June 24, 2014

எதிர்வரும் ஐந்து வருடங்கள் என்பது ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழகத்திற்கும், ஈழத்தமிழருக்கும் முக்கியமான காலகட்டம் – பா. நிர்மானுசன்

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையினரால், இனமான இயக்குனர் கௌதமன் தலைமையில் சென்னை ஊடகவியலாளர் அமையத்தில் 19-06-2014 ஊடகவியலாளர் மாநாடொன்று நடாத்தப்பட்டது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழகத்தில் மாணவர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவ தலைவர்கள், அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் இணைத் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன், மனித உரிமை செயற்பாட்டாளரும், சர்வதேச மனிதவுரிமை அமைப்பு பிரேமனின் தலைவருமான விராஜ் மென்டிஸ், அரசறிவியலாளரும் ஊடகவியலாளருமான நிர்மானுசன் பாலசுந்தரம் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக சுகுநேந்திரன் மார்க்கண்டுவும் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்குபற்றிய அரசறிவியலாளரும் ஊடகவியலாளருமான நிர்மானுசன் பாலசுந்தரம் வழங்கிய கருத்துக்களின் விரிவான தொகுப்பு கீழே.
வரலாற்று முக்கியத்துவமான காலகட்டம்
வரலாற்று முக்கியத்துவமான ஒரு காலகட்டத்திலே நாங்கள் சந்திக்கின்றோம். வரலாற்று முக்கியத்துவமான காலகட்டம் என குறிப்பிடுவதற்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவையாக, தமிழ் நாட்டிலே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடரும் அலை. இந்த நகர்வினை கவனத்திற்கொண்டு அதற்கு ஆதரவாக செயற்படும் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் ஈட்டிய மகத்தான வெற்றி. வெற்றிக்குப் பின்னரும், முதலமைச்சர் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனஅழிப்பு தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும், தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை அறிவதற்காக ஐ.நா மேற்பார்வையில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என மத்திய அரசுக்கு விடுத்து வரும் கோரிக்கை போன்றவை இந்த பரிமாணங்களில் முக்கியமானவை.
nirmanusan-cpc-iv
இதேவேளை, இந்தியாவில் இந்திராகாந்தி தலைமையில் மத்தியில் பலமான ஆட்சி உருவான போது, சிறீலங்காவில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் ஒரு பலமான ஆட்சி நிலவியது. அத்தகைய சூழலில் அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒப்பீட்டளவில் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்தது. சுமார் மூன்று தாசப்த காலங்களுக்குப் பின்னர், இந்தியாவிலும் சிறீலங்காவிலும் பலமான ஆட்சியும், ‘இறுக்கமான’ முடிவுகளையும் எடுக்கக்கூடிய தலைவர்களும் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆதலால், எதிர்வரும் ஐந்து வருடங்கள் என்பது ஈழத்தமிழர்களுக்காக போராடும் தமிழகத்திற்கும், ஈழத்தமிழருக்கும் முக்கியமான காலகட்டம். இன்னொருவகையில் கூறுவதானால், இதனை make or break காலகட்டம் எனக் கூறலாம்.
தமிழகத்தின் வகிபாகம்
இத்தகைய தருணத்திலே, ஈழத்தமிழர்கள் நீதியையும், இறையாண்மையையும், உரிமைகளையும் அடைவதற்குரிய செயற்பாடுகளை, இந்திய மத்திய அரசு முன்னெடுப்தற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ள வேண்டும். அதற்குரிய பலத்தை தமிழகம் கொண்டிருப்பதாக நாம் உணர்கிறோம். ஆதலால், அந்த பலத்தையும் வளத்தையும் தமிழகம் அறிவுபூர்வமாகவும் மதிநுட்பத்துடனும் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தின் ஆக்கபூர்வமான நகர்வுகளாலேயே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானதாக மாற்ற முடியும். இந்த பொறுப்பை செய்வதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகளும் அமைப்புகளும் தமக்குள் உள்ள வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பணியாற்றுவதற்காக ஒரு பொதுத் தளத்திற்கு வரவேண்டும் என அன்புரிமையோடு வேண்டிக்கொள்கிறோம். அத்துடன், தமிழகத்தை கடந்து இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களுக்கும் ஈழத்தழிழர்கள் எதிர் நோக்குகின்ற இனஅழிப்பு மற்றும் அவர்களின் போராட்டத்தில் உள்ள நியாயப்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தமிழகம் வினைத்திறனுடன் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.
கடந்த காலங்களில் நீங்கள் புரிந்த அர்த்தம் பொதிந்த செயற்பாடுகள் எமக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. அதற்காக இத் தருணத்தில் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இன்று எங்களுடைய நம்பிக்கையாக நீங்கள் மாறியிருக்கிறீர்கள். எங்களுடைய பலமாக நீங்கள் மாறீயிருக்கிறீர்கள். இந்தவகையில், எமது இருப்பிற்கான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வரலாற்றுப் பொறுப்பும் தார்மீகக் கடமையும் உங்களிடம் உள்ளதாக நாங்கள் எண்ணுகிறோம்.
ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள் போன்றோர் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது எமது இன்னல்களை விரைவாக களைவதோடு, எமக்கு நீதி கிடைப்பதற்கு வழியேற்படுத்தும்.
தமிழர்களின் பலம்
தமிழகத்தினதும், இலங்கைத் தீவீனதும் அமைவிடங்கள் பூகோள அரசியலிலே கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக மாறியிருக்கின்றன. பூகோள அரசியலிலே முக்கியத்துவம் மிக்கதாக திகழும் இந்துசமுத்திரத்தின் இதயப் பகுதியாக தமிழகத்தினதும், இலங்கைத் தீவினதும் அமைவிடங்கள் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. பொருளாதாரமும் பூகோள அரசியலும் உலகின் தலைவிதியை தீர்மானிக்கின்றது. சர்வதேச பொருளாதாரத்தினதும், பூகோள அரசியலினதும் போக்கை தீர்மானிப்பதில் இந்து சமுத்திரம் முக்கியத்துவம் வகிக்கிறது.
ஆதலால், எமது பலத்தையும், பூகோள அரசியலில் பலம் மிக்க நாடுகளினது நலன்களையும் சரிவர எடைபோட்டு எமது முன்னோக்கிய நகர்வுக்கான திட்டங்களை தீட்டி, அவற்றை பொறுப்புடன் அமுல்படுத்த வேண்டும். சவால் மிகுந்த தருணத்திலும், எமக்கான சந்தர்ப்பங்களும் உள்ளது. அதனை சரிவர பயன்படுத்துவதாலேயே, எமது இலக்குகளை எம்மால் வென்றெடுக்க முடியும்.
சமநேரத்தில், மத்தியில் எமக்கிருக்கின்ற சாதக பாதகங்களை ஆராய்ந்து, எமது இலக்குக்கு அமைய காய்களை நகர்த்த வேண்டும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாற்றங்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு மாற்றங்களை உருவாக்கு முடியுமாக இருந்தால், அது ஈழத்தமிழர்களின் இன்னல்களை களையும் திறவுகோலாக மாறும். இதற்காக, மத்தியில் அல்லது மத்தியோடு பயன்மிக்க உறவுகளை பேணக்கூடிய ஈழத்தமிழருக்கு சார்பான சக்திகளை கூட்டிணைத்து பணியாற்ற வேண்டும். மத்தியில் பலமான ஆட்சியில் இருந்தாலும், ராஜ்ய சபாவில் பா.ஜ.கவுக்கு தேவையாகவுள்ள அ.தி.மு.க இன் ஆதரவும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள நட்புறவும் ஒரு சாதகமான விடயம். அதனை ஈழத்தமிழருக்கு ஆதரவாக எவ்வாறு மாற்றுவது என சிந்தித்து செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். வெற்றிகரமாக இந்த விடயங்கள் நகர்த்தப்படுமாக இருந்தால் அது எமக்கான பலமாக மாறும்.
ஈழத்திலே நடப்பது என்ன?
தமிழின அழிப்பை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் சிறீலங்கா அரசு, முள்ளிவாய்க்காலில் மேற்கொண்ட உச்சக்கட்ட இனஅழிப்பிற்குப் பின்னர் நில அபகரிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இராணுவமயமாக்கப்பட்டுள்ள தமிழர் தாயகம் தற்போது சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. இது தமிழர் தாயகத்தின் ஆட்புல ஒருமைப்பாட்டை சிதைக்கும் முகமாக மேற்கொள்ளப்படும் மிக ஆபத்தான நகர்வு. இந்த நகர்வின் விளைவாக கிழக்கு மாகாணத்தின் கணிசமான பகுதிகளை நாங்கள் இழந்துவிட்டோம். மன்னாரிலும் குறிப்பிடத்தக்க பகுதிகளை இழந்து வருகிறோம். வன்னிப் பெருநிலப்பரப்பிலும் அந்த நிலை தொடங்கியாயிற்று. யாழ்ப்பாணத்தில் அதற்கான அடி எடுத்து வைக்கப்பட்டாயிற்று.
சிங்கள இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதற்காக, சிங்கள இராணுத்தினர் மூன்றாவது பிள்ளைகளை பெற்றால் சன்மானத்தை வழங்கும் சிறீலங்கா அரசு, தமிழ் பெண்களுக்கு மத்தியிலே கட்டாய கருத்தடை செயற்பாடுகளை அரங்கேற்றி வருகிறது.
தமிழர்களின் இருப்பை நிர்மூலமாக்குவதற்காக தமிழர்களின் பண்பாட்டை சீர்குலைத்து, அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
மரணித்தவர்களை நினைவுகூருவதற்கான எமது உரிமை மறுக்கப்பட்டுள்ள சூழலிலே, தமிழர் தாயகத்தில் சிங்களவர்கள் வெற்றிக் கொண்டாடங்களிலும் கேளிக்கை நிகழ்வுகளிலும் திளைத்துள்ளனர்.
நாங்கள் எந்த பண்பாட்டுக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும், எதிரானவர்களோ, அச்சுறுத்தலானவர்களோ அல்ல. நாங்கள் அவற்றை மதிக்கிறோம். அதேவேளை, நாங்கள் எங்கள் மண்ணில் சுதந்திரமாக, நிம்மதியாக, கௌரவமாக, எங்களுக்கான உரிமையோடும் இறைமையோடும் வாழ விரும்புகிறோம். அது மறுக்கப்படும் போது, நாங்கள் போராட நிர்ப்பந்திக்கப்படுகிறோம். ஆயுதப் போராட்டம் என்பது இன்று ஈழத்திலில்லை. ஆனால், நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை அடக்குமுறையாளர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழர்கள் மட்டும்தான தமிழீழத்தை கேட்கிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலைப்பாடு என்ன?
தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் எமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படையாக தெரிவிப்பதற்கான சூழல் காணப்படுகிறது. ஆனால், ஈழத்திலே அவ்வாறான சூழல் இல்லை. ஈழம் திறந்த வெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கே இராணுவ ஆட்சி நடக்கிறது. சிறீலங்காவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, தமிழீழ விடுதலை தொடர்பாக பேசுவோர் கைதுசெய்யப்படலாம். ஏன் காணமல் போகலாம் அல்லது படுகொலை செய்யப்படலாம்.
ஆனால், தமக்குள்ள அரசியல் வெளி கிடைத்தபோது, தமக்கிருந்த சனநாய உரிமையை பயன்படுத்தி தமது அரசியல் அபிலாசைகளை மக்கள் சர்சதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்தகைய ஒன்றாகவே செப்டெம்பர் 2013 இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை பார்க்கமுடியும். 13ஆவது திருத்த சட்டமோ, மாகாண சபையோ தமிழ்மக்களின் போராட்டத்துக்கு தீர்வாக ஒரு காலமும் அமையப் போவதில்லையெனத் தெரிந்துகொண்டும் மக்கள் வாக்களித்தார்கள். ஏனெனில், நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிர்ணயம், எமது நிலம் எமக்கு வேண்டும், 30 வருட தியாகங்கள் வீண்போகக்கூடாது என்றே தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கியது. இதன் பிரகாரம் அவர்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியடையச் செய்யப்பட்டார்கள்.
தமது அரசியல் அபிலாசைகளை எந்தவித அச்சமுமின்றி வெளிப்படுத்தக்கூடிய சுதந்திரமான சூழல் உருவாகும் போது, வாக்குகள் மூலமும் இரகசியமாகவும் சொன்ன, சொல்கின்ற செய்திகளை பகிரங்கமாகவே தாயகத்தில் வாழும் எங்கள் மக்கள் கூறுவார்கள்.
 

No comments:

Post a Comment