May 18, 2014

படையினரின் இடையூறுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுடன் அகவணக்கம்!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று (மே17 )அகவணக்கம் செய்தார் ரவிகரன். வடமாகாணசபை
உறுப்பினர் ரவிகரனால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வின் ஆரம்பத்தில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கும் தமிழர் இறையாண்மையை காக்கவென களமாடிய மாவீரர்களுக்குமென மக்களுடன் சேர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.


 
20 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் தடைகளுக்கு மத்தியில் மேற்படி நிகழ்வு நடைபெற்றதுடன் நிகழ்வு அனைத்தும் இராணுவபுலனாய்வாளர்களாலும் இராணுவத்தினராலும் காணொளி பதிவாக்கமும் செய்யப்பட்டது.

 இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
 
யுத்தத்தால் தமது தாய் அல்லது தந்தையர் அல்லது இருவரையும் இழந்த கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை சீருடைகள் காலணி(சப்பாத்து) மற்றும் அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வொன்று இன்று காலை முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ரவிகரனால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

 
மேற்படி நிகழ்வு தொடங்கும் முன்னர் மக்கள் செறிவை அவதானித்த இரு புலனாய்வாளர்கள் அங்கு ரவிகரனின் பிரவேசத்தையும் அவதானித்து சற்றே சுதாகரித்து வந்த வாகனங்களையும் மக்களையும் படம் பிடிக்க தொடங்கியதுடன் தொலைபேசி மூலம் தகவல்களையும் வழங்க தொடங்கினர்.
 
அவர்களை அலட்சியம் செய்த ரவிகரன் நிகழ்வை ஆரம்பிக்க எத்தனிக்கையில் உந்துருளிகளில் வருகை தந்த இராணுவத்தினர் ரவிகரனை அழைத்து விசாரிக்க தொடங்கினர்.
 
நீங்கள் யார்? எதற்காக இப்போது இங்கு மக்கள் கூட்டம்? என்று கேள்விகளை கேட்க தொடங்க அவர்களுக்கு  பதிலளித்து  விட்டு  நிகழ்வை ஆரம்பித்தார்.இதன் போது எந்த  நிகழ்வையும் நடத்த 3 நாட்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்று கூறி ராணுவத்தினர் நிகழ்வைத் தடுக்க முயன்றனர். எனினும் அதை முற்றாக எதிர்த்தவாறு நிகழ்வை ஆரம்பித்தார் ரவிகரன். 
 
இதையடுத்து யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் தமிழர் இறையாண்மையை காக்கவென களமாடிய மாவீரர்களுக்குமாக மக்களும் ரவிகரனும் அகவணக்கம் செலுத்தினர். 
 
இதனை தொடர்ந்து நிகழ்வின் ஆரம்ப உரையை வழங்கிக்கொண்டிருக்கையில் வாகனங்களில் வந்திறங்கிய இருபதிற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அங்கே குழுமியதுடன் கூட்டத்தை இடைமறித்து ரவிகரனை அழைத்தனர்.
 
நீங்கள் செய்யும் எந்நிகழ்வாயினும் இந்த தினங்களுக்குள் செய்யவேண்டாம். இவ்வாறான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாமல் இங்கு இருப்பதை நாம் உறுதிப்படுத்தவேண்டும்.  என்று கூறியிருக்கின்றனர்.
 
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு மேற்படி நிகழ்வு அவசியம். அத்துடன் நாம் இங்கு இழந்தது எங்களது மக்கள். எங்கள் உறவுகள் . ஆகவே அகவணக்கம் செலுத்துவதே நாகரிக மரபாகிறது. அவர்களை நினைவு கூரும்  உரிமையை நீங்கள் மறுக்க முடியாது. யுத்த வெற்றி என்று ஆங்காங்கே ஒரு இனம் கொண்டாடும் போது இங்கு நாம் எதுவும் செய்யக்கூடாது என்று எவ்வகையில் சொல்லலாம். இங்கு நாம் செய்வது எமது சமூகத்தை யுத்தத்தின் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் செயன்முறை. என்று கடும் தொனியில் கேட்டார். 
 
எது எப்படியிருந்தாலும் நீங்கள் இங்கு இந்நாட்களில் இவ்வாறான நிகழ்வையும் செய்வது அனுமதிக்கத்தக்கதல்ல என்று கூற அதற்கு குறுக்கிட்ட ரவிகரன் இதனை நீங்கள் மறிப்பீர்களானால் உரியவர்களுக்கு வீடு வீடாக சென்று நான் இந்நாளில் இப்பொருட்களை வழங்கிவிட்டு, அவர்களுடன் உணர்வை பகிர்ந்து விட்டு  செல்வேன். என்று கூறினார்.
 
இப்படியே வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருக்கு ஒரு கட்டத்தில் இராணுவத்தினரின் தடையை மீறி நிகழ்வை  நடாத்தினார் ரவிகரன்.இதன் போது மீண்டும் குறுக்கிட்ட ராணுவத்தினர். அரசியல் உரைகள் எதுவும் ஆற்றப்படக்கூடாது என்று கடுமையாக தெரிவிக்க, 
மக்களுக்கான அவசிய உரைகள் நிகழ்த்தப்படவே வேண்டும் என்று கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்த ரவிகரன் நிகழ்வின் உரையை நிகழ்த்தினார். 
 
எமக்கேற்பட்ட இழப்புகளை தாண்டி எம் சமூகம் எழுச்சியுற தமிழ் சமூகத்தின் கல்வி வளர்சியும் முக்கிய பங்காகிறது. பெற்றோர் பாதுகாவலர் என்ற வகையில் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை உறுதிசெய்யவேண்டியது உங்களது கடமை. இழப்புக்களை தாண்டி எழுச்சியுறு சமூகத்தை கட்டியெழுப்ப இந்நாட்களில் உறுதி காண்போம் என்ற விதத்தில் தனது உரையை நிகழ்த்தியதோடு மாணவர்களுக்கும் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய பெற்றோருக்கும் குறித்த பொருட்களை வழங்கினார்.
 
நிகழ்வின் இறுதியில் அவ்விடத்திற்கு வருகை தந்த வலிகாமம் வடக்கு பிரதேசசபை உபதலைவர் சுஜீபனும் நிகழ்வில் இணைந்து பொருட்களை வழங்கி நிகழ்வை நிறைவு செய்தனர்..
 
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிறைவுற்ற ஐந்தாண்டுகளில், இருதிபோரில் உயிரிழந்தோருக்கு அதே முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் குழுமி அஞ்சலி செலுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment