August 24, 2014

இன்றைய வாழ்க்கையைவிட அன்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாழ்க்கை நன்றாக இருந்ததே என்று ஏங்கும் தமிழ்மக்களின் மனங்களை அரசாங்கத்தினால் வெல்ல முடியாதிருப்பது ஏன்??

 , குண்டுச் சத்தங்களும் இப்போது கேட்பதில்லை. எவரும் காயப்படுவதில்லை. கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவதுமில்லை. இரத்த ஆறு ஓடுவதுமில்லை. ஆனால் யுத்த காலத்து
நெருக்கடிகளையும்விட அதிக அளவிலான நெருக்கடிகளுக்குள் யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் இப்போது சிக்கியிருக்கின்றார்கள். சமயங்களில், யுத்தம் முடியாமலேயே இருந்திருக்கலாமே என்றுகூட அவர்கள் சிந்திக்கத் தலைப்படும் அளவிற்கு நிலைமைகள் மோசமாகியிருக்கின்றன.
நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களாகின்றன. ஆயினும் நாட்டில் சமாதானம் ஏற்படவில்லை. நல்லிணக்கமும், ஐக்கியமும் எப்போது ஏற்படும் என்று போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். வேட்டுச் சத்தங்களும்
மோசமான யுத்தம் ஒன்றில் பயங்கரவாதிகளாக அரசாங்கத்தினால் சித்தரிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளை வெற்றி கொண்டுள்ள போதிலும், அவர்களின் பிடியில் இருந்து மீட்டதாகக் கூறப்படுகின்ற பொதுமக்களின் மனங்களை வெல்ல முடியாதிருக்கின்றது.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைவிட விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தக் கால வாழ்க்கை நன்றாக இருந்ததே என்று அவர்கள் பல சமயங்களில் ஒப்பிட்டுப் பார்த்து பெருமூச்சுவிடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இடம்பெயர்ந்த எத்தனையோ குடும்பங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாதவாறு இராணுவத்தினர் அந்த இடங்களில் இன்னும் நிலைகொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் மேலும், மேலும் தங்களுக்குக் காணிகள் வேண்டும் என்று அவர்கள் அடம்பிடித்து பொதுமக்களின் காணிகளை அபகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இயல்பு நிலைமையை ஏற்படுத்த வேண்டிய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது, எனவே, இராணுவத்தினருக்குத் தேவையான காணிகளைப் பெற்று;கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குக் கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கின்றது. இது தேவையான போது எழுத்திலும், பொதுவாக எழுத்தில் இல்லாத நிர்ப்பந்தம் மிக்க உத்தரவாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
காணிகளின் உண்மையான உரிமையாளர்கள் உறவினர் நண்பர்களது வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் பலர், ஏற்கனவே அகதி முகாம்களாக இருந்த இடங்களில் அதிகாரபூர்மற்ற அகதிகளாக அழிந்து போன கொட்டில்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சொந்தக் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ளவர்களுக்கான வசதிகள் பல செய்யப்படுகின்றன. ஆயினும், அவர்கள் அரசாங்கக் கட்சிக்கும், அரச ஆதரவு அரசியல்வாதிகளுக்கும் வாக்களித்திருக்கின்றார்களா என்பதைப் பொறுத்தே அந்த வசதிகள் அவர்களைச்
சென்றடைகின்றன.
யுத்தத்தின் பின்னர் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் தேர்தல்களை நடத்தியதாகக் கூறப்படுகின்றது. இந்தத் தேர்தல்களில், ஜனநாயக உரிமையை – வாக்களிக்கும் உரிமையை மக்கள் சுதந்திரமாகத் தாங்கள் விரும்பியவர்களைத் தெரிவு செய்வதற்காகப் பயன்படுத்தியிருந்தார்கள். இவர்களில் அரச ஆதரவு அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்காதவர்கள் இனம் காணப்பட்டு, அவர்களுக்கு அரச உதவித் திட்டங்கள், அரவ வசதித்திட்டங்கள் என்பன திட்டமிட்ட முறையில் மறுக்கப்படுகின்றன.
அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்குரிய உதவிகளும் முழுமையாக அவர்களைச் சென்றடைவதில்லை. அரச உதவித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செய்பவர்கள் அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாக இருப்பதனால், அந்தத் திட்டங்களில் ஊழல்கள் மலிந்திருப்பதாகவே கூறப்படுகி;ன்றது.
அநேகமான வேலைத்திட்டங்கள் உள்ளுர் மக்கள் அல்லது பயனாளிகளின் பங்களிப்பின்றியே, அவர்களின் நேரடி தேவைகளைக் கருத்திற் கொள்ளாத வகையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன.
இதனால் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைச் சரியாக இனங்கண்டு, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் வளர்ச்சிப் பணிகளுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற கடுமையான விமர்சனம் பல முனைகளில் இருந்தும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
நிலைத்து நிற்கத்தக்க பொருளாதார வளர்ச்சியில்லை
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார வளர்ச்சி என்பது, நிரந்தரமாக நிலைத்து நிற்கத்தக்க வகையில், சரியான முறையில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுவதில்லை என்று பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
யுதத்தினால் அழிந்த இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்திருக்கின்றோம் அந்தப் பிரதேசங்களில் புதுப் பொலிவை ஏற்படுத்தியிருக்கின்றோம் என்ற அரசியல் ரீதியான பிரசாரத்திற்குப் பயன்படத்தக்க வகையிலான அபிவிருத்திச் செயற்பாடுகளே அநேகமாக முன்னெடுக்கப்பட்டிழுக்கின்றன என்று அந்த நிபுணர்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றார்கள்.
யுத்த மோதல்கள் காரணமாக யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களின் பொதுவான கட்டமைப்புக்கள் யாவுமே சிதைந்து போயிருந்தன. யுத்தம் முடிவடைந்ததும், அவற்றைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. இவற்றில் உட்கட்டமைப்பு வசதிகள் பயனுள்ள வகையில் ஓரளவு முன்னெடுக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
ஆனால், சந்தை வாய்ப்பு, நிதி மூலங்களுடன் நேரடித் தொடர்புடைய கட்டமைப்புக்களைப் பொறுத்தமட்டில், யுத்த அழிவிலிருந்து மீள்கின்ற பிரதேசங்களில் தேவைக்கு அதிகமான அளவில் நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
யுத்தத்தினால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக அனைத்தையும் இழந்து வெறும் கையுடன் சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் பூஜ்ஜியத்தில் இருந்துதான் தமது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்காக முதல் சுற்று விவசாய முயற்சிகளுக்காக நன்கொடை உதவிகளை அரசும் ஐநூ நிறுவனங்களும் வழங்கியிருந்தன. அந்த முயற்சிகளில் பலருக்கும் நன்மைகள் கிடைத்திருந்தன. ஆயினும் அடுத்தடுத்த முயற்சிகளுக்கான முதலீடுகளை அவர்களே தேடிக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருந்தது. இதற்காக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வட்டியுடன் கூடிய கடன் வசதிகளைச் செய்திருந்தன.
அதேவேளை, சேமிப்புக்களை முன்னெடுக்கின்ற நிதி நிறுவனங்களும், கட்டுப்பணத்திற்கு வாகனங்களை விற்பனை செய்கின்ற நிறுவனங்களும் புற்றீசல்களைப் போன்று மீள்குடியேற்ற பிரதேசங்களில் குவிந்து அந்த மக்கள் மத்தியில் தமது வியாபாரத்தை நடத்தி வருகின்றன. கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம், அவர்களைக் கவர்ந்திழுத்து வாகனங்களை விற்பனை செய்து வருகின்றார்கள். நிலையான ஒரு வருமானமில்லாத ஒரு நிலையில். தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகப் பலர் மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம், இரண்டு சக்கர உழவு இயந்திரம், நெல் அறுவடை செய்து சூடடிக்கும் இயந்திரம் போன்ற பல்வேறு பொருட்களைக் கொள்வனவு செய்திருக்கின்றார்கள்.
நிரந்தரமான, சீரான வருமானம் இல்லாத காரணத்தினால், பெரும்பான்மையானவர்கள் தாங்கள் கொள்வனவு செய்த வாகனங்கள் அல்லது இயந்திரங்களுக்குரிய மாதாந்த கட்டுப்பணத்தை செலுத்த முடியாத அவல நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அதேநேரம் பலர் வான்கள், பேருந்துகள் போன்ற போக்குவரத்துக்குரிய வாகனங்களையும், பொருட்களை ஏற்றி இறக்குவதற்குரிய சிறிய பெரிய ரக வாகனங்களையும் கொள்வனவு செய்திருந்த போதிலும், அவற்றின் மூலம் நிரந்தரமான வருமானத்தை ஈட்டுவதற்கான சந்தை வியாபார வாய்ப்பு இல்லாத காரணத்தினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதனால் பலர் இரண்டு வருடங்கள் தொடக்கம் ஐந்து ஆறு வருடங்களில் கட்டுப்பணத்தைச் சீராகச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்துவிட்டு, ஒன்றிரண்டு வருடங்களில் கட்டுப்பணத்தை முறையாகச் செலுத்த முடியாமல் நிறுவனங்கள் பலவற்றிற்குக் கடன்காரர்களாக மாறியிருக்கின்றார்கள்.
அவ்வாறரனவர்களிடமிருந்து தாங்கள் விற்பனை செய்திருந்த வாகனங்களை அவர்களுடன் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்த விதிகளுக்கு அமைவாக, பல நிறுவனங்கள் பலரிடமிருந்து கைப்பற்றிச் சென்றிருக்கின்றன. இதனால் வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் பெரும் பண நட்டத்திற்கும் தொழில் நட்டத்திற்கும் ஆளாக நேரிட்டிருக்கின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் தலைமறைவாகியிருக்கின்றார்கள். சிலர் தற்கொலை முயற்சிகளுக்குத் தள்ளப்பட்டுள்ள அவல நி;லைமையும் ஏற்பட்டிருக்கின்றது.
யுத்தம் முவடைந்ததன் பின்னரான கடந்த ஐந்து வருடங்களிலும் மீள்குடியேற்றப் பகுதிகளில் சீரான சுழற்சி முறையில் மழை பெய்யவில்லை. காலம் தப்பிய மழை காரணமாக விவசாய முயற்சிகளை மக்கள் உரிய காலத்தில் மேற்கொண்டு உரிய காலத்தில் அறுவடை செய்ய முடியவில்லை. குளங்களுக்குப் போதிய தண்ணீர் வராத அளவுக்கு மோசமான வரட்சியும், மாரி காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் மழை பெய்யாமல், பிந்திப் பெய்து பின்னர் நெல் விளையும் பருவத்தில் பேய் மழையாகப் பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து பயிர்களை முற்றாக அழித்த மோசமான வெள்ள நிலைமையும் இந்தக் காலப் பகுதியில் ஏற்பட்டிருந்தன. இதனால் விவசாயிகளும் தோட்டச் செய்கையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
விவசாய முயற்சிகளில் அவர்கள் முதலீடு செய்திருந்த பணத்தை வருமானமாக மீளப் பெற முடியாத காரணத்தினால், வங்கிகளில் இருந்தும், விவசாய அமைப்புக்களிடமிருந்தும் தாங்கள் பெற்றிருந்த கடன்களுக்கான தொகையையோ அல்லது அதற்குரிய வட்டியையோ கட்ட முடியாத நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். இவ்வாறு இரண்டு மூன்று பருவங்களில் பாதிக்கப்பட்ட பல விவசாயிகள் இன்று வங்கிகளுக்குக் கடன்காரர்களாக மாறியிருக்கின்றார்கள். வங்கிகளும் அவர்களிடமிருந்து எப்படியாவது கடன்களை அறவிட்டுவிட வேண்டும் என்பதற்காக இணக்க சபைகளிலும் பலருக்கு எதிராக நீதிமன்றங்களிலும் வழக்கு பதிவ செய்திருக்கின்றார்கள்.
இணக்கசபைகளில் வழக்குகளை இணக்கமான முறையில் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆயினும் அரச வங்கிகள் நீதிமன்றங்களில் வழக்குகளைப் பதிவு செய்து கடனாளிகளின் காணிகளை சீல் வைத்து அதன் மூலம் கடன்தொகையை அறவிடும் அளவுக்கு தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன.
மன்னார் மாவட்டம் அடம்பன் பிரதேசத்தில் மாத்திரம் 45 கடனாளிகள் இத்தகைய மோசமான நிலைமைக்கு ஆளாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இத்திக்கண்டல் என்ற இடத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் கிருஷ்ணநேசன், அடம்பன் உயிலங்குளத்தைச் சேர்ந்த பாண்டியன் கணேஷன், வட்டக்கண்டல் ஆலங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் மதன் ஆகிய மூன்று விவசாயிகளுக்கு எதிராக மக்கள் வங்கியினால் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கடன் 2 லட்சத்து 83 ஆயிரத்து, 861 ரூபா ஐந்து சதத்தை அறவீடு செய்வது தொடர்பான வழக்கொன்றில், கடன் தொகையை அதற்குரிய வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த வருடம் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி மன்னார் மாவட்ட நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, வழக்காளியின் முறைப்பாடும், அதற்குரிய ஆவண்ககளும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஏனைய ஆவணங்களின் உள்ளடக்கத்தையும் நீதிமன்றம் பரிசீலனை செய்த பின்னர் தீர்ப்பை வழங்கியுள்ளது.
எதிராளிகள் பணத்தொகை 2 லட்சத்து 83 ஆயிரத்து, 861 ரூபா ஐந்து சதத்தையும், 23.04.2013 ஆம் திகதியில் இருந்து, 07.01.2014 ஆம் திகதி வரையில் அவர்கள் பெற்றிருந்த கடன் இரண்டரை லட்ச ரூபாவுக்கும் 8 வீதப்படி வட்டியையும், அதன் பின்னர் இந்தத் திகதியில் இருந்து கொடுப்பனவு முழுதும், வழக்குச் செலவுடன் சேர்த்து செலுத்தப்படும் வரை, அதே 8வீதப்படி வழக்காளிக்குச் செலுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டு தீர்வையிடப்படுகின்றது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், பொலிசாரும், வங்கி அதிகாரிகளும், நீதிமன்ற உத்தியோகத்தர்களுடன் தமது வீட்டிற்கு வந்து தனது கொட்டில் வீட்டை சீல் வைக்கப்போவதாக அறிவித்ததாகவும், அதற்கு, தான் உடன்படவில்லை என்றும் பெற்ற விவசாய கடனைத் திருப்பிச் செலுத்தாத கடனாளி என சித்தரிக்கப்பட்டுள்ள விதவைப் பெண்ணாகிய கிருஷ்ணம்மாள் கிருஷ்ணநேசன் தெரிவித்தார். தான் தனது இரண்டு பிள்ளைகளுடன் தனது தாயார் தனக்கு வழங்கிய காணியொன்றில் அவருடன் வசித்து வருவதாகவும், அவ்வாறு அவர்கள் சீல் வைப்பார்களேயானால், தாங்கள் வீதிக்குச் செல்லப் போவதில்லை என்றும், உடனடியாகவே தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அதற்கு சீல் வைப்பதற்கு வந்த அனைவருமே பொறுப்பாளிகளாவார்கள் என்றும் தீர்மானமாகக் கூறியதையடுத்து, அவர்கள் பின்பு ஒரு நாள் வருவதாகக் கூறிச் சென்றுவிட்டார்கள் என்று தெரிவித்தார்
சீரான மழை பெய்த காலத்தில் தாங்கள் பெற்றிருந்த இரண்டரை லட்ச ரூபா விவசாயக் கடனை வங்கிக்குச் செலுத்தியிருந்ததாகவும் இரண்டாவது தடவையாகப் பெற்ற கடன் மூலம் செய்த விவசாயம் வெள்ளத்தில் அழிந்து போனதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு தடவை மழை வெள்ளத்தினால் வெள்ளாமை அழிந்தது. அடுத்த தடவை கடும் வரட்சியனால் வெள்ளாமை அழிந்தது. ஆனால் வெள்ள அழிவுக்கும் சரி, வரட்சியினால் ஏற்பட்ட அழிவுக்கும் சரி அரசாங்கம் எங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. நாங்கள் அன்றாடம் சாப்பிடுவதற்கே வழியின்றி தவிக்கின்றோம். இந்த நிலையில் விவசாய கடனைத் திருப்பிக் கட்ட வேண்டும். அதுவும் வட்டிக்கு வட்டி விதித்து பணம் கட்ட வேண்டும் என்றால் நாங்கள் என்ன செய்வது பணத்திற்கு எங்கே போவது என்று கிருஷ்ணம்மாள் கேள்வி எழுப்பினார்.
யுத்தம் முடிவடைந்ததையடுத்து நிலைமைகள் விரைவாக சீரடைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. யுத்தத்திற்கு முன்னர் இருந்த சீரான சமூகக் கட்டமைப்புக்கள், பொருளாதாரக் கட்டமைப்புக்கள் என்பன யுத்தத்தினால் ஏனைய கட்டமைப்புக்களைப் போலவே சீரழிந்து போயின. யுத்தத்தின் போது மக்கள் வேரோடு குடிபெயர்ந்தார்கள். அவர்களின் உடைமைகள், சொத்துக்கள், தொழில்கள் என்று எல்லாமே நிர்மூலமாகிப் போயின. இதனால் சமநிலை சீரற்றுப் போயிற்று.
அரசியல், சமூக, பொருளாதார, குடும்ப வாழ்க்கை என்று சகலதுமே சமநிலை குலைந்து நிலைமை அலங்கோலமாகியிருந்தது. இந்த நிலையில் மீள்குடியேறிய மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பப் போவதாகக் கூறி, சமநிலையற்ற வகையில் மீள்கட்டுமாணப் பணிகளையும், வளர்ச்சி;ப் பணிகளையும் அரசு முன்னெடுத்திருக்கின்றது.
நிலையான வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அத்தியாவசியமான அனைத்துத் துறைகளிலும் சமநிலையான ஒன்றுக்கொன்று இணைந்து செல்லத்தக்க ஒன்றிணைந்த முறையிலான கட்டமைப்பு முயற்சிகளும், வளர்ச்சிப் பணிகளுக்கான வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்க் வேண்டும். இந்தச் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே – யுத்தத்தி;னால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களே முதன்மை பெற்றிருந்திருக்க வேண்டும்.
ஆனால் அரசின் வேலைத்திட்டங்களில் பொதுமக்கள் பின்தள்ளப்பட்டிருப்பதையே காணக் கூடியதாக இருக்கின்றது. அதிகாரத்தில் உள்ள அரச தரப்பினரின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளும், அதற்கான அரசியல் உத்திகளுமே முதன்மை பெற்றிருக்கின்றன. இதற்கு ஆதரவாகவும், அவற்றைச் செயற்படுத்துவத்றகான சக்தியாகிய இராணுவமுமே அதற்கு அடுத்ததாக முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால், போருக்குப் பிந்திய இலங்கையில் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் சமூகம் இராணுவ மயமாக்கப்பட்டிருக்கின்றது. எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம் என்ற போக்கு இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. அத்துடன் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தப் பின்னணியில் யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகியுள்ள மீள்குடியேற்றப் பிரதேசமாகிய வடபகுதியானது, சீரான கட்டமைப்பின்றி மேலும் மேலும் சீரழிந்து செல்லும் அவல நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் நிலைகளில் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க கட்டியெழுப்புவதற்கான, முறையாகத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் இல்லாத வறுமை நிலையையே அரசாங்கத்திடம் காண முடிகின்றது.
யுத்தத்தின் பின்னர், அனைத்துமே, நிலைகுலைந்த ஒரு புதிய பரிமாணத்திற்குள் பிரவேசித்திருக்கின்றோம் என்ற பிரக்ஞையற்ற நி;லையிலேயே காரியங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எதிலும் அரசியல் எங்கும் அரசியல் என்ற போக்கில் அரசாங்கம் இந்தச் சூழலில் செயற்பட்டு வருகின்றது. இதன் காரணமாகத்தான் யுத்தத்தில் வெற்றிபெற்று நாட்டில் யுத்த மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கத்தினால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை. அவர்களிடமிருந்து நாளுக்கு நாள் அரசு தூர விலகிச்சென்று கொண்டிருக்கின்றது.
- செல்வரட்னம் சிறிதரன்

No comments:

Post a Comment