August 6, 2016

இராணுவம் சூழ்ந்திருந்தால் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான சூழல் எப்படி ஏற்படும்?

சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டு வருவதற்கான சூழல் வடமாகாணத்தில் ஏற்படவில்லை.
அவ்வாறான சூழல் இல்லாத போது எவ்வாறு சமாதானத்தினைக் கொண்டு வர யோசிக்கின்றீர்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி யோடி கரஸ்கோ முனாஸிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி யோடி கரஸ்கோ முனாஸ் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சரை முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

சந்திப்பின் போது, இலங்கையில் சமாதானம் குறித்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை ஆராயவும், எந்தளவில் சர்வதேச நாடுகள் உதவியாக இருக்க முடியுமென்பதனை அறிந்து கொள்ளவும் வருகை தந்திருப்பதாக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முதலமைச்சர் பதிலளிக்கையில், புரிந்துணர்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதனை சுட்டிக் காட்டினேன்.

தான்தோன்றித்தனமாக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டதே தவிர, வடமாகாண பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து நடைபெறவில்லை. சமாதானம் ஏற்படுத்துவதற்கு முன்னர் அடிப்படை சூழல் இருக்க வேண்டும். அந்த சூழல் ஏற்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினேன்.

தென்னாபிரிக்காவில் அரசியல் ரீதியான பிரச்சினைகளைத் தீர்வுக்கு கொண்டு வந்ததன் பின்னர் தான், நல்லிணக்கம் சம்பந்தமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அவ்வாறு செய்தால் மாத்திரமே மக்கள் இணைந்து செயற்பட தயாராகுவார்கள். வடமாகாணத்தில் அவ்வாறானதொரு சூழல் இருக்கவில்லை. 1 லட்சத்திற்கு குறைவான இராணுவத்தினர் வடமாகாணத்தில் இருக்கின்றார்கள். மக்களின் காணிகள் இராணுவத்தினர் வசம் இருக்கின்றது. இன்னும் மக்கள் நலன்புரி முகாம்களில் வசிக்கின்றார்கள். வாழ்வாதாரங்கள் மற்றும் மீன்பிடி தொழில்கள் தடைபடுகின்றன. வளங்கள் சூரையாடப்படுகின்றன என்று பல குறைகளையும் சுட்டிக் காட்டினேன்.

இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் கொண்டுவரப் போகின்றீர்கள் என்று யோசியுங்கள் என கேள்வி எழுப்பியபோது, அதனை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறான நிலமைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் யாப்பின் ஊடாக நல்லிணத்தினைக் கொண்டு வர முடியுமா? என அவர் கேள்வி எழுப்பினார். வடமாகாண மக்களின் சார்பாக பல முன்மொழிவுகளை வழங்கியிருக்கின்றோம். அதில் சமஷ்டி என்பதனை வலியுறுததி கூறியிருக்கின்றோம். சுயாட்சி என்ற அடிப்படையில் தீர்வினை எட்ட முடியாதா? என்ற கேள்வியை எழுப்பினார்.

எதுவாக இருந்தாலும், எம்மை நாமே ஆளும் அரசியல் யாப்பு ஒன்றே எமக்குத் தேவை, அதற்கு ஏற்ற வகையில் இருந்தால், நன்மை பயக்கும்.

ஆனால், சட்ட ரீதியாக சமஷ்டிக்கு பல வியாக்கியானங்களை வேறு விதத்தில் கொடுக்க முனைந்தால், அதனை ஏற்றுக்கொள்ளாமல், நீதிமன்றங்கள் வேறு வியாக்கியானங்களைக் கொடுக்க கூடும் என அவருக்கு சுட்டிக் காட்டியபோது அவற்றினை ஏற்றுக்கொண்ட அவர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மீண்டும் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கூறிச் சென்றுள்ளார் என முதலமைச்சர் மேலும் கூறினார். 

No comments:

Post a Comment