்ச்சியாக அது பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது. ஆகவே மிக விரைவில் அரசாங்கம் மக்களுக்கான பதிலை கொடுக்க வேண்டும். அவர்களை முழுமையாக மீள் குடியேற்ற வைக்க வேண்டும்.

முன்னைய அரசாங்கத்தில் மன்னாருக்கும், வவுனியாவிற்கும் சிங்கள அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டார்கள். வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் 95 வீதமாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் இந்த நியமனங்கள் வழங்;கப்பட்டு இருந்தன. நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் 10 நிர்வாக சேவை உத்தியேகத்தர்களாக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவற்றையெல்லாம் நாங்கள் அந்த நேரம் கண்டித்திருந்தோம். இவர்கள் மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கத்தில் கூட நெடுங்கேணி தமிழ் கிராமத்திற்கு மத்தும பண்டார என்ற சிங்கள கிராம சேவகர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை கடந்த மூன்று நாட்களாக திருகோணமலை டிப்போவில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகின்றது. டிப்போ சுப்பிரின்டன்டிற்கான தகுதிவாய்ந்த தமிழ் ஒருவருக்கு நியமனம் வழங்கப்பட்டு 3 தினங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில் அவர் நீக்கப்பட்டு எந்தவித தகுதியும் இல்லாத சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகின்றது. பதிவிநீக்கப்பட்ட தமிழரே தகுதிவாய்ந்தவர் அவர் இரண்டாம் நிலை உத்தியோகத்தராக இருந்தவர் அவருக்கு முழு தகுதிகள் இருந்த நிலையிலே அவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் அரசாங்க அமைச்சர்களின் முயற்சியினால் அவர் பதவியிறக்கப்பட்டு ஒரு பஸ் ஓட்டுனராக கடமையாற்றிய தொழிலாளியை டிப்போ சுப்பிரின்டனாக உயர்த்தியிருக்கின்றார்கள். இது கேலிக்குரிய விடயம் மாத்திரமல்ல, தமிழ் அதிகாரிகள் அவ்வாறான இடங்களில் இருக்கக் கூடாது என்ற அமைச்சர்களின் நடவடிக்கையைத்தான் இது காட்டுகின்றது. திருகோணமலையின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சாராகவும் இருக்கின்ற குணரத்தின அவர்களே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்பதை நான் அறிகின்றேன்.

இது போன்ற சம்பங்களை பார்க்கும் போது முன்னைய அரசாங்கத்தினுடைய வழி வகைகளையா இன்றைய அரசாங்கமும் பின்பற்றுகின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது. புதிய அரசாங்கம் வந்தப்பின்னும் மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.

அது மாத்திரமல்லாமல் நெடுங்கேணியின் ஒருபகுதியையும், முல்லைத்தீவினுடைய ஒரு பகுதியையும் இணைத்து மணலாறு என்ற புதிய பிரதேச செயலகம் ஒன்றை நிறுவுதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த அடிப்படையில் நெடுங்கேணியில் இருக்கக் கூடிய கிராமங்களை தங்களுடன் சேர்ப்பதற்கும் அதேபேன்று முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களையும் அதனுடன் இணைப்பதற்குமான நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். ஆகவே இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களுடைய காணிகளை சிங்கள மயப்படுத்துவது அல்லது புதிய சிங்கள பிரதேச செயலகங்களை உருவாக்குவது அதனூடாக தமிழ் மக்களின் காணிகளை பறிப்பதென்ற முன்னைய அரசாங்கத்திடைய நடவடிக்கைகளை இந்த அரசாங்கமும் தொடரக் கூடாது என்பதுதான் தமிழ் மக்களின் கோரிக்கை.

வருகின்ற மாதம் நடுப்பகுதியளவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் அவர் யாழ்ப்பாணமும் வருகை தர இருக்கின்றார். ஆகவே அவரது யாழ்ப்பாண வருகையென்பது மிகமிக முக்கியத்துவமான வருகை. தமிழ் மக்கள் அவருடைய வருகையை முழுமனதுடன் வரவேற்கின்றார்கள் அதேசமயம். அவர் வருவதற்கு முன்பதாக இந்திய பிரதமருக்கு சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகின்றோம். வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் இந்த மீள் குடியேற்றமென்பது இன்னும் முழுமையாக முடியவில்லை. இப்போதும் மீள் குடியேற்றம் தொடர்பாக நாங்கள் அரசுடன் பேராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அகவே இந்த மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்பட வேண்டும். இந்தியாவில் இருக்கும் அகதிகள் இங்கு வருவதை நாம் விரும்புகின்றோம். அவர்கள் இங்கு வருவதாக இருந்தால் முதற்கட்டமாக இங்கிருக்கும் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். அங்கிருந்து வரக்கூடிய மக்களுக்கான மீள்குடியேற்றத்திற்கான சகல ஒழுங்குகளும் மேற் கொள்ளப்பட வேண்டும். ஆகவே அவருடைய யாழ்ப்பாண வருகையென்பது இவ்வாறான விடயத்தை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதை பனிவன்புடன் அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.
இதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலை, அற்ப காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கின்றார்கள். பல முக்கியஸ்தர்கள் வெளியில் நடமாடுகின்ற பொழுது அரசாங்கம் இன்னும் இவர்களை தொடர்ச்சியாக தடுத்து வைத்திருக்கின்றது. ஒரு குழுநியமிக்கப்பட்டாலும் கூட நாங்கள் இவர்களுக்கான பொது மன்னிப்பை கோரியிருக்கின்றோம். ஆகவே அவர்களும் விடுவிக்கப்பட்டு அவர்கள் தமது சொந்த வாழ்க்கையை நடத்தும் சூழ்;நிலையை உருவாக வேண்டும். இந்திய பிரதமரின் விஜயம் அதற்கும் வழியமைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.

காணமல் போனோர் விடயத்தை எடுத்துக் கொண்டால் காணமல் போனோர் தொடர்பாக ஒரு கொமிசன் நியமிக்கப்பட்டு 2 வருடகாலம் அந்த கொமிசன் விசாரணை நடத்தி இதுவரையில் ஒருவரையேனும் கண்டுபிடித்து விடுவிக்காத சூழ்நிலையில் இந்த கொமிசனால் என்ன பிரயோசனம் என்ற கேள்வி நிச்சயமாக இருக்கின்றது. ஆகவே இந்த காணமல் போனோர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் திட்டவட்டமான செய்திகளை தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள் என பலருக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். மக்கள் முன்னிலையில் இவ்வாறான பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆகவே இவர்கள் சரணடையவில்லை என்றோ, கைது செய்யப்படவில்லை என்றோ, கடத்தப்படவில்லை என்றோ கூறமுடியாது. இந்த விடயங்கள் எந்த வித பதில்களும் இல்லாமல் நீண்டு கொண்டு போவதென்பது உற்றார், உறவினர்களுக்கு இவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்ற பெரிய கேள்வியை ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் போகின்ற இடமெங்கும் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறக் கூடிய சூழல் இருக்கின்றது. ஆகவே இந்த நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் இந்திய பிரதமரின் விஜயம் அமைய வேண்டும் நாங்கள் விரும்புகின்றோம். இந்தியப்பிரதமர் அவர்களை அன்புடன் நாங்கள் வரவேற்க தயாராக உள்ளோம். அவரது வருகையென்பது தமிழ் மக்களின் பல பிரச்சினைகளை தீர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரசாங்கம் கொஞ்சம் இரக்கப்பட்டதனாலேயே வட மாகாணத்தில் ஆளுநர் மாற்றப்பட்டார். அந்த ஆளுநர் மாற்றப்பட்டதனால் முதன்மைச் செயலாளர் மாற்றப்பட்டார் என்ற நிலைதான் இருக்கின்றது. ஆகவே உரிமைகள் என்பது இரக்க்ததை அடிப்படையாகக் கொண்டு வழங்;கப்படுவதல்ல. உரிமைகள் என்பது மக்களுக்கு உரித்தானது. யாராலும் பறிக்கப்பட முடியாதது என்ற அடிப்படையில் தமிழ் தீர்வென்பது அமைய வேண்டும். 13 ஆம் திருத்தச்சட்டமென்பது அவ்வாறானதல்ல. ஆகவே இந்த இனப்பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வை காணக்கூடிய வகையில், சரியான வகையில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கூடிய வகையில் இந்தியா இந்தியா தொழிற்பட வெண்டுமெனவும் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். 13 ஆவது திருத்தமென்பது அரசாங்கம் விரும்பினால் நடைமுறைப்படுத்தும். விருப்பமில்லாவிட்டால் விடுமென்ற சூழ்நிலைகள் ஒரு தீர்வுத்திட்டத்தில் இருக்கக்கூடாது. தீர்வுத்திட்டமென்று எடுத்துக் கொண்டால் நூற்றுக்கு நூறு வீதம் அது அமுல்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தமிழ் மக்கள் எந்தவித குழப்பமும் இல்லாமல் தம்மைத்தாமே வளர்ச்சியடையச் செய்து கொண்டுவாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இந்தியப்பிரதமரின் விஜயம் இவற்றை கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கருதுகின்றோம்.

No comments:

Post a Comment