February 22, 2015

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு- மேல்முறையீட்டு விசாரணை முடிகிறது: 2 வாரங்களில் தீர்ப்பு?

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல்
செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவுக்கு வர இருக்கிறது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் 2 வாரங்களில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சசிகலா ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. இதனால் முதல்வர் பதவியை பறிகொடுத்தார் ஜெயலலிதா.

தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தினமும் நடைபெற்று வருகிறது. தற்போது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது வழக்கறிஞர்கள் வாதம் நிறைவடைந்து விட்டது. மொத்தம் 31 நாட்கள் இவர்கள் வாதத்தை முன்வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்கள் வழக்கறிஞர்கள் வாதம் நேற்று தொடங்கியது.

இந்த வழக்கறிஞர்கள் வாதம் முடிந்ததும் நீதிபதி குமாரசாமி, தனியார் நிறுவனங்களின் வாதத்தை வருகிற 23-ந் தேதியுடன் முடித்துக் கொள்ளுமாறும், அதன் பிறகு இறுதி வாதத்தை அரசு வழக்கறிஞர் பவானி சிங் தொடங்க வேண்டும். அவரது வாதமும் முடிந்து விட்டால் தீர்ப்பு தேதியை அறிவித்து விடுவேன் என்றார். உடனே அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதம் தொடர்வதற்கு 5 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அதை ஏற்க மறுத்த நீதிபதி வருகிற 23-ந் தேதி 6 நிறுவனங்களின் வாதம் முடிந்ததும் 24-ந் தேதி முதல் நீங்கள் வாதத்தை தொடங்கலாம் என்றார்.

ஏற்கனவே ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் இறுதி வாதம் முடிந்து விட்ட நிலையில் பவானி சிங்கும் அடுத்த வாரத்துக்குள் தனது இறுதி வாதத்தை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மார்ச் முதல் வாரத்தில் நீதிபதி குமாரசாமி இந்த மேல் முறையீட்டு வழக்கில் தனது தீர்ப்பை வழங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூற 18 ஆண்டுகள் ஆன நிலையில், மேல் முறையீட்டு மனு மீது விசாரணையை 3 மாதத்தில் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதை கருத்தில் கொண்டு தான் நீதிபதி குமாரசாமி இந்த வழக்கில் பல்வேறு தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்க மறுத்து வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தினார். அவர் தனது விசாரணையின் முதல் நாளில் குறிப்பிட்ட படி 31 நாளில் இறுதி வாதத்தை முடிக்க வைத்துள்ளார். இன்னும் 2 வாரத்தில் தீர்ப்பு கூறும் நிலையை வழக்கு எட்டியுள்ளது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment