August 4, 2016

வற் வரி திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க அழைக்கிறது ஜேவிபி!

மக்கள் மீது மேலும் வரிச்சுமையை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் வற் வரித் திருத்தம் குறித்த சட்டமூலத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சகலரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.


 
வற்வரி திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளது. நேரடி வரியைவிட மறைமுக வரியை அதிகரித்து வரி முறையில் குழப்பத்தை உண்டுபண்ணியிருக்கும் அரசாங்கம், மேலும் மக்களின் வரிச்சுமையை அதிகரிக்கும் வகையில் கொண்டுவரும் வற்வரி திருத்தச்சட்ட மூலத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எம்பிக்கள் எவரும் ஆதரிக்க முடியாது. சகலரும் இணைந்து இதனை தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறான நிலையில் மக்களின் கஷ்டங்களுக்கு குரல் கொடுக்கும் எம்பிக்கள் யார்? மக்களின் பிரதிநிதிகள் யார் என்பதை எதிர்வரும் 11ஆம் திகதி அறிந்துகொள்ள முடியும். பாராளுமன்றத்துக்கு வெளியே வீரர்கள் போல குரல் எழுப்புவதில் அர்த்தமில்லை அதேநேரம், இந்த வரித்திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்பதன் ஊடாக மாத்திரம் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டுவிட முடியாது. சுமார் 68 வருடங்களுக்கு மேலாக மாறிமாறி ஆட்சிக்குவரும் கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நிலைமையை மக்கள் தோற்கடிப்பதன் ஊடாகவே தற்பொழுது காணப்படும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே பொதுவான வற்வரி எதிர்ப்புக்கு அப்பால் சென்று தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் சமூக பொருளாதார நடைமுறைக்கு எதிராகப் போராட மக்கள் சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜே.வி.பியின் தலைவர் அழைப்புவிடுத்தார்.

No comments:

Post a Comment