August 19, 2014

முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு இராணுவ தொந்தரவு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து இராணுவத்திடம் சரணடைந்து இலங்கை அரசின் தடுப்பு முகாங்களில் வருடக் கணக்கில் புனர்வு அளிக்கப்பட்டு அதற்கான சான்றுகளுடன் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை இலங்கை அரச படைகள் தொடர்ந்தும் தொந்தரவு கொடுத்துவருகின்றன.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளது வீடுகளுக்கு இராணுவத்தினர் அடிக்கடி செல்வதுடன் அவர்களை அங்கு விசாரணை செய்வதுடன் தமது முகாமிற்கும் அழைத்துச் செல்லுகின்றனர். இந்த நடவடிக்கைகளால் தமது மனநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி கனகபுரத்தை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் போராளி ஒருவர் கூறுகின்றார்.
இதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பத்து வருடங்களாக இயங்கிய முன்னாள் போராளி ஒருவர் அக் காலத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் தனது காலை இழந்திருந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள். மிகவும் வறுமையில் வாடிய குறித்த முன்னாள் போராளி திருகோணமலையில் ஒரு உணவகத்திற்க வேலைக்குச் சென்றிருந்தார்.
வேலைக்குச் சேர்ந்து மூன்று நாட்களில் அவருக்கு வேலை மறுக்கப்பட்டது. இதன் பின்னர் தன்i கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியதாக குறிப்பிடுகின்றார். முன்னாள் போராளிகள் கிரா மற்றும் பிரதேச மட்டத்தில் உள்ள இராணுவத் தரப்புக்களால் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனர்.
அத்துடன் அவர்கள் வெளியிடங்களுக்கு வேலை தேடிச் சென்றாலும் பின் தொடரப்படுவதாக கூறுகின்றனர். இதேவேளை வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சில முன்னாள் போராளிகளை கொழும்பிலிருந்து கிளிநொச்சி நகரத்திற்கு வந்து தற்காலிக அலுவலகம் அமைத்துள்ள நாலாம் மடியினரும் கண்காணிக்கின்றனர்.
அந்தப் போராளிகள் அடிக்கடி அங்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர். இராணுவ முகாங்களுக்கு அழைக்கப்படும்போதும் அல்லது தமது வீடுகளுக்கு இராணுவத்தினர் வரும்போதும் முக்கியமாக இரண்டு விதமாக நடந்து கொள்வதாக முன்னாள் போராளிகள் கூறுகின்றனர்.
தற்போது வடக்கில் வசிக்கும் முக்கிய முன்னாள் போராளிகளைக் காட்டிக் கொடுக்குமாறு கோருகின்றனர். அல்லது தம்மை விசாரணை என்று அழைத்து விட்டு அன்று முழுக்க ஏதுவும் கேட்காமல் அலுவலகத்தில் தடுத்து வைக்கின்றனர். அல்லது வீடுகளில் வந்து இராணுவத்தினர் நாள் முழுக்க பேசுகின்றனர்.
இந்த நடவடிக்கைகள் முன்னாள் போராளிகளை தொடர்ந்தும் தம்மை பதற்றத்திற்கு உள்ளாக்குவதாக அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் தொடர்ந்து முன்னாள் போராளிகளை அச்சுறுத்தலுக்கு உரியவர்களாக சித்திரிக்கவும் முயல்வதும் அமைதியான வாழ்வை தொடரத் தடையாக இருப்பதாக முன்னாள் போராளிகள் கூறுகின்றனர்.
தொழில் வாய்ப்புக்கள் அற்ற நிலையில் தமது குடும்பத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்று தெரியாமல் பெரும் நெருக்கடியின் மத்தியில் வாழும் நிலையில் இராணுவத்தினர் இவ்வாறு தொந்தரவு கொடுப்பது தம்மையும் தமது குடும்பத்தையும் முற்றாக நிம்மதியிழக்க வைத்திருப்பதாக கிளிநொச்சி அக்கராயனைச் சேர்ந்த முன்னாள் மூத்த போராளி ஒருவர் குறிப்பிட்டார்.
உடல் முழுவதும் காயத்தோடு இருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத வள்ளிபுனத்தை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் இன்னமும் பீஸ் துண்டுகளுடன் வாழ்வதாக குறிப்பிட்டார். தன் குழந்தைகளுக்கு படிக்க கொப்பிகள் வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் வாழும்போது இராணுவத்தினர் கொடுக்கும் தொந்தரவுகள் தம்மை முள்ளிவாய்காலிலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என்று நினைப்பதாகச் சொல்லுகிறார்.
முன்னாள் போராளிகளை அச்சுறுத்துவதன் மூலம் அல்லது நெருக்கடி நிலைக்குள் வாழச் செய்வதன் மூலம் மீண்டும் அவர்களோ அல்லது ஏனையோரோ ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுப்பதுவே இதன் நோக்கம் என்று குளோபல் தமிழ் செய்திகளுக்கு தெரிய வருகிறது. இதன் காரணமாகவே தொடர்ந்தும் முன்னாள் போராளிகளுக்கு தொந்தரவு இழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதை ஒரு திட்டமிட்ட அரசியற் செயற்பாடு என்று கொழும்பைச் சேர்ந்த சிங்களப் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகின்றார். அரசாங்கம் சரணடைந்த புலிப் போராளிகளின் உளவியலை எப்போதும் நெருக்கடி நிலையில் வைத்திருக்கவே விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். அது அரசாங்கத்தை சர்வதே நெருக்கடியிலிருந்து பாதுகாக்கவும் உதவுமெனக் கருதுவதாகவும் கூறுகிறார்.


இது கோத்தபாய ராஜபக்சவின் திட்டமிட்ட இந்த செயற்பாட்டில் இலங்கை அரச படைகள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுகின்றனர். முன்னாள் போராளிகளை இயல்பு வாழ்க்கைக்குச் செல்லவிடாமல் அவர்களுக்கு தொந்தரவு இழைப்பதன் மூலம் இராணுவ மயத்தையும் ஆதிக்கத்தையும் காட்டி முழு சமூகத்தையும் அச்சுறுத்துவதும்  இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.X-LTTE

No comments:

Post a Comment