May 11, 2014

நீர்கொழும்பு - கொழும்பு அதிவேக பஸ் தொடர்பில் பயணிகள் முறைப்பாடு!

கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக வீதியினூடாக சேவையிலீடுபடுத்தப்படும் நீர்கொழும்பு - கொழும்பு பஸ்கள் குறைந்த
எண்ணிக்கையில் சேவையில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கருத்து தெரிவிக்கையில்,
கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக வீதியினூடாக பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாகும். இதன் காரணமாக கொழும்புக்கு 20 நிமிடங்களில் செல்ல முடிகிறது. ஆயினும், தற்போது நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன.

இதனால் பயணிகள் அடிக்கடி சிரமத்திற்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டுள்ளது. 20 நிமிடங்களில் கொழும்பை சென்றடைவதற்காக ஒரு மணித்தியாலம் காத்து நிற்க வேண்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி , இந்த பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். அந்த பயணிகள் நின்றபடி அதிவேக வீதியில் பயணம் செய்வது ஆபத்தானதாகும். அத்துடன், நேர அட்டவணைக்கு ஏற்ப தொடர்ச்சியாக பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படுவது அவசியமாகும்.

அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் பஸ்களின் காலதாமதம் காரணமாக சாதாரண பஸ்களில் பயணம் செய்யும் நிலையும் பல சமயங்களில் ஏற்படுகின்றன. எனவே அதிகாரிகள் இது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment