May 29, 2016

19 ஆண்டுகளில் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை! இதுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை!

இலங்கையில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை 41 ஊடகவியலாளர்கள் படுகொலை
செய்யப்பட்டுள்ள போதிலும், நியாயமான முறையில் விசாரணைகள் நடைபெற்று இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐ.நடேசனின் நினைவுப்பேருரை நிகழ்வு ஊறணி செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் இன்று (29) நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“எமது நாட்டில் பல ஊடகவியலாளர்கள் தமது பணியில் நடுநிலையாகச் செயற்பட்டு நியாயமான விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்கள். ஆனால், கடந்த கால ஆட்சியாளர்கள் ஊடகவியலாளர்களின் பெரும்பங்கினை மதிக்கத் தவறிவிட்டார்கள்.

ஊடகவியலாளர்களில் பலர் கடத்திக் கொலை செய்யப்பட்டார்கள். ஓர் இனத்தின் அடக்குமுறையினை நியாயமான முறையில் வெளிக்கொண்டுவந்ததன் காரணமாக அந்த காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் வித்தியாசமாக உற்றுநோக்கி அவர்களுக்கு இன்னல்களைச் செய்தார்கள்.

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறுகளை நியாமான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு சென்றதன் காரணமாக 34 தமிழர்கள், 5 சிங்களவர்கள், 2 முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வகையில் நாட்டுப்பற்றாளன் நடேசனும் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

1990 தொடக்கம் 2015 வரை சர்வதேசத்திலே சுமார் 580 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிலே இலங்கை 7 சதவீதத்தைப் பெற்றிருந்தது. துணிகரமாக எமது இனத்துக்கு ஏற்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டுவந்து அதற்கு நீதி கிடைக்க வேண்டும் என பேனாமுனையில் போராடிய நாட்டுப்பற்றாளன் ஊடகவியலாளர் நடேசன். தற்போதயை ஆட்சியிலும் எமது மக்களுக்கு பல பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

எங்கள் மக்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற அநீதிகளை ஊடகவியலாளர்கள் துணிகரமாக வெளிக்கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு செய்திகளும் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment