கடந்த காலங்களில், ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளை வெள்ளை வான்களில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவங்கள்
தொடர்பில், வெள்ளை வானில் கடத்தப்பட்டு நீதிமன்றினூடாக விடுதலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
“தலைநகரிலிருந்து முக்கிய அமைச்சரொருவர் இவ்விடயம் தொடர்பில் என்னிடம் வினவினார். 2009ஆம் ஆண்டு பெப்ரவரியில் வெள்ளை வானில் வந்தவர்களால் நான் கடத்தப்பட்டேன்.
அதன் பின்னர், இந்த கடத்தல் தொடர்பில் மேலிடத்துக்கு அழுத்தம் அதிகரித்ததால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டேன். வெள்ளை வானில் கடத்தப்பட்டு உயிருடன் மீண்டவன் என்ற அடிப்படையில் அக்கடத்தல்கள் தொடர்பாக என்னிடம் விவரங்களை பெறவேண்டும் எனவும் அதற்கு ஒத்துழைக்குமாறும் என்னை அந்த அமைச்சர் கேட்டுக்கொண்டார். என் தரப்பு அனுபவங்களை அவர்களுக்கு வழங்க தயாராக இருப்பதாக நான் அவருக்கு தெரிவித்தேன்” என்று கூறினார்.
வெள்ளை வான் கடத்தல்களில் பின்னணியில் யார் யாரெல்லாம் செயற்பட்டார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாகவே வித்தியாதரனிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு லசந்தவின் கொலைக்கு பின்னர், வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வித்தியாதரன் பேட்டி ஒன்றினை வழங்கியிருந்தார். அதில் தனக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், கடத்தல்களின் பின்னணி தொடர்பில் ஆராயப்படவேண்டும் என்பதோடு, வீட்டிலிருந்து வருகின்ற நாங்கள் உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்புவோமா என்பது தெரியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பேட்டியின் பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை குறித்த வெளிநாட்டு ஊடகவியலாளர் பேட்டி எடுப்பதற்காகச் சென்றிருந்தார். அந்த ஊடகவியலாளர் கோட்டாபாயவின் அலுவலக வாசலுக்கு செல்லும்போதுதான் வித்தியாதரன் கடத்தப்பட்டார். இதுதொடர்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர், கோட்டாவிடம் கேட்டபோது பகிரங்கமாகவே வித்தியாதரனை விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்படுத்தி திட்டித்தீர்த்தார். அவர் ஒரு தீவிரவாதி எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், வித்தியாதரன் கடத்தப்பட்டதன் பின்னர் குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால், பல மணி நேரத்தின் பின்னர், வித்தியாதரன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டு, குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார். அப்போது, குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்க செயற்பட்டார். இப்பொழுது இவர் டி.ஐ.ஜி. தரத்தில் இருக்கின்றார். இவரும் இப்பொழுது பல சிக்கல்களில் மாட்டியிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியாதரனின் வாக்குமூலத்தின் பின்னர், பல உண்மைகள் வெளிவரும் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment