June 17, 2016

ஊடகவியலாளர் ப்ரெடி கமகே மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டம்!

ஊடகவியலாளரும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளருமான ப்ரெடி கமகே மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலைக்
கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்குமாறு கோரியும் இன்று மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்துக்கு முன்னராக உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான எம்.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை, த.தே.கூ.வின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஊடகத்துறை அமைச்சருக்கும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் அனுப்பி வைக்கப்படவுள்ள மகஜரில், ஊடகவியலாளர் ப்ரெடி கமகே தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கவும் கோருகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியின் கீழும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டித்துள்ள தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், இது ஊடகவியலாளர்களின் கடமைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதாக நோக்குகின்றது.

இந்த நிலையில், நீர்கொழும்பு மாநகர சபைக்குள் வைத்து ஊடகவியலாளர் ப்ரெடி கமகே கடந்த 2ம் திகதி தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே, இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதுடன், இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்' என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment